Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்புகழ் பகுதி-6 திருப்புகழ் பகுதி-9 திருப்புகழ் பகுதி-9
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-8
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
05:03

376.  துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கம் சீர்த்துத்  திரிமானார்
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத்  துழலாதே

கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக்  கிடையாநீ
கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப்  பெறுவேனோ

வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத்  துடையோனே
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத்  திளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற்  புணர்வோனே
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்குநாட்டுத் திருச்செங்கோட்டுப்  பெருமாளே.

377. நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி  னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி  ரண்டுபோல

நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தான அல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர்  சம்பையாரஞ்

சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை  யஞ்சியோடத்

தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவகுரு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக  விஞ்சைதாராய்

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும்  விந்தையோனே

சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவெ தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறு வரவேலெறிந் தேநடன  முங்கொள்வேலா

மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையா
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி  யொன்றுமானை

மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ்  தம்பிரானே.

378. பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக்  கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட்  கொடியார்மேல்

துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப்  பதிமீதே
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத்  தருவாயே

குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச்  சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டையிட்டுப்  பொரும்வேழம்

சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக்  களிகூருஞ்
செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப்  பெருமாளே.

379. மந்தக் கடைக்கண் காட்டுவர்
கந்தக் குழற்பின் காட்டுவர்
மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ  ரநுராக
வஞ்சத் திரக்கங் காட்டுவர்
நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
வண்பற் றிருப்புங் காட்டுவர்  தனபாரச்

சந்தப் பொருப்புங் காட்டுவர்
உந்திச் சுழிப்புங் காட்டுவர்
சங்கக் கழுத்துங் காட்டுவர்  விரகாலே
சண்டைப் பிணக்குங் காட்டுவர்
பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
தங்கட் கிரக்கங் காட்டுவ  தொழிவேனோ

பந்தித் தெருக்கந் தோட்டினை
யித்துச் சடைக்கண் சூட்டுமை
பங்கிற் றகப்பன் தாட்டொழு  குருநாதா
பைம்பொற் பதக்கம் பூட்டிய
அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
பங்கப் படச்சென் றோட்டிய  வயலூரா

கொந்திற் புனத்தின் பாட்டிய
லந்தக் குறப்பெண் டாட்டொடு
கும்பிட் டிடக்கொண் டாட்டமொ  டணைவோனே
குன்றிற் கடப்பந் தோட்டலர்
மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
கொங்கிற் றிருச்செங் கோட்டுறை  பெருமாளே.

380. மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப்  பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத்  தையர்மேலே

பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற்  கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற்  பகமேதான்

செச்சர லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப்  பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க்  கதிரேனல்

முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப்  புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.

381. வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
மயக்கம் பூண மோதிய  துரமீதே
மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
மரிக்கும் பேர்க ளோடுற  வணியாதே

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
பிறப்புந் தீர வேயுன  திருதாளே
பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
பெலத்தின் கூர்மை யானது  மொழிவாயே

இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
எதிர்த்துஞ் சூரர் மாளவெ  பொரும்வேலா
இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
எனத்திண் கூளி கோடிகள்  புடைசூழத்

திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
செழித்தன் பாக வீறிய  பெருவாழ்வே
திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
திருச்செங் கோடு மேவிய  பெருமாளே.

382. ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர்  தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர்  பலரூடே

மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள்  உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி  லுழல்வேனோ

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு னிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு   அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள் விடுத்தபி  னவனோடே

ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன்  மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர்  பெருமாளே.

383. காலனிடத்  தணுகாதே காசினியிற்  பிறவாதே
சீல அகத் தியஞான தேனமுதைத்  தருவாயே
மாலயனுக் கரியானே மாதவரைப்   பிரியானே
நாலுமறைப் பொருளானே நாககிரிப்  பெருமாளே.

384. தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத்  தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத்  தபராத

யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத்  தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத்  துகலாமோ

காமா காமா தீனா நீணா
காவாய் காளக்  கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக்  கனமானின்

தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத்  தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.

385. அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள  கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு  நெடுமாம

ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி  பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொணிரை
யத்தி னிடையடிமை  விழலாமோ

தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முனியுதவு  மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப  னிருதோளா

தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர்  குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர்  பெருமாளே.

386. அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத்  தமராயன்
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற்  றியவோடும்

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித்  திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப்  பெறுவேனோ

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக்  கரசாய
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக்  குமரேசா

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத்  திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப்  பெருமாளே.

387.பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பக்ஷிந டத்திய  குகபூர்வ
பச்சிம தக்ஷிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத  மெனவோதும்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி  தடியேனும்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக  மறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி  தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப  னிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட  மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்ப கிரிச்சுரர்  பெருமாளே.

388. புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு  மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத  பெருவாழ்வு

நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு  மடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத  நினைவாயே

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி  மருகோனே
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி  மறையோனே

கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர்  கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர்  பெருமாளே.

389. பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
புட்பத்துக் கொப்பக் கற்பித்  திளைஞோர்கள்
புட்பட்டுச் செப்பத் துப்பற்
கொத்தப்பொற் றித்தத் திட்பப்
பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத்  தனமானார்

கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
தத்திற்புக் கிட்டப் பட்டுக்
கைக்குத்திட் டிட்டுச் சுற்றித்  திரியாமல்
கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
கற்பித்தொப் பித்துக் கொற்றக்  கழல்தாராய்

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
துக்கச்சத் துக்குக் குக்குக்
குக்குக்குக் குக்குக் குக்குக்  கெனமாறா
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்
கக்ஷத்திற் பட்சத் தத்தக்
கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக்  குடதாரி

சற்சித்துத் தொற்புத் திப்பட்
சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
சத்தத்தைச் சத்திக் கொச்சைப்  பதிவாழ்வே
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
சற்பப்பொற் றைக்குட் சொக்கப்  பெருமாளே.

390. கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு  மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை  இருநாலும்

படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத  மிசையேறிப்
பழைய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை  வரவேணும்

சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர  தரபாரத்
தரணி தரதனு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு  மயில்வாழ்வே

நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ  நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய  பெருமாளே

கொல்லிமலை

391. கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல  மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லியுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை  நகைமாதர்

இட்டமெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை  யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ  தியல்போதான்

முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள  வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி  மணவாளா

பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி  மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல  பெருமாளே.

392. தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த  மெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க  மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி  யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற  தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று  குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல்  கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை  யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற  பெருமாளே.

உய்யக்கொண்டான் மலை-கற்குடி (ராசகெம்பீர வளநாட்டு மலை)

393. மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு  கண்டுபோல
மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு  மன்றுளாடி

சீகரம் வேணுதுடி தோற்ற இடைகொடு
போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு  வந்துகாசு
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
சீவனொன் றானபர மார்த்த தெரிசனை  வந்துதாராய்

வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
வீரனென் பானொருப ராக்ர னெனவர  அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
வீழநன் பாரதியு மூக்கு நழுவிட  வந்தமாயன்

ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
ஏறிவென் றாடுகள நீக்கி முனிவரர்  வந்துசேயென்
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
ராஜகெம் பீரவள நாட்டு மலைவளர்  தம்பிரானே.

ஞானமலை

394. சூதுகொலை கார ராசைபண மாதர்
தூவையர்கள் சோகை  முகநீலர்
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர்  தெருவூடே

சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி  தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க  ளுறவாமோ

வேதமுனி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச  லெனஏகி
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
வேலையள றாக  விடும்வேலா

நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியபி ராமி  யருள்பாலா
நாரண சுவாமி யீனுமக ளோடு
ஞானமலை மேவு  பெருமாளே.

395.மனையவள் நகைக வூரி னனைவரு நகைத லோக
மகளிரு நகைக்க தாதை  தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு  மடியேனை

அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம  மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாத  மருள்வாயே

தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு  மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி  முருகோனே

எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி  யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு  பெருமாளே.

