நமது வாழ்க்கை பாதை தெரியாத பயணம். இன்று இப்படி இருக்கிறோம். நாளை என்ன செய்வோம், எப்படி இருப்போம் என்பது அந்த சிவபெருமானுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் இருட்டு பாதையில் பயணிக்க நமக்கு கிடைத்த விளக்குதான் பக்தி. அந்த பக்தியை சிலர் ஆடம்பரமாக செய்கின்றனர். இதை தவறு என்று சொல்லமுடியாது. ஏனெனில் அவர்களுக்கு முடிந்ததால் செய்கிறார்கள். இதைப்பார்த்து பலரும், ‘இதுபோல் எங்களால் செய்ய முடியவில்லையே’ என வருத்தப்படுகின்றனர். உண்மையில் இப்படி செய்தால்தான் சிவபெருமானின் அருளை பெற முடியுமா என்றால்.. இல்லை. கீழே சொல்லப்பட்டுள்ள செயல்களை செய்தால் போதும் என்கிறார் திருமூலர்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே
தினமும் கடவுளுக்கு ஏதேனும் ஒரு பச்சிலையால் அர்ச்சனை செய்யுங்கள். அப்படி இல்லையெனில் பசுவிற்கு ஒரு வாயளவாவது சாப்பிட கொடுக்கலாம். அதுவும் முடியவில்லையெனில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கலாம். சரி இதையெல்லாம் செய்ய வாய்ப்பில்லை. என்ன செய்யலாம். எல்லோரிடமும் இனிமையான வார்த்தைகளையும், நம்பிக்கை தரும்படியும் பேசலாம். இந்த எளிய வழிபாட்டை செய்தால், உங்களது முன்வினை பாவம் தீரும்.