பதிவு செய்த நாள்
14
மார்
2014
09:03
திருப்பதி: திருப்பதி, திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், நேற்று முன்தினம் முதல், வருடாந்திர தெப்போற்சவம் துவங்கியது. திருமலையில், ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி அன்று நிறைவு பெறும் விதம், ஐந்து நாட்கள் வருடாந்திர தெப்போற்சவம் நடத்துவது, தேவஸ்தானத்தின் வழக்கம். அதன் படி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தெப்போற்சவம் மிக விமரிசையாக துவங்கியது. இதற்காக, திருமலையில் உள்ள, ஸ்ரீவாரி புஷ்கரணியில் நீர் நிரப்பப்பட்டு, நீர் மட்டம் உயர்த்தப்பட்டது. மேலும், இம்முறை, தங்க மகர தோரணங்கள் (உற்சவ மூர்த்தியின் பின்புறம் உள்ள சிங்க முகத்திலான வளைவு) தெப்பத்தில் அமைக்கப்பட்டுஇருந்தது. முதல் நாளில், சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத, ஸ்ரீராமர் தெப்பத்தில், மூன்று முறை வலம் வந்து, திருக்குளக்கரையில் கூடியிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இவ்வுற்சவத்திற்காக, முதல், இரண்டு நாட்கள் சஹஸ்ர தீபாலங்கார சேவையும், அடுத்த, மூன்று நாட்கள், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவையையும், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த தெப்போற்சவம் பவுர்ணமி தினத்தன்று நிறைவு பெறுவதால், மாதந்தோறும் பவுர்ணமியன்று நடைபெறும், கருடசேவையை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இவ்வுற்சவத்தை முன்னிட்டு, திருக்குளம் மற்றும் திருமலை, மின் விளக்குகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், ஆந்திர மாநிலத்தின், சித்தூர் மாவட்டத்தில், மலை மேல் அமைந்துள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த கோவிலில், சுவாமி தரிசனம் செய்கின்றனர்.