அமாவாசை, கார்த்திகை; முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும்.. கந்தன் வழிபாடு கவலை போக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 10:05
அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள், ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது, அமாவாசையில் அன்னதானம் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும். இன்று பக்தியுடன் பித்ருக்களை வழிபட்டால் சுபிட்சமாக வாழலாம். முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும்.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார், என்று கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. வைகாசி கார்த்திகையான இன்று கந்தன் வழிபட்டு கவலையின்றி வாழ்வோம்.