பதிவு செய்த நாள்
20
ஜன
2023
07:01
பிதுர்க்கடன் புண்ணியமானது: பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்: முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம்இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர்சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு: முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவர். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. பிற அமாவாசைகளில், மறைந்த முன்னோருக்கு... குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யவிடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில், நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் ஒன்று உண்டு. ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள். ஒருவன் குடிகாரன், முரட்டுப்பயல். இன்னொருவன் பரமசாது, நல்லவன், பக்தன். ஒரு பெரியவர் வீட்டுக்கு வந்தார். குடிகாரனிடம், ஏனப்பா, இப்படி இருக்கிறாய்? தம்பியைப் போல் சாதுவாக இருக்கலாமே! என்றார். ஐயா! இந்த புத்திமதி சொல்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க அப்பா குடித்தார், பெண் பித்தராக இருந்தார், வம்பு சண்டைக்குப் போவார். அப்பா செய்ததை நானும் செய்றேன், இதிலென்ன தப்பு, என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான். இளையவனிடம், அப்பா, அப்படிப்பட்டவராக இருந்தும், நீ அப்படி நடந்து கொள்ளவில்லையே, ஏன்? என்றார். ஐயா! அப்பா செய்த அந்தக் காரியங்களால் அம்மாவும், குழந்தைகளான நாங்களும், உறவினர்களும், அயல் வீட்டாரும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்தார். எனவே, அந்தக் குணங்களையெல்லாம் விட்டு, நல்லவனாக வாழ நான் முயற்சிக்கிறேன், என்றான். நாமும் அப்படித்தான்! நம் முன்னோர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை தை அமாவாசை நன்னாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.