ஏகாதசி விரதம்.. பெருமாளை வழிபட செல்வச்செழிப்பு ஏற்படும்.. எல்லாம் நன்மையாகும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 10:05
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். விஷ்ணு, கூர்ம, தன்வந்திரி, மோகினியாகவும் அவதாரம் எடுத்த நாள் ஏகாதசி. இதில் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு.
ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும். இந்த நாளில் பெருமாளை வழிபட வாழும் போது செல்வச்செழிப்பும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.