வால்மீகி ராமாயணத்தில், ‘குமார சம்பவம்’ என்ற சொல் வரும். குமாரன் என்றால் முருகப்பெருமான். பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் முருகப்பெருமானின் வரலாற்றை ராமர், லட்சுமணருக்கு சொல்கிறார். இதன் முடிவில் ‘பலச்ருதி’ சொல்கிறார் வால்மீகி. அதாவது ‘இந்தக் கதை கேட்டதற்கு இந்தப் பலன்’ என்று சொல்வது ‘பலச்ருதி’ ஆகும். குறிப்பாக இவர் எங்கும் பலச்ருதி சொல்வதில்லை. விதிவிலக்காக இங்கு சொல்கிறார். ஸ்ரீராமபிரானிடம் கீழ்க்கண்டதை சொல்கிறார் விஸ்வாமித்திரர்: ‘குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனம், புண்ணியத்தைக் கொடுக்கும். இந்த உலகத்தில் ஒருவர் முருகப்பெருமானிடம் பக்தி வைத்தால் போதும். தீர்க்காயுள், புத்திர, பேரன் சவுபாக்கியம் எல்லாம் அவனுக்கு கிடைக்கும். முடிவில் ஸ்கந்த உலகத்திற்கு சென்று அவருடனேயே நித்தியவாசம் செய்யலாம்’ என்கிறார். இங்கே ‘குமார ஸம்பவம்’ என்று ஆதிகவி சொன்னதை மங்கள வாக்காகக் கொண்டு காளிதாஸன் தன் காவியத்துக்கு அதே பெயரைக் கொடுத்தார்.