பதிவு செய்த நாள்
06
பிப்
2014
10:02
சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு, பக்தர்கள், பட்டு வஸ்திரங்களை நேரடியாக வழங்கலாம், என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர், கண்ணையா கூறினார். இதுகுறித்து, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், கண்ணையா கூறியதாவது: திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படும், பட்டு வஸ்திரங்கள், தரம் குறைந்ததாக இருக்கிறது எனவும், ஒரு பட்டு வஸ்திரம், 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு வாங்கப்பட்ட போதும், உரிய பட்டு முத்திரை, சரிகைகளில், தங்கம், செம்பு, வெள்ளி கலவை, ஒப்பந்தப்படி சரியாக இருக்குமா என்பதில் சந்தேகமாக இருக்கிறது என, அறங்காவலர்கள் குழு கூட்டத்தில், பலமுறை வலியுறுத்தி வந்தேன். ஒப்பந்தம் வெளிப்படையாக இருந்தால், தரமான பொருட்கள் தேவஸ்தானத்திற்கு, குறைந்த விலையில் பெற முடியும். வெங்கடேச பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் பக்தர்கள் மூலமும் பெறலாம் எனவும் வலியுறுத்தினேன். கோரிக்கையை, அறங்காவலர் குழு ஏற்றுக்கொண்டது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளுக்கு அணிவிக்கப்படும் பட்டு வஸ்திரத்திற்கான உரிய பட்டு முத்திரை, சரிகைகளில், செம்பு, வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றின் கலவை தரம் குறித்து, தேவஸ்தான நிர்வாகம் தர ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. வெங்கடேச பெருமாளுக்கு அணிவிக்கப்படும், பட்டு வஸ்திரங்கள், தேவஸ்தான நிர்வாகத்தின் தரக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, உரிய பட்டு முத்திரையுடன், பட்டு அங்கவஸ்திரங்களை பக்தர்கள் வழங்கலாம். இதற்கு, www.tirumala.org என்ற, தேவஸ்தான இணையதள முகவரியில், பக்தர்கள் தொடர்பு கொண்டு, தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.தேவஸ்தானத்திற்கு, 3 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கப்படும் போது, ஒப்பந்தம் பெறுவது குறித்து, இந்திய அளவில் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யவும், அறங்காவலர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. திருப்பதியில், அரிசி வகைகளை பாதுகாத்து வைப்பதற்கு, 5.30 கோடி ரூபாய் செலவில் குடோனும், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை உட்பட, இதர பொருட்களை சேமித்து வைப்பதற்கு, பாதுகாப்பாக, 5.70 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன குடோன் ஒன்றும் கட்டப்பட உள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஆண்டிற்கு, 62 கோடி ரூபாய் வரை தேவஸ்தானத்திற்கு நஷ்டம் என்றாலும், பக்தர்களின் நலன் கருதி, இலவச லட்டு மற்றும் விற்கப்படும் லட்டு அளவு குறைக்கப்படாமல் வழங்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, கண்ணையா கூறினார்.