பதிவு செய்த நாள்
17
ஜூலை
2023
05:07
ஆடிமாதம் வந்துவிட்டாலே கோயில்கள் களை கட்டும். அதுவும் ஆடிவெள்ளி, ஆடித்தபசு, ஆடிபவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுவர். அத்துடன் இந்த நாட்களில் வியாபாரிகள் தள்ளுபடி விலையில் பொருட்களைத் தருவதால் பொருட்களை வாங்க கூடுவர். குறிப்பாக ஆடிப்பெருக்கன்று (ஆக.3) வாங்கி மகிழ்வர்.
ஆடி அமாவாசை: ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கோடிக்கரை, பாபநாசம், கன்னியாகுமரி தீர்த்தங்களில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பர். திருவள்ளூர் வீரராகவர், புதுச்சேரி வேதபுரீஸ்வர், ஈரோடு பவானி சங்கமேஸ்வரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மகாலிங்க சுவாமி, திருநெல்வேலி பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில்களில் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருநாவுக்கரசருக்கு கயிலாயக் காட்சி கொடுப்பதும் இந்நாளில் தான். ஆடி அமாவாசை ஆக.16ல் வருகிறது.
தட்சிணாயன புண்ணிய காலம்: தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை முதல் ஆனி வரை பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவுப் பொழுதாகவும் இருக்கும். இதன் அடிப்படையில் பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரமாக ஆடிமாதம் கருதப்படுகிறது. இதை தட்சிணாயண புண்ணியகாலம் என்பர்.
வருகிறாள் வரலட்சுமி; ஆவணி பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் (ஆக.25) சுமங்கலிகள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வரலட்சுமி விரதமிருப்பர். இதற்காக ஒரு குடத்தில் பச்சரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பணம், நகை ஆகியவற்றை இட்டு தேங்காய் மாவிலை வைத்து அம்மனின் முகத்தை வைத்து அலங்கரிப்பர்.
வந்தாச்சு திருமண யோகம்; ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு விரதம் இருப்பது நல்லது. இதனால் சுக்ர தோஷம் நீங்கி திருமண யோகம் உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கவும் விரதம் இருப்பதுண்டு. இந்த ஆண்டு ஆடி 5, 12, 19, 26 (ஜூலை 21, 28, ஆக.4, 11) ஆகிய நாட்களில் ஆடிவெள்ளி வருகிறது.
ஆடி செவ்வாய் விரதமிருங்க: ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்கும், கன்னி பெண்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறவும் அவ்வையார் விரதம் இருப்பர். நள்ளிரவு 12:00 மணிக்குப் பிறகு இந்த வழிபாட்டை தொடங்குவர். உப்பில்லாத கொழுக்கட்டை, மாவிளக்கேற்றியும் புங்கமரத்தின் இலையால் அம்மனுக்கு பூஜை செய்வர். பெண்கள் மட்டும் கொழுக்கட்டையை சாப்பிட்டு விரதத்தை முடிப்பர்.