மன்னர்கள் முதல் மனிதர்கள் வரை அவர்களின் அந்தந்தஸ்தை வெளிப்படுத்தும் முக்கியமான அம்சம் அவர்களுக்குச் சொந்தமான வாகனங்களாகும். சைக்கிளில் தொடங்கி பைக், கார் என்றுஇது மாறுபட்டாலும், இது வைத்திருப்பவரின் வாழ்க்கை தரத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இவ்வகையில் சமுதாயத்தில் மிகப்பெரும் செல்வந்தர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் மகாவிஷ்ணுவோ, கருடனையே பிரதான வாகனமாக் கொண்டிருக்கிறார். இது தவிர ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் போது தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் உற்சவர் நம்பெருமாள், யானை, குதிரை, ஹம்சம், யாளி, அனுமந்தம், சூரியபிறை, சந்திரபிறை, கற்பக விருக்ஷ்ம், சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இவ்வகையில் பெருமாளுக்கு பல்வேறு வாகனங்கள் இருப்பது அவரின் ராஜ அந்தஸ்தஸ்தையே குறிக்கிறது. இந்த வாகனங்களில் சில பிராணப்பிரதிஷ்டை எனப்படும் உயிரூட்டம் பெற்றவை. இதற்கு எடுத்துக்காட்டாக கருட வாகனப்புறப்பாட்டின்போது அமிர்தகலசம் எனப்படும் கொழுக்கட்டையும், குதிரை வாகனப்புறப்பாட்டின்போது கொள்ளுச்சுண்டலும் அமுது செய்விக்கப்படுவதை இன்றும் காணலாம்.