பதிவு செய்த நாள்
01
அக்
2014
10:10
திருப்பதி: திருமலையில், நேற்று கருட சேவை, வெகு விமரிசையாக நடந்தது. ஐந்து லட்சம் பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கெண்டனர்.திருமலை பிரம்மோற்சவம் விழாவில், ஐந்தாம் நாளான, நேற்று காலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்து கொண்டு வந்த, மலர் மாலைகள், கிளிகள், மலர் ஜடை, ஆகியவற்றை அணிந்து, கோபால கிருஷ்ணன் உடன் வர, மோகினி அவதாரத்தில், மலையப்ப சுவாமி, புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, மாட வீதியை வலம் வந்தார்.இரவு, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.
ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும், 32 கிலோ எடையுள்ள சகஸ்ர காசுமாலை, மகர கண்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை மலையப்ப சுவாமி அணிந்து, கருட வாகனத்தில் எழுந்தருளினார். மேள தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, மாட வீதிகளை வலம் வந்தார்.கருட சேவையில், சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடைகள் பயன்படுத்தப்பட்டன. கருட சேவையை காண, 5 லட்சம் பக்தர்கள், காலை முதல், மாட வீதியில் காத்திருந்தனர். அவர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.