ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தின் அஸ்திவாரம் சுமார் 500ஆண்டுகள் பழமையானது. 1980ம் ஆண்டு அப்போதைய அகோபிலமடத்தின் 44வது பட்டம் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் கட்டுவித்தார். இந்த கட்டுமானப்பணிகளை ஜீயர் சுவாமிகள் தானே நேரடிமேற்பார்வையிட்டு நடத்தினார், கலைமாமணி விருது பெற்ற சிவப்பிரகாசம் ஸ்தபதி தலைமையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இதில் உள்ள 13 நிலைகளுக்கும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்பட நன்கொடையாளர்கள் பலர் நிதி உதவி செய்துள்ளனர். கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த பின் கல்கார அஸ்திவாரத்துடன் (22+214) 236 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு 1987ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் முன்னிலையில் மகாசம்ப்ரோக்ஷ்ணம் நடந்தது. அடுத்து கடந்த 2001ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முழுஅளவில் திருப்பணிகள் நடந்தபோது இந்த ராஜகோபுரத்திலும் முழு அளவில் மராமத்து செய்து வர்ணம் போன்றவை பூசப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோயில் கோபுரம் என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் கூறப்பட்டது, அடுத்து மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர ஆய்வுகளின்படி உலகிலேயே உயரமான கோயில் கோபுரம் ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நமது நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் இந்த கோபுரம் சுற்றுலா முக்கியத்துவத்துடன் ஆன்மிக முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டி கம்பீரமாய் பார்ப்பவர் கண்களையும், மனங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் நிமிர்ந்து நிற்கிறது.