பதிவு செய்த நாள்
06
செப்
2023
08:09
கண்ணா வருவாயா...: கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிடுவது சிறப்பு. கண்ணனை நம் வீட்டுக்கு எழுந்தருளச் செய்ய வாசல் முதல் பூஜையறை வரை பாதங்களை அரிசிமாவால் வரையுங்கள். மாலை 5:30 - 7:30 மணிக்குள் விளக்கேற்றி கண்ணனுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் பிரசாதங்களை படைத்து, ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி தீபாராதனை காட்டுங்கள். அப்போது பாகவத புராணத்தில் கண்ணன் வரலாறு இடம் பெற்றுள்ள தசம ஸ்கந்தம் பகுதியை படிக்க புத்திரதோஷம் விலகும். அழகும், அறிவும் மிக்க குழந்தைகள் பிறப்பர்.
கண்ணன் இருக்க கவலை எதற்கு? கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கியையும், பகாசுரன் என்ற அரக்கனையும் கொன்றான் குழந்தை கண்ணன். இதை கேள்விப்பட்ட பூதனையின் சகோதரன் அகாசுரன் ஆயர்பாடிக்கு வந்தான். கண்ணன், அவனது அண்ணன் பலராமன், ஆயர்பாடி சிறுவர்களையும் கொல்ல முயன்றான். விரும்பிய வடிவத்தில் தோன்றும் ஆற்றல் அசுரனுக்கு இருந்தது. எட்டு மைல் நீளம் கொண்ட பாம்பாக உருவெடுத்து பயமுறுத்தினான். அவனுடைய வாய் குகை போல இருந்தது. ஆனால் கண்ணன் இருக்க கவலை எதற்கு? என அசுரனைப் பார்த்த சிறுவர்கள் சிரித்தனர். அசுரனின் வாய்க்குள் நுழைந்த கண்ணன் தன் தோற்றத்தை பெரிதாக்கவே அவனது தலை சுக்குநுாறாக வெடித்தது.
பார்வை ஒன்றே போதுமே: ஆயர்பாடியில் இருந்த கண்ணனையும், அவரது அண்ணன் பலராமரையும் மதுரா நகருக்கு அழைத்துச் சென்றார் பக்தரான அக்ரூரர். அனைவரும் அவர்களின் அழகைக் கண்டு மெய்மறந்து நின்றனர். அப்போது முதுகு கூனலான ஒரு முதியவள் சந்தன கிண்ணத்துடன் சென்று கொண்டிருந்தாள். “குணத்தால் உயர்ந்தவளே! சந்தனத்தை எங்கு எடுத்துச் செல்கிறாய்?”
எனக் கேட்டார் கண்ணன்.மதுராபுரி மன்னர் கம்சனின் பணிப்பெண் நான். அசுர மன்னனுக்கு வேலை செய்தே என் வாழ்நாளை வீணாக்கி விட்டேன். இன்று ஒருநாளாவது நல்லவர்களுக்கு சந்தனம் பூச விரும்புகிறேன் என்று சொல்லி இருவருக்கும் சந்தனம் பூசினாள். கண்ணனின் அருட்பார்வையால் முதியவள் அழகிய பெண்ணாக மாறினாள். இந்தப் பெண் யார் தெரியுமா? கூனியாகப் பிறந்து ராமரைக் காட்டுக்கு அனுப்பக் காரணமான மந்தரை. இந்த பிறவியில் கிருஷ்ணருக்கு சந்தனம் அளித்து பாவத்தை போக்கிக் கொண்டாள். கண்ணனை நம்பிச் சரணடைந்தால் முன்வினை பாவம் ஓடி விடும்.
கடலுக்குள் கண்ணன்: அசுரன் கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன். அவன் தன் மருமகனான கம்சனை அழித்த கண்ணனைக் கொல்வதற்காக மதுராவின் மீது படையெடுத்தான்.
18 முறை தொடர்ந்து போர் தொடுத்ததால் மதுராவாசிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கண்ணன், மேற்கு கடற்கரையில் உள்ள தீவில் மக்களை குடியேறச் செய்தார். அங்கு துவாரகா என்னும் நகரை உருவாக்கினார். குஜராத் மாநிலம் துவாரகையில் தான் புகழ்மிக்க கண்ணன் கோயிலான துவாரகா நாத்ஜி உள்ளது.
