தாயார் சன்னதி எதிரிலிருக்கும் நான்கு கால் மண்டபமே கம்பர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்திலிருந்துதான் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றினார் என்பது அந்த மண்டத்திலேயே போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. கம்பர் தனது ராமாயணத்தை இங்கு படித்து அரங்கேற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்தபோது சில உள்ளூர்க்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பின்னர் பெருமாளின் அருளாணைப்படி அங்கு ராமாயணம் அரங்கேறியதாகவும் சொல்லப்படுகிறது. கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றும்போது அதில் நல்ல பகுதிகள் வந்தபோது, அருகில் உள்ள மேடையில் இருந்த நரசிம்மர் கைதட்டி ஆரவாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் அந்த மேட்டழகிய நரசிம்மரை நாம் தாயார் சன்னதி மற்றும் கம்பர் மண்டபத்தின் அருகே சேவிக்கலாம்.