ஓதிமலை (ஊதிமலை)

396. ஆதிமக மாயி யம்பை  தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த  குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க  அருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க  ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு  மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க  வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த  வடிவேலா

ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள்  வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த  பெருமாளே.

397. கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
சூது விதத்துக் கிதத்து மங்கையர்
கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில்  நினையாதே
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள்  புரிவாயே

நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு
நான்மு கனுக்குக் கிளத்து தந்தையின்  மருகோனே
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள்  வடிவேலா

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ  னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள்  புரிவோனே

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட  ரொளியோனே
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள்  பெருமாளே.

குருடிமலை

398. கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென  வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி  களைநாடித்

திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன  கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை  யறியேனே

வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு  மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை  குதிபாயும்

குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ  மயிலேறும்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர்  பெருமாளே.

செஞ்சேரிமலை (தென்சேரிகிரி)

399. எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
இங்கேவ ருனதுமயல்  தரியாரென்
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
என்றாசை குழையவிழி  யிணையாடித்

தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
சந்தேக மறவெபறி  கொளுமானார்
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
தண்பாரு முனதருளை  யருள்வாயே

சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
சந்தாரும் வெதிருகுழ  லதுவூதித்
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
தங்கூறை கொடுமரமி  லதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
சென்றேயும் அமரருடை  சிறைமீளச்
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
தென்சேரி கிரியல்வரு  பெருமாளே.

400. கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
கண்டாரைச் சிந்து விழிகொடு
கொந்தாரச் சென்ற குழல்கொடு  வடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடு
நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு  பலரோடும்

பண்டாடச் சிங்கி யிடுமவர்
விண்டாலிக் கின்ற மயிலன
பண்பாலிட் டஞ்செல் மருளது  விடுமாறு
பண்டேசொற் றந்த பழமறை
கொண்டேதர்க் கங்க ளறவுமை
பங்காளர்க் கன்று பகர்பொருள்  அருள்வாயே

வண்டாடத் தென்றல் தடமிசை
தண்டாதப் புண்ட ரிகமலர்
மங்காமற் சென்று மதுவைசெய்  வயலூரா
வன்காளக் கொண்டல் வடிவொரு
சங்க்ராமக் கங்சன் விழவுதை
மன்றாடிக் கன்பு தருதிரு  மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
தொண்டாடக் கண்ட வமர்பொரு
செஞ்சேவற் செங்கை யுடையசண்  முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளத
லங்காரச் சந்த்ர கலைதவழ்
தென்சேரிக் குன்றி லினிதுறை  பெருமாளே.

கொங்கணகிரி (அலைவாய்மலை)

401. ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை  வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன  மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை  முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி  யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ  யருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய  அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரøக்ஷபுரி
வந்தணைய  புத்தியினை  யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு  ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர்  பெருமாளே.

தீர்த்த மலை

402. பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை  தினமானம்
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல்  வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ  னிதுகேளாய்
வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு மெளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை  மருவாயே

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல்  திருநீறாய்
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ  னருள்பாலா

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய  குருநாதா
தீர்த்த எனதக மேட்டை யுடனினை
ஏத்த அருளுட னோக்கி அருளுதி
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள்  பெருமாளே.

கிணத்துக்கடவு (கனக மலை)

403. அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட்  டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழைவு மொன்றைத்  தவிர்வேனோ

பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்  றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற்  கருள்வாயே

செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கத்
சிலுசிலென வளைகு லுங்கத்  திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற்  குழகோனே

கருணைமொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத்  திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கனககிரி யிலகு கந்தப்  பெருமாளே.

