பதிவு செய்த நாள்
05
அக்
2023
10:10
கலியுகாதி 4925 ஆம் ஆண்டு, சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள் 21 ஆம் நாள்(5.10.1823) ஞாயிற்றுக்கிழமை 29.55 நாழிகையில் மாலை 5.55 மணிக்கு சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகவாகத் திருவருட் பிரகாச வள்ளலார் தோன்றினார்.
கருங்குழியியை உறைவிடமாகக் கொண்டிருந்த நம்பெருமான் அவரது சன்மார்க்க சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தருமசாலை ஒன்றையும் வழிபாட்டுக்கு ஞானசபை ஒன்றையும் உருவாக்கும் எண்ணத்தில் அதற்கான பெருவெளி ஒன்றைத் தேடி, தம் அன்பர்களுடன் கருங்குழிக்கு வடபுறமுள்ள பார்வதிபுரம் எனப்படும் வடலூருக்கு வந்தார்.
வள்ளல் பெருமான் அருளிய பாடல்களைத் தொகுத்து அவற்றை திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். மொத்தம் ஆறு திருமுறைகளாக இவை தொகுக்கப்பட்ட போதிலும் முதன் முதலில் 1867 ஆம் ஆண்டு, இறுக்கம் இரத்தின முதலியார்,சிவானந்தபுரம் செல்வராய முதலியார், புதுவை வேலு முதலியார் போன்றவர்கள் ஒத்துழைப்புடன் தொழுவூர் வேலாயுதம் முதலியார் தொகுத்த இராமலிங்க சுவாமிகள் என்று வழங்கக் கூடாது என்று வள்ளலார் தடுத்துவிட்டதால் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளையவர்கள் என்று குறிப்பிடப்பெற்றது.
வடலூருக்கு (பார்வதிபுரம்) தெற்கே ஐந்துகிலோமீட்டர் தொலைவில் (அதாவது வடலூர்-நெய்வேலி நெடுஞ்சாலையில், வடலூரிலிருந்து 2 கி.மீ தொலைவு சென்று, தெற்கே செல்லும் பாதையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது) மேட்டுக்குப்பம் உள்ளது. மேட்டுக்குப்பத்தின் மேற்குப்புறம் அக்காலத்தில் வைணவ குருமார்கள் வந்து உபதேசம் செய்யும் திருமாளிகை என்னும் குடிசை வீட்டில், மேட்டுக்குப்பத்தில் வாழும் மக்களின் வேண்டுகோளினை ஏற்று சன்மார்க்க நெறியைப் போதிக்கச் சென்ற பெருமான் தம்முடைய அருள் வாழ்க்கையினை முற்றிலுமாக அங்கேயே வாழ்ந்து வையத்தில் பெருநெறியைப் பரப்பினார்கள்.
சித்தி வளாகத்தில் வாழ்ந்தபோது அடிகளார் தன்னுடைய உள்ளத்தில் கண்ட சத்திய ஞான சபையானது மிகவும் அற்புதமாகவும், புதுமையாகவும் இருந்தது. ஆகையால் சத்திய ஞானசபையைப் புறத்தில் ஓர் அற்புதத் திருவுருவுடன் விளங்க, உள்ளகத்தே ஒத்தெழுந்த அருள் விருப்பின்படி, தமது திருவருட் கரங்களால் ஒரு நிர்மாணப்படம் வரைந்து, சன்மார்க்க சங்கத்தினரிடம் கொடுத்து, சத்திய ஞான சபை கட்டட வேலையை பிரஜோற்பத்தி 1871-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் தொடங்கிடச் செய்தார்கள். ஞான சபையில் முதல் ஜோதி தரிசனத்தை 25-1-1875 இல், சித்தி வளாகத்தில் இருந்தபடியே காட்டுவித்தார்கள். வள்ளல் பெருமான் சித்தி வளாகத்தில் இருந்து கொண்டு, 9-3-1873 இல் சத்திய தருமச்சாலையில் உள்ளவர்களுக்கு ஒழுக்கக் கட்டளை ஒன்று வரைந்து விடுத்தார். அருட்பெருஞ்ஜோதி அகவல் என்னும் ஒப்பு உயர்வு அற்ற ஞானப் பொக்கிஷத்தைச் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறையிலிருந்து, தன்னுடைய தெய்வீகத் திருக்கரத்தால், 18-4-1872 ல், ஆங்கிரச ஆண்டு, சித்திரை மாதம் 8 ஆம் நாள், ஒரே இரவில் 1596 அடிகளை எழுதி அருளினார். இந்த சித்திவளாகத் திருமாளிகையில் இருந்துதான் சத்திய ஞான சபையிலே அமைக்கப்பட்டிருக்கும் அகண்ட தீபத்தையும், கண்ணாடியையும் வைத்து ஒரு மண்டலம் அந்தக் கண்ணாடிக்கும் மகத்துவத்தினை உண்டாக்கி சத்திய ஞான சபையில் பொருத்தி வைத்தார்கள். சத்திய ஞான சபையில் உள்ள சிற்சபையிலும் பொற்சபையிலும் திகழ்கின்ற அற்புதங்களையுடைய உள்ளார்கள். பற்பல கட்டளைகள், விண்ணப்பங்கள் உபதேசங்கள் யாவும் சித்தி வளாகத்திலிருந்துதான் அடிகளார் அருளியிருக்கிறார்.
