ஒரு யாத்திரைத் தலத்தின் முக்கியத்துவம் மூன்று அடிப்படை விஷயங்களைக் கொண்டிருக்கும், அவை மூர்த்தி, தலம், தீர்த்தம் எனப்படுபவையாகும். இவ்வகையில் ஸ்ரீரங்கத்தின் மூர்த்தியாகிய
ரெங்கநாதருக்கு அறிமுகம் தேவையில்லை, அடுத்தது தலம், இது வைணவத்திருத்தலங்களில் தலையாயது என்பதால் தலத்திலும் முதன்மை பெற்று விளங்குகிறது. இறுதியாக தீர்த்தம். ஸ்ரீரங்கத்திற்கு
தெற்கில் காவிரியும் வடக்கில் கொள்ளிடமும் உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். இவை இரண்டும், ஆண்டு முழுவதும் வற்றாத நிலையைக் கொண்ட ஜீவநதிகள் என்பது நாம் எல்லோரும் அறிந்தது
என்றாலும். ஸ்ரீரங்கத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. தேவேந்திரனின் அமராவதி பட்டனத்தில் ஓடும் விரஜை நதியின்கிளை ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பிரவாகமெடுத்து வருகிறது என்பது நம்மில்
சிலருக்கும் மட்டுமே தெரியும். இந்த விரஜாநதி தீர்த்தக்கிணற்றை ரங்கநாதர் சன்னதியை வலம் வரும்போது, இரண்டாம் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய ஒரு
கிணற்றை நாம் இன்றும் காணலாம். இந்த கிணற்றில்தான் தேவலோக நதியான விரஜையின் நீர் ஊறுகிறது என்பது நம்மை வியக்க வைக்கச் செய்யும் செய்தி. “காவேரி விரஜா சேயம், வைகுந்தம் ரங்க
மந்திரம்” என்ற வரிகள் ஸ்ரீரங்கம் மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதிலிருந்து இதை நாம் உணரமுடிகிறது.
இதுதவிர ஸ்ரீரங்கத்தைச் சுற்றிலும் ஏராளளான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவை பற்றிய சிறு குறிப்பை இங்கே காணலாம்:
தீர்த்தங்கள்
1. சந்திரபுஷ்கரணி : திருவரங்கம் கோயிலினுள் நான்காம் திருச்சுற்றில் உள்ளது.
2. வகுள தீர்த்தம் : இராணி மங்கம்மாள் மண்டபம், சென்னை திருச்சி நெடுஞ்சாலை, திருவானைக்கோவில், வெளிப்பிரகார மதிலுக்கு வடக்கில் உள்ளது.
3. சம்பு தீர்த்தம் : திருவானைக்கோயிலினுள் உள்ளது.
4. அசுவ தீர்த்தம் : திருவரங்கம் பேருந்துகள் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
5. பலாச தீர்த்தம் : ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம்
6. புன்னாக தீர்த்தம் : மேலூர் விருட்சி மண்டபம்
7. பில்வ தீர்த்தம் : திருவாசி, திருச்சி-சேலம் நெடுஞ்சாலை இதுவே குணசீலமாக மாறியிருக்கலாம்.
8. கதம்ப தீர்த்தம் : பிச்சாண்டார் கோயில், உத்தமர் கோயில் கிழக்கில்
9. ஆம்பர தீர்த்தம் : திருச்சி -லால்குடி பேருந்து பாதையில் தாளக்குடி ஆஸ்தான மண்டபம்
சந்திரபுஷ்கரணியைச் சுற்றி எட்டுத் தீர்த்தங்கள் விளங்குகின்றன. அதுவன்றி
10. தென்திருக்காவிரி : அம்மாமண்டபம் படித்துறை
11. வடதிருக்காவிரி : கொள்ளிடம் திருமங்கை மன்னன் படித்துறை ஆகியவையும் இங்கு தீர்த்தங்களாக கருதப்படும்.