மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர், மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசிக்காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன், அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.