பதிவு செய்த நாள்
17
ஜன
2023
03:01
அசுவினி: சனி பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் - கேது அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் சில காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதில் தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
அரசு வகையில் சலுகை கிடைக்கும். இதுவரை ஏற்பட்ட சோதனைகளும் வேதனைகளும் மறையும். பகை பாராட்டிய உற்றார், உறவினர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவர். பிள்ளைகள் உங்கள் மீது பாசத்தைப் பொழிவர். பாகப்பிரிவினை போன்ற விஷயங்களில் மனசாட்சியின்படி நடந்து கொள்வீர்கள்.
ஆன்மிக பலத்தால் மனநிறைவு அடைவீர்கள். கொள்கைப் பிடிப்புடன் செயலாற்றுவீர்கள். மிரட்டல்களுக்கு பயப்படாமல் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உடல்நலத்துடன் இருக்க உடற்பயிற்சி, தியானம் செய்வது அவசியம். குடும்பத்தினருடன் சுப விசேஷங்களில் பங்கேற்பீர்கள். உங்களின் அறிவால் மற்றவர்களின் மனப்போக்கை புரிந்து கொள்வீர்கள்.
பொருளாதார நிலையில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள். வராக்கடன் வந்து சேரும். பெற்றோரால் நன்மை கிடைக்கும். தோல் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். தர்மப்பணிகளில் ஈடுபடுவீர்கள்.
பிறரது குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்துவீர்கள். இளைய சகோதரர்களின் அதிருப்திருக்கு ஆளாவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரியோர் அறிமுகம் உண்டாகும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் ஆதரவாக நடந்து கொள்வர்.
பணியாளர்கள் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்களிடம் முக்கிய வேலைகளை ஒப்படைப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் நட்புடன் பழகுவீர்கள். அதேநேரம் அனாவசியப் பதட்டமும் இருக்கும்.
வியாபாரிகளுக்கு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். பழைய கடன் அடைபடும். எதிர்பார்த்ததற்கும் மேலாக லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடப்பர். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வையால் பொறுப்புகளையும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். மறைமுக எதிரிகள் அடங்குவர். அதேநேரம் தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். பேச்சில் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும், விருதுகளும் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வீண் செலவு செய்ய வேண்டாம்.
பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவரின் அன்பைப் பெறுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவருடனும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வீண் விஷயங்களுக்காக நண்பர்களுடன் சண்டை வேண்டாம். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு
+ குடும்பத்தில் சுபநிகழ்ச்சி
- மனதில் தடுமாற்றம்
பரணி: சனிபகவான் உங்களின் இருபத்தி இரண்டு நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய், சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் பிறருக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தாருடன் பேசும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.
சுபநிகழ்ச்சி எளிதில் நடந்தேறும். புதிய நண்பர்கள் உங்களை நாடி வந்து நட்பு கொள்வர். அனைத்து விஷயங்களிலும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உண்மைகளை உறுதியாக எடுத்துரைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பதற்கான வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு திடீர் திருமண யோகம் உண்டாகும்.
மனதில் இருந்த கவலை மறையும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். செல்வாக்கு பெறுவீர்கள். பணம் தாராளமாகப் புரளும். புதிய பதவி தேடி வரும். பதவிகள் வேண்டாம் என தள்ளினாலும் உங்களிடம் தானாகவே பதவி வந்து சேரும் காலகட்டம் இது.
தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆன்மிகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். சாந்தமாக செயல்பட்டு உங்களின் நல்ல குணத்தை வெளிப்படுத்துவீர்கள். பணப்பற்றாக்குறை இருக்காது. பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும்.
அதே நேரம் வீண் வம்பு, சண்டைகளில் ஈடுபட வேண்டாம். அனாவசிய சட்டச் சிக்கல்களிலிருந்தும் தள்ளி இருக்கவும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள்வர். பூர்வீகச் சொத்து வழியில் இருந்த பிரச்னை மறைந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பெரிய கடன் சுமைகள் ஏற்படாத வண்ணம் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தந்தையின் தொழில் நல்ல முறையில் நடக்கும். அவருக்கும் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
மூத்த சகோதர சகோதரிகளுக்கு இடர்பாடுகள் உண்டாகும். அதனால் அவர்களின் தேவையறிந்து உதவுவது நல்லது.
பணியாளர்கள் தடைகள் விலகும். அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். அதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்கு வேலை கிடைக்கும். அலுவலக ரீதியான பயணம் மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் முனைப்புடன் வியாபாரம் செய்வீர்கள். லாப இலக்குகளை எட்டுவீர்கள். கூட்டாளிகளும், நண்பர்களும் ஒத்துழைப்புடன் இருப்பர். கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி வியாபாரத்தை விரிவுபடுத்தவும். பழைய கடன் பாக்கி அடைபடும்.
அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் மூலமாகவே இடையூறு உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர். அதே நேரம் யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் திருப்தி அடைவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். ரசிகர்களின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள்.
பெண்களுக்கு கணவரிடம் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர சகோதரி உறவில் இருந்த விரிசல் மறையும். உடல் உபாதைகளால் பாதிப்புகள் ஏற்படாது.
மாணவர்கள் முதலிடத்தைப் பெறுவீர்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள். விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: துர்கை வழிபாடு
+ தொழிலில் முன்னேற்றம்
- புதிய நபர்களிடம் கவனம்
கார்த்திகை: சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியனுடைய அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.
உங்களின் சுய முயற்சியால் திட்டமிட்டதை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு ஊருக்கு சென்று வசிக்க நேரிடலாம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமையான பலன்களைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உயர்ந்தோரிடம் பணிவுடன் நடந்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அதேநேரம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் சமயத்தில் தவறான கருத்தை மனமறிந்து சொல்ல வேண்டாம். உங்களின் ஆலோசனைகள் பலரை மாற்றும் காலகட்டம் இது.
உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உதவுவீர்கள். குரு, மகான்களின் ஆசி கிடைக்கும். நேர்முக சிந்தனை அதிகரிக்கும். அதேநேரம் உங்களைப் பற்றி தற்பெருமை பேசுவீர்கள். மறைமுக எதிர்ப்பு ஏற்படும். குழந்தைகள் உங்களின் சொல் பேச்சு கேட்காமல் நடந்துகொள்வார்கள்.
வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பாராமலேயே நடந்தேறும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே இருக்கும் பிரச்னைகளில் தலையிடாமல் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள். எதிர்வரும் சோதனைகள் தானாகவே விலகும்.
அவ்வப்போது உங்களின் தன்னம்பிக்கை குறையும். எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை பயம் உண்டாகும். தொழிலை சிறப்பான முறையில் செய்வீர்கள். ஆனாலும் சகோதர, சகோதரிகளின் எதிர்ப்புக்கு ஆளாகலாம்.
பணியாளர்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாது.
வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக் கடன் என நினைத்தது திரும்பி வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். அதேநேரம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். நல்லவர்கள் கூட்டாளிகளாக அமைவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு இருந்தாலும் புதிய பொறுப்பை பெற முடியாது. அதேசமயம் உங்கள் மீதான வழக்குகள் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களின் ஆதரவு நன்றாகவே இருக்கும்.
கலைத்துறையினருக்கு புகழோடு பணவரவும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்கும். ரசிகர்கள் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.
பெண்கள் தங்களின் எண்ணங்களை சிறப்புடன் செயல்படுத்துவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.
மாணவர்கள் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு நன்றாகவே இருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடவும்.
பரிகாரம்: முருகன் வழிபாடு
+ நண்பரால் நன்மை
- முயற்சியில் தாமதம்