என்ன தவம் செய்தார்களோ.... : யமுனை நதிக்கரையில் கண்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதியைக் கண்டதும் நீராடும் எண்ணம் வந்து விடும். நீராடியதும் பசியெடுக்கும். கண்ணனும், அவனது நண்பர்களும் சாப்பிட வட்டமாக உட்காருவர். வெண்ணெய், பால், தயிர் சோறு, பழங்களை இலைகளில் வைத்து உண்பர். கேலியும், கிண்டலுமாக சிரித்து மகிழும் அவர்களைக் கண்ட வானுலக தேவர்கள், இந்த குழந்தைகள் என்ன தவம் செய்தார்களோ? இந்த பாக்கியம் நமக்கு இல்லையே என ஏங்குவர். கண்ணனும், ஆயர் சிறுவர்களும் அமர்ந்திருக்கும் காட்சி ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல இருக்கும்.
காற்றாய் வந்த அசுரன்: குழந்தை கண்ணனுக்கு ஒரு வயது. ஒருநாள் தாய் யசோதை குழந்தைக்கு பாலுாட்டி துாங்க வைத்தாள். பின் சமைக்கத் தொடங்கினாள். அப்போது த்ருணாவர்த்தன் என்னும் அசுரன் காற்று வடிவில் தோன்றி கண்ணனை துாக்கிக் கொண்டு மாயமானான். யசோதை குழந்தையைக் காணாமல் பதறினாள். ஆயர்கள் கண்ணனைத் தேடி நாலாபுறமும் ஓடினர். இதனிடையே கண்ணன் மலை போல கனக்கவே சுமக்க முடியாமல் அசுரன் விழித்தான். திடீரென அவனது கழுத்தை குழந்தை கண்ணன் நெறித்தான். வலி தாளாமல் அசுரன் உயிர் விட்டான். மரண ஓலம் எங்கும் எதிரொலித்தது. சப்தம் கேட்ட திசை நோக்கி வந்தனர். கண்ணன் சிரித்தபடி படுத்திருந்தான். அதைக் கண்ட கோபியர்கள், குழந்தையாய் இருந்தாலும் தெய்வம் தெய்வம் தானே என மகிழ்ந்தனர்.
ஆயர்பாடி மாளிகையில்...: ஆயர்பாடி மக்கள் தங்களின் தலைவர் நந்தகோபரின் வீட்டில் கண்ணன் பிறந்ததை அறிந்து வாத்தியங்களை இசைத்தனர். அந்தணர்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்களை ஓதினர். மாட்டுக் கொட்டகை, தெரு எங்கும் கோபியர்கள் கோலமிட்டனர். மஞ்சள், செஞ்சூரணத்தால் ரங்கோலி வரைந்தனர். வாசனை திரவியங்களைப் பூசியும், பன்னீர் தெளித்தும் ஆடிப் பாடினர். பசுக்கள், கன்றுகளுக்கு பூமாலைகளைச் சூட்டினர். வீடெங்கும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்தனர். பலவிதமான காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகைகளை அணிந்து கொண்டு நந்தகோபரின் மாளிகைக்கு விரைந்தனர். வசுதேவ் கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! எங்களைக் காத்தருள வேண்டும்” என பிரார்த்தனை செய்தனர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்களை தானமாக கொடுத்தனர்.
தீயில் தோன்றியவள்: மகாபாரதத்தில் கிருஷ்ணா என்றொரு பெண் இருந்தாள் தெரியுமா? அவள் தான் துருபதனின் மகளான திரவுபதி. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத துருபதனை, தன் சீடர்களான பாண்டவர்கள் மூலம் துரோணாச்சாரியார் தோற்கடித்தார். தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கும் விதத்தில் துருபதன் யாகம் ஒன்றை நடத்தினான். துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே திருஷ்டத்யும்னன் என பெயர் பெற்றான். பாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே யாக குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது. கிருஷ்ணா (கரியவள்) எனப் பெயரிட்டு வளர்த்தான். துருபதனின் மகளான அப்பெண்ணே திரவுபதி எனப் பெயர் பெற்றாள்.