புகலூர் (புகழிமலை)

404. மருவுலர் வாச முறுகுழலி னாலும்
வரிவிழியி னாலு  மதியாலும்
மலையினிக ரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர்  வகையாலும்

கருதுபொரு ளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி  அலைவேனோ
கமலபத வாழ்வு தரமயிலின் மீது
கருணையுட னேமுன்  வரவேணும்

அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முனி ராசர்  தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக  வளநாடா

பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை  யெறிவோனே
புகலரிய தான தமிழ்முனிவ ரோது
புகழிமலை மேவு   பெருமாளே.

பூம்பாறை

405. மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக  முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி  உறவாடி

ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட  விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலை மாதர்  உறவாமோ

பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ  எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன்  மருகோனே

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி  திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையில் மேவு  பெருமாளே.

பிரான்மலை (கொடுங்குன்றம்)

406. அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங்  கண்களாலே
அடர்ந்தெழும்பொன் குன்றங்கும்பங்  கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும்  பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங்கண்டின்  றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந்  தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின்  தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துங்  துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றங் தங்குந்  தம்பிரானே.

407. எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
குத்தித்தி றந்துமலை
யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
முத்தச்செ றிந்தவட
மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
னிற்கொத்து மங்குசநெ  ருங்குபாகர்

எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப
தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
முட்கத்தி ரண்டிளகி
இளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
டைத்துச்சி னந்துபொரு  கொங்கையானை

பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
செக்கச்சி வந்தமுது
பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
முத்தத்து டன்கருணை  தந்துமேல்வீழ்

புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
னிர்த்தச்ச ரண்களைம  றந்திடேனே

திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்தெ தெந்ததெத
திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த  திந்திதீதோ

திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு  என்றுதாளம்

முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
கத்திக்க ளும்பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
மிக்கக்க வந்தநிரை  தங்கியாட

முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ
டிக்கத்து ணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
வெட்டிக்க ளம்பொருத  தம்பிரானே.

குன்றக்குடி

408. அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல்  மொழியாலே
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு  நடையாலே

சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க  ளதனாலே
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
துயரை யென்றொ ழிந்து  விடுவேனோ

எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல்  புரிபோதே
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
மொழிய வென்ற கொண்டல்  மருகோனே

மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
மநுவி யம்பி நின்ற  குருநாதா
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
மலைவி ளங்க வந்த  பெருமாளே.

409. ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள
அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
அம்பொற் பதத்தர்தனு வம்பொற்பொ ருப்படர்வ
களபபரி மளமெழுகும் எழிலில்ழுழு குவமுளரி
யஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக் கருத்துமத  னபிஷேகங்

கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச் சுடர்க்கனக கும்பத் தரச்செருவ
பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வ
கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வ  முலைமாதர்

வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
னும்புட் குரற்பகர வம்புற்ற மற்புரிய
வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் சமத்துநக  நுதிரேகை

வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற் றணைத்தவதி
செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்
உந்திப் பிறப்பறநி னைந்திட்ட முற்றுனடி
வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
துன்றட்டசிட்டகுண குன்றக் குடிக்கதிப  அருளாதோ

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண
சங்கச் சகச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன
தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன  தனனானா

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணிடிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி  யெனதாளம்

தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
மண்டைத் திரட்பருகு சண்டைத் திரட்கழுகு
துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர  முதுபேய்கள்

சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
வெங்குக் குடத்தகொடி துங்குக் குகுக்குகென
வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
மிண்டைக்குலைத்தமர்செய் தண்டர்க் குரத்தையருள்  பெருமாளே.

410. கடினதட கும்ப நேரென
வளருமிரு கொங்கை மேல்விழு
கலவிதரு கின்ற மாதரொ  டுறவாடிக்
கனவளக பந்தி யாகிய
நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
கனியிதழை மென்று தாடனை  செயலாலே

துடியிடைநு டங்க வாள்விழி
குழைபொரநி ரம்ப மூடிய
துகில்நெகிழ வண்டு கோகில  மயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய
கொடுநகமி சைந்து தோள்மிசை
துயிலவச இன்ப மேவுத  லொழிவேனோ

இடிமுரச றைந்து பூசல்செய்
அசுரர்கள்மு றிந்து தூளெழ
எழுகடல்ப யந்து கோவென  அதிகோப
எமபடரு மென்செய் வோமென
நடுநடுந டுங்க வேல்விடு
இரணமுக சண்ட மாருத  மயிலோனே

வடிவுடைய அம்பி காபதி
கணபதிசி றந்து வாழ்தட
வயலிநகர் குன்ற மாநக  ருறைவோனே
வகைவகைபு கழ்ந்து வாசவன்
அரிபிரமர் சந்த்ர சூரியர்
வழிபடுதல் கண்டு வாழ்வருள்  பெருமாளே.

