ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் வருவதே பெரிய ரங்கவிலாச மண்டபம். இருவழிப்பாதை முறையை அன்றே அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் நடுவே எழில்மிகு சிறிய மண்டபம் இருக்கிறது. இதில் உற்சவ நாட்களில் நம்பெருமாள் எழுந்தருளி உபயங்கள் கண்டருள்கிறார். இந்த நான்குகால் மண்டபத்திற்கு வடக்கில் கல்பலிபீடமும், பெரிய கல் கொடிமரமும் இருக்கின்றன. மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் குழந்தைகளை மகிழ்விக்கும் பலதரப்பட்ட பொம்மைகள் விற்கும் கடைகளும் உள்ளன, இங்கு பூஜைக்குரிய படங்கள் மறறும் பாத்திரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மண்டபத்தின் மேற்குப்புறம் உள் ஆண்டாள் சன்னதியும், அதையடுத்து வேணுகோபாலன் சன்னதியும், இந்த சன்னதிகளுக்கு வடக்கே விழாநாட்களில் பெருமாள் வாகனங்களில் எழுந்தருள வசதியாக நிர்மானிக்கப்பட்ட வாகன மண்டபமும், அதன் பின்பகுதியில் அமிர்த கலசகருடன் சன்னதியும் அமைந்துள்ளன. ரங்கவிலாச மண்டபத்தின் கீழ் பகுதியில் கடைகளுக்கிடையே திருப்பாணாழ்வார்-வீர ஆஞ்சநேயர்சன்னதியும், விட்டல கிருஷ்ணன் சன்னதியும் உள்ளன.