விநாயகரால் விளைந்த நன்மைகள்: கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினாரே! கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீரங்கநாதர் நமக்குக் கிடைத்திருப்பாரா? அவரது விக்ரகம் இலங்கைக்கல்லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகிவிட்டது. மாலைச் சந்தி கர்மங்களைச் செய்யவேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலைகொண்டுவிட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷ்ணன். ஆனால் இயலவில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மையறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.
இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார் இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம்பெற்று, அவரிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் ஆத்மலிங்கத்தைத் தர, அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோகர்ணம் அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலாம். பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்னயந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதேவி சிவனையும் கணபதியையும் நினைக்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.