வள்ளல் பெருமான்(1873) ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில்,திருவறையின் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப்புறத்தில் வைத்து, இதை தடைபடாது ஆராதியுங்கள். இந்த கதவை சாத்தி விடப் போகிறேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும்-ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிற படியால்- உங்களுடைய காலத்தை வீணிற் கழியாமல்,நினைந்து நினைந்து எனும் தொடக்கமுடைய 28 பாசுரமடங்கிய-
(ஆறாந்திருமுறை-ஞானசரியை-நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே எனத் தொடங்கி (பாடல் 1530 முதல்) சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை...எனத்தொடங்கும் இறுதிப்பாசுரம்-(பாடல் 1557 ஈறாக 28 பாடல்கள்)
-பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.
30.1.1874 ஸ்ரீமுக ஆண்டு தைமாதம் 19 ஆம் நாள், புனர்பூசமும், பூசமும் கூடும் சமயம் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு, கடகத்தில் சந்திரனும் சூரியனும் பூரணமாக விளங்கும் ஞான நிறைவை குறிக்கும் நன்னாளில், பின்வருமாறு சன்மார்க்க சங்கத்தாருக்கு இட்ட கட்டளையாவது:
நான் உள்ளே பத்து பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து
அவநம்பிக்கை யடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து
பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தா னிருக்கும்படி
ஆண்டவர் செய்விப்பார். என்னை காட்டிக்கொடார்.
வள்ளல் பெருமானின் கட்டளைப்படி கதவானது பூட்டப்பட்டது.
பிச்சுலகர் மெச்சுப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரை செய் கின்றே÷னூ
என்று திருவாய் மலர்ந்தருளிய நம்பெருமான், அருட்ஜோதி ஆண்டவராகி, அருட்பிரகாச வள்ளலாய் எங்கும் நிறைந்த உன்னத நிலை எய்தினார்.
-திருச்சிற்றம்பலம்-
வள்ளல் பெருமானின் சன்மார்க்க பெருநெறிகள்
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
சாதி, சமய, மத இன வேறுபாடுகளைத் தவிர்த்தல்.
புலால் உண்ணற்க; எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
ஜீவ காருண்ய, இந்திரிய, கரண ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
உண்மை அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.
10.உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்டு தொண்டு செய்ய வேண்டும்.
என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்-சாகாதவனே சன்மார்க்கி.
திருஅருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க அடிகள்) வரலாற்றுக் காலக் குறிப்புகள்
திருஅவதாரம்: சுபானு, புரட்டாசி 21 (ஞாயிறு) சித்திரை நட்சத்திரம் 5.10.1823 மருதூர்-சிதம்பரம் வட்டம்-கடலூர் மாவட்டம்
பெற்றோர்: இராமையா-சின்னம்மை
இயற்பெயர்: இராமலிங்கம்
சிறப்புப் பெயர்: திரு அருட் பிரகாச வள்ளலார்
குடும்பம் சென்னைக்குச் சென்றது: 1824
தொழுவூர் வேலாயுதனார், அடிகளாரின் மாணவரானது: 1849
ஒழிவிலொடுக்கம் பதிப்பித்தது: 1851
மனுமுறை கண்ட வாசகம் வெளிவந்தது: 1854
தொண்ட மண்டல சதகம் பதிப்பித்தது: 1855
சின்மய தீபிகை பதிப்பித்தது: 1857
கருங்குழியில் உறையத் தொடங்கியது: 1858
சன்மார்க்க சங்கம் நிறுவியது: 1865
திரு அருட்பா (முதல் நான்கு திருமுறைகள்) வெளியீடு: 1867
சத்திய தருமச்சாலை தொடங்கியது (பிரபவ, வைகாசி, 11): 23.5.1867
மேட்டுக் குப்பத்தில் உறையத் தொடங்கியது: 1870
சத்திய ஞானசபை அமைத்தது: 1871
சத்திய ஞானசபையில் முதல் தைப்பூசம் (பிரஜோத்பத்தி-தை 13): 25.1.1872
அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதியது(ஆங்கிரச, சித்திரை 8): 18.4.1872
சங்கம், சாலை, சபை பெயர் மாற்றம்-ஞான சபை வழிபாடுமுறை வகுத்தது: 18.7.1872
சன்மார்க்கக் கொடி கட்டி, பேருபதேசம்(ஸ்ரீமுக, ஐப்பசி 7): 22.10.1873
சித்திவளாகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் நிறைந்தது (ஸ்ரீமுக தை 19, இரவு 12 மணி) 30.1.1874