பதிவு செய்த நாள்
19
செப்
2022
08:09
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷ புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி நாளாகும். கடந்த எட்டு நாட்களாக மஹாளய பக்ஷம் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் .
மாஹாளைய பக்ஷத்தில் ஒன்பதாம் நாளான அவிதவா நவமியிலும் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். இந்தச் சுமங்கலி பிரார்த்தனை சிராத்தத்திற்கு சமமானது.நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்க ளான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.
சுமங்கலி பிரார்த்தனை: சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது. நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல கணவரை அடைந்து கணவரின் கோபதாபங்களையும் குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தைத் தூணாக நின்று காப்பாற்றி அனைவரையும் ஒன்றிணைத்து, முக்கியமாக நமது கலாசாரத்தையும், வைதீக தர்மங்களையும், ஸம்ப்ரதாயங்களையும் கடைப்பிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள். இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டு மாகப் பரமபதம் அடைவது. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக இறந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு சிராத்தத்திற்கு மறுநாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்யப்பட வேண்டும்.
பிராமண குடும்பங்களில் இன்றளவும் "மங்கலிப் பொண்டுகள்" என்றழைக்கப் படும் சுமங்கலி ப்ரார்தனையை குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்கள் முன்னர் செய்வது வழக்கம். சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள். மஹாளய பக்ஷத்திலும் அவிதவா நவமி நாள் சுமங்கலியாக இறந்தவர்களுக்காக வஸ்த்ரம் கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும். தனது கணவருக்கு முன்போ அல்லது தனது கணவருடன் சேர்ந்தோ இறந்து போன சுமங்கலிகளின் திருப்திக்காக சுவாஸினி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு ஆசீர்வாதம் பெற வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஜாதகத்தில் களத்திர தோஷமும் மாங்கல்ய தோஷமும் கொண்ட பெண்கள் சுமங்கலி பிரார்த்தனை வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். சுமங்கலி வழிபாட்டை, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், மகள் போன்ற உறவுகளை, முக்கியமாக உட்கார வைக்க வேண்டும். சொந்தமல்லாதவேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஏழு அல்லது எட்டு வயது பெண் குழந்தை, சுமங்கலிகளுடன் உட்கார வைப்பது சிறப்பு. சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போட வேண்டும். வழிபாட்டில் உட்காரும் பெண்கள் சாப்பிட்டு முடித்த பின், அவர்களுக்கு நலங்கு இட்டு நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் தாம்பூலத்தில், மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி ஆகியவற்றை வழங்க வேண்டும். முடிந்தவர்கள், புடவை, அல்லது ரவிக்கை துணி வழங்குவது சிறப்பு. மருதாணி,போன்ற மங்கலப் பொருட்களை வழங்குவதும் சிறப்பு. மஹாளய பட்சத்தில் நவமி நிதியில் சுமங்கலி வழிபாடு செய்தால், வீட்டில், மஹாலட்சுமி நித்யம் வாசம் செய்யும் அருள் கிடைக்கும். இன்று நவமி திதி இன்று இதை செய்ய முடியாதவர்கள், அமாவாசை அன்றோ, வரும் நவராத்திரியில் ஓர் நாளோ செய்யலாம்.