மதுரை: இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும்.
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று ஈசனை வழிபட நல்லதே நடக்கும். துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.