திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் இன்று (12ம் தேதி) தொடங்கியது. 5 நாட்கள் விழா நடைபெறும். அதையொட்டி முதல் நாளான இன்று மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து 13–ம் தேதி ருக்மணி , ஸ்ரீகிருஷ்ணரும் சமேதரும், 14–ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியும் தெப்பத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். பின்னர் 15–ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். கடைசி நாளான 16–ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தெப்ப உற்சவத்தையொட்டி மேற்கண்ட நாட்களில் கோவிலில் வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருமலை– திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.