ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். இதனால் சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும். ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் இணையும் நாள் மிகவும் சக்தி கொண்டது. எனவே இந்நாளில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆடிப்பூர நன்னாளில்தான் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் துளசி வனத்தில் அவதரித்தாள். பூமாதேவி அவதரித்த ஆனந்தமான மாதம் ஆடி ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நிதிமுன் நெய் விளக்கேற்றி வழிபட்டாலும் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டாலும் தோஷங்கள் விலகும்; சந்தோஷமான வாழ்வுகிட்டும்.