பதிவு செய்த நாள்
17
ஜன
2023
03:01
மகம்: சனி பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் - கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம் கவனம் தேவை.
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடி வரும். நினைத்திருந்த விஷயங்கள் உங்கள் வாசல் தேடி வந்து உங்களை குதூகலப்படுத்தும். அரசாங்கத்தில் உங்கள் கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிக்கப்படும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். குடும்பத்தாருடன் விருந்தோம்பலில் கலந்து கொள்வீர்கள். ஒரு குடும்பப் பிரச்னையில் உங்கள் மீது ஏற்பட்ட அவச்சொல் நீங்கும்.
நீங்கள் சார்ந்துள்ள துறையில் பிரபலமடைவீர்கள். உயர்ந்தவர்களை சந்தித்து அவர்களின் மூலம் முக்கிய விஷயமொன்றுக்கு தீர்வு காண்பீர்கள். இதற்கு நண்பர் துணை புரிவார். வருவாய் உயரக் காண்பீர்கள். நீண்ட நாளாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு உயில் சாசனம் மூலம் சொத்துக்கள் கிடைக்கும். அதேநேரம் புதியவர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. அதோடு உங்களின் தனிப்பட்ட ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியம்.
கை நழுவிப்போன பழைய ஒப்பந்தங்களும், பொறுப்புகளும் வந்து சேரும். வாராக் கடன்கள் வசூலாகும். சிறு விஷயங்களுக்குக் கூட முன் கோபப்பட்ட நீங்கள் அமைதியான சூழ்நிலைக்கு மாறுவீர்கள். தெய்வீக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மற்றபடி அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். எவரிடமும் வீண் விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். சட்டச் சிக்கல்களிலிருந்து தள்ளி இருக்கவும்.
பணியாளர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடிவடையும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைக்கும். பயணங்களாலும் நன்மை அடைவீர்கள்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருப்போர் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சிலர் வழக்குகளை சந்திக்க நேரிடும்.
அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்கட்சியினரை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். அதேநேரம் எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.
பெண்கள் நிம்மதியைக் காண்பீர்கள். உடல்நிலை சிறப்பாக அமையும். வருமானம் திருப்தியாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீர்கள்.
மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் தேவைகளைப் பெற்றோர் நிறைவேற்றுவார்கள். நண்பர்களின் ஆதரவு உண்டு. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
+ தொழிலில் அமோக லாபம்
- வாகன பயணத்தில் கவனம்
பூரம்: சனி பகவான் உங்களின் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் - சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் உங்கள் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் தலையீட்டால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.
மற்றவர்களுக்கு உதவி செய்து உங்கள் புகழை உயர்த்திக் கொள்வீர்கள். பல்வேறு செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் பல்வேறு திறமைகள் வெளிப்படும். பன்முகத் திறமை கொண்டவராகத் திகழ்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வழியில் இருந்த தடைகள் விலகும். சுப நிகழ்ச்சிகளுக்காக குடும்பத்தாருடன் வெளியூருக்கு செல்வீர்கள். தந்தைவழி உறவுகளில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். அதோடு பொதுநலக் காரியங்களில் உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருக்கவும்.
பழுதடைந்த வாகனங்கள் நல்ல முறையில் ஓடத் தொடங்கும். மாமன் வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுக நிலை ஏற்படும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்திற்கு பொலிவூட்டுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தனை செய்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். சகோதர, சகோதரிகளுக்கிடையே நிலவிய மன வேறுபாடுகள் மறையும். மற்றபடி எதிர்வரும் எந்த வாய்ப்பையும் தவிர்க்க வேண்டாம்.
பண வருவாய் இரட்டிப்பாகும். தாமதமாக நடந்த நிகழ்ச்சிகள் துரிதமாக நடக்கும். பயணங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் அகன்று அமைதி நிறையும். ஆன்மிக, தர்ம காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து மனஅமைதி பெறுவீர்கள். பிள்ளைகளால் குடும்ப கவுரவம் உயரும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சலுகை, உதவிகளை பெறுவீர்கள். புதிய முயற்சிகளைத் தெளிந்த மனத்துடன் செயலாக்குவீர்கள். உழைப்பிற்குத் தகுந்த பெருமை அடைவீர்கள். பெரியோர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருப்பீர்கள்.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பழைய சட்டப் பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு வருமானம் நல்ல முறையில் வந்தாலும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். எனவே பொறுப்புடன் நடந்துகொள்ளவும். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். விரைவாக விற்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்யவும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் மாற்றுக் கட்சியினரையும் கவர்வீர்கள். தொண்டர்கள் உங்களுக்குக் கீழ் படிவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை ஏற்பீர்கள். திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களுடன் விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். பெண்களுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்களிடம் ரகசியங்களைப் பேச வேண்டாம்.
மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படித்து வைத்துக் கொள்ளவும். வீண்பொழுது போக்கு, விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்: ஆண்டாள் வழிபாடு
+ அறிவுத் திறமை கூடும்
- மற்றவர்களின் தலையீடு
உத்திரம்: சனி பகவான் உங்களின் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். செயல் திறன் உயரும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்களின் ஞாபக சக்தி உங்களின் அனைத்துச் செயல்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும். தொழில் நன்றாக நடந்தாலும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்திலும் எதிர்மறையான பேச்சுகள் உங்கள் காதுகளை எட்டும். அதனால் எவரிடமும் உணர்ச்சி வசப்பட்டு வேண்டாத வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்.
உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து முடிப்பீர்கள். பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். மறைமுக எதிரிகளிடம் ஒரு கண் வைத்திருப்பீர்கள். ஆரோக்யம் நல்ல முறையிலேயே தொடரும். மருத்துவச் செலவுகள் எதுவும் ஏற்படாது. பகைவர்களாக இருந்தவர்கள் தங்களின் முக்கிய விஷயங்களுக்காக உங்களின் உதவியை நாடி வருவர். வருமானம் தடைபடாது.
எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பதில் கிடைக்கும். மனதில் இருந்த எதிர்மறையான சிந்தனைகள் மறையும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். துணிந்து செய்யும் காரியங்களில் பணிவுடன் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது. வருமானம் சீராக இருந்தாலும் பழைய சேமிப்புகளிலிருந்து சிறிது செலவு செய்ய நேரிடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அவற்றை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். இருப்பினும் உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். உங்களின் பொருளாதார நிலை உயரும். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள் உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி பொருட்களை விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் நன்மைகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு இடையூறுகள் தோன்றினாலும் கவுரவத்திற்குக் குறைவு ஏற்படாது. அதே சமயம் ரகசியமாக எதையும் செய்ய வேண்டாம். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து உங்களின் பெருமையைக் கூட்டிக் கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். சமுதாயப் பணி செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீள்வீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.
மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்வது அவசியமாகிறது. அதனால் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர், ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு
+ ஆரோக்கிய வாழ்வு
- செலவு அதிகரிக்கும்