சென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா பிரசித்தம். சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் சிவன் மற்றும் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வங்கள் என அடம் பிடித்தனர். இதுகுறித்து அம்பிகையிடம் முறையிட்டனர். சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில், அன்னை பார்வதிதேவி பூலோகத்திலுள்ள புன்னை வனத்துக்கு வந்தாள். சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தர வேண்டும் என வேண்டி ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று கடும் தவம் செய்தாள். அவளது இந்த திருக்கோலம் காண தேவர்களெல்லாம் பசுக்களின் வடிவில் வந்து தங்கினர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்மாள் எனப்பட்டாள். அம்பாளே பூமிக்கு வந்துவிட்டதால், அவளது திருமுகம் மதி (நிலா) போல் பிரகாசித்தது. அமாவாசை எப்போது என்று கூட அறிய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவளுக்கு கோமதி என்ற பெயரும் தேவர்களால் சூட்டப் பட்டது. மதி என்றால் புத்தி என்றும் அர்த்தம். ஒரு ஊசியின் மேல் ஒற்றைக்காலில் நிற்க வேண்டுமானால், எந்தளவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும்! இப்படி புத்திசாலித்தனத்தில் கோ (தலைவி) ஆக இருந்ததாலும், இவள் கோமதி எனப்பட்டாள். தவம் என்ற சொல்லை தபஸ் என்று சொல்வர். இதுவே பேச்சுவழக்கில் தபசு, தவசு என்று மாறிவிட்டது.