411. நேசா சாரா டம்பர மட்டைகள்
பேசா தேயே சுங்கள மட்டைகள்
நீசா ளோடே யும்பழ கிக்கவர்  பொருளாலே
நீயே நானே யென்றொரு சத்தியம்
வாய்கூ சாதோ துங்க படத்திகள்
நேரா லேதா னின்றுபி லுக்கிகள்  எவர்மேலும்

ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
காயே மீதோ லெங்கு மினுக்கிகள்  வெகுமோகம்
ஆகா தாவே சந்தரு திப்பொழு
தோகோ வாவா வென்று பகட்டிக
ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு  முறவாமோ

பேசா தேபோய் நின்றுநி யிற்றயிர்
வாயா வாவா வென்று குடித்தருள்
பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர்  வருதூது
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன்  மருகோனே

மாசூ டாடா டும்பகை யைப்பகை
சூரா ளோடே வன்செரு வைச்செறு
மாசூ ராபா ரெங்கும ருட்பொலி  முருகோனே
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
தேனா றேசூழ் துங்க மலைப்பதி
மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள்  பெருமாளே.

412. பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
பருவம தன்கைச்  சிலையாலே
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
பெருவழி சென்றக்  குணமேவிச்

சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
செயலும ழிந்தற்  பமதான
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
சிலசில பங்கப்  படலாமோ

கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
கிலுமெதிர் சண்டைக்  கெழுசூரன்
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
கிழிபட துன்றிப்  பொருதோனே

குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
பனமநு வுஞ்சொற்  குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளர் கந்தப்  பெருமாளே.

413. தவள மதிய மெறிக்குந்  தணலாலே
சரச மதனன் விடுக்குங்  கணையாலே
கவன மிகவு முரைக்குங்  குயிலாலே
கருதி மிகவு மயக்கம்  படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங்  குறமானின்
பரிய வரையை நிகர்க்குந்  தனமேவும்
திவளு மணிகள் கிடக்குந்  திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண்  பெருமாளே.

414. நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோறு மதிகாயும்  வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக  வலையூடே

ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர்  துயரூடே
ஏகாம லழியாத மேலான பதமீதி
லேகீயு னுடன்மேவ  அருள்தாராய்

தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
தானேறி விளையாடு  மொருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோத ரன்முராரி  மருகோனே

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு  புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழு
மாயூர கிரிமேவு  பெருமாளே.

பொதிகைமலை (பொதியமலை)

415. மைக்க ணிக்கன் வாளி போல
வுட்க ளத்தை மாறி நாடி
மட்டி முற்ற கோதை போத  முடிசூடி
மத்த கத்தி னீடு கோடு
வைத்த தொத்தின் மார்பி னூடு
வட்ட மிட்ட வாரு லாவு  முலைமீதே

இக்கு வைக்கு மாடை வீழ
வெட்கி யக்க மான பேரை
யெத்தி முத்த மாடும் வாயி  னிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய
லிச்சை யுற்றெ னாக மாவி
யெய்த்து நித்த மான வீன  முறலாமோ

துர்க்கை பக்க சூல காளி
செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோத தீத  வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள்
சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறு தார  மொழிவோனே

திக்கு மிக்க வானி னூடு
புக்க விக்க மூடு சூரர்
திக்க முட்டி யாடு தீர  வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப
விச்சை கொச்சை மாதி னோடு
செப்பு வெற்பில் சேய தான  பெருமாளே.

