முருகனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பாம்பன்சுவாமிகள். முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் இவர். இவரது சண்முக கவசம் என்னும் நுால் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. சென்னையில் வாழ்ந்த காலத்தில் சுவாமிகள் ஒருநாள் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த குதிரைவண்டி மோதியதில் அவரது இடது கால் ஒடிந்தது. 73 வயதில் விபத்து ஏற்பட்டுள்ளதால் இனி சுவாமிகள் நடக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சுவாமிகளின் மீது அன்பு கொண்ட பக்தர்கள் சிலர், முருகப்பெருமானின் அருளால் குணம் பெற வேண்டும் என சண்முக கவசத்தை படித்து வந்தனர். மருத்துவர்களே ஆச்சரியப்படும்படி சுவாமிகளின் கால் குணம் பெற்றது. இதன் அறிகுறியாக வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்தாடியதை சுவாமிகள் கண்டார். தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துக்கள் 18ஐ முதல் எழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் இந்த நுாலில் உள்ளன. இதை தினமும் ஆறுமுறை பாடுவோருக்கு மனநலம், உடல்நலம் சிறக்கும். கந்தசஷ்டி விரத காலத்தில் பாடினால் கைமேல் பலன் கிடைக்கும்.