416. வெடித்த வார்குழல் விரித்து வேல்விழி
விழித்து மேகலை பதித்து வார்தொடு
மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம  ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
மிரட்டி யாரைபு மழைத்து மால்கொடு  தந்தவாய்நீர்

குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
குலத்தர் யாவரு நகைக்க வேயுடல்  மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
கொடுத்து வேதமு மொருத்த னாமென  சிந்தைகூராய்

உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுவி  ரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ  ரும்பராரை

அடைத்த மாசிறை விடுத்து வானுல
களிக்கு மாயிர திருக்க ணானர
சளித்து நாளுமெ னுளத்தி லேமகி  ழுங்குமாரா
அளித்த தாதையு மிகுத்த மாமனும்
அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
அகத்ய மாமுனி பொருப்பின் மேவிய  தம்பிரானே.

கழுகுமலை

417. குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
கொடிது கொடிததால் வருத்த மாயுறு  துயராலே

மதலை மறுகிலா லிபத்தி லேவெகு
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி  முடியாதே

முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு  மருகோனே

கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
யிசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய  பெருமாளே.

418. முலையை மறைத்துத் திறப்ப ராடையை
நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல  ரணைமீதே

அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்
மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக  ளுறவாமோ

தலைமுடி பத்துத் தெறித்து ராவண
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
தனுவை வளைத்துத் தொடுத்த வாளியன்  மருகோனே

கலைமதி யப்புத் தரித்த வேணிய
ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
கழுகு மலைக்குட் சிறக்க மேவிய  பெருமாளே.

419. கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
மேந்து குவடு குழையும்  படிகாதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
தேங்கு கலவி யமுதுண்  டியல்மாதர்

வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
வாய்ந்த துயிலை மிகவுந்  தணியாத
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
நீந்தி அமல அடிவந்  தடைவேனோ

ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
மோங்கு ததியின் முழுகும்  பொருசூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாயந்த குருகு மலையில்
ஊர்ந்து மயில துலவுந்  தனிவேலா

வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
வேங்கை வடிவு மருவுங்  குமரேசா
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும்  பெருமாளே.

வள்ளியூர்

420. அல்லில் நேருமி  னதுதானும்
அல்ல தாகிய  உடல்மாயை
கல்லி னேரஅ வழிதோறுங்
கையு நானுமு   லையலாமோ
சொல்லி நேர்படு  முதுசூரர்
தொய்ய வூர்கெட  விடும்வேலா
வல்லி மாரிரு   புறமாக
வள்ளி யூருறை  பெருமாளே.

ஸ்ரீலங்கா (கதிர்காமம்)

421. திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப்  பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப்  பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப்  பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப்  பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப்  பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப்  பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப்  பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப்  பெருமாளே.

422. அலகின் மாறு மாறத கலதி பூத வேதாளி
அடைவில் ஞானி கோமாளி  அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய  மருளாகிப்

பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு  வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத  படிபாராய்

இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரில்
எறியும் வேலை மாறாத  திறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர்  சுதைபாகா

கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி  லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர்  பெருமாளே.

423. உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்  யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ்  வகையாவும்

கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலோடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி  ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ  தொருநாளே

குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக  வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும்  வரலாமோ

அடிக்குத் திரகார ராகிய
வரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு  வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய  பெருமாளே.

424. எதிரி லாத பத்தி  தனைமேவி
இனிய தாணி னைப்பை  யிருபோதும்
இதய வாரி திக்கு  ளுறவாகி
எனது ளேசி றக்க  அருள்வாயே
கதிர காம வெற்பி  லுறைவோனே
கனக மேரு வொத்த  புயவீரா
மதுர வாணி யுற்ற  கழலோனே
வழுதி கூனி மிர்த்த  பெருமாளே.

425. கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம்  மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம்  புயனோட

வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந்  தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன்  றிடுமோதான்

அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென்  றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண்  டருள்வாழ்வே

இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண்  டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினும்
ஏழைக் கிரங்கும்  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar