ஸூர்யன், சந்த்ரன், நிலம், நீர், நெருப்பு, காற்று முதலியவைகளிடத்திலிருந்து உலகம் பெறும் உதவிகள் எண்ணிறந்தவை, பெரியோர் அவைகளைத் தேவதைகளாகக் கொண்டாடுகின்றார்கள். தாய் தந்தைகள் தனயர்களுக்குச் செய்யும் உதவிகள் பற்பல, அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள். அதே போல் கணவனுக்குப் பணிந்து பணிவிடை செய்து களிக்கும் கற்பரசிகளையும் எல்லோரும் தெய்வமாகக் கொண்டாட வேண்டும். கணவன் மனம் களிக்கப் பணி விடை செய்வது எளிதன்று. தாய் தந்தையருக்குத் தனயன் செய்யும் பணிவிடையினும் கற்புடைய மனைவி கணவனுக்குச் செய்யும் பணிவிடை பெரிது. பிறந்தகம் விட்டுக் கணவனில்லம் புகுந்து அங்குள்ள சுற்றத்தார்களின் சித்தம் கோணாது கணவனுக்கும் பணிவிடை செய்து களிப்பது எல்லாப் பெண்களுக்கும் எளிதில் நிறைவேறக்கூடியதன்று. அத்தகைய கற்பின் மங்கையர்களைப் பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பமும் இனிது வாழ்கின்றது. இம்முறையில் உலகும் பல நன்மைகளை பெறுகின்றது. ஆதலின் கற்பின் மங்கையர்களைத் தெய்வமாக உலகம் கொண்டாட வேண்டும்.
முன்னொரு காலத்தில் கவுசிகன் என்றோர் அந்தணச் சிறுவன் இருந்தான். தாய் தந்தையர் வயது முதிர்ந்த கிழவர்களாயிருந்தனர். அவர்களுக்குக் கவுசிகன் ஒருவனே ஸந்ததி. அவனை நம்பியே அவர்கள் வாழ்ந்தனர். ஆனால் கல்வித் துறைகளில் நல்ல பயிற்சியை எய்த வேண்டுமென்று கவுசிக னுக்குத் தோன்றி விட்டது தாய்தந்தையரைத் தனியே விட்டு விட்டுக் கல்வி பயிலச் சென்று விட்டான். அவனைப் பிரிந்த வருத்தத்தால் அவன் தாய் தந்தையர் கண்ணிழந்த குருடர்களாகி விட்டதை அவன் பெரிதாகக் கருதவில்லை. நான்மறைகளையும் நன்கறிந்தான். வ்யாகரணம் முதலிய சாஸ்த்ரங்களையும் உபநிஷத்துக்களையும் அறிந்தான். மேலும் மேலும் பயின்று கொண்டிருந்தான். கல்வித்துறைக்கு வேண்டிய நியமங்களில் ஒரு குறையுமின்றியிருந்தான். காட்டில் வஸித்து வந்தான். காலை வேளைகளில் அண்மையில் உள்ள சிற்றூர்களுக்குச் சென்று பலர் இல்லம் அணுகிப் பிச்சையெடுத்துச் சாப்பிட்டு வந்தான். ஒருநாள் அவ்வந்தணன் ஒரு பெரிய மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வேதமோதிக் கொண்டிருந்தான். மரத்தின் மேல் ஓர் கொக்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. தன் தலைக்கு மேல் இருந்த அக்கொக்கை அவன் கவனிக்கவில்லை. அது அவ்வந்தணன் மேல் எச்சம் இட்டு விட்டது. அவன் மேலே நோக்கினான். அக்கொக்கைக் கண்டான். அழித்துவிட வேண்டுமென நினைத்தான். சினந்து நோக்கினான். அச்சிறு பறவையிறந்து வீழ்ந்தது ஐயோ! இப்பறவை உயரே இருந்ததை அறியாமல் அதன் கீழே உட்கார்ந்தது என் தவறு. இது பறவையின் பிழையெனக் கருதி நான் இப்பறவையை அழித்து விட்டேன். என்று மிக வருந்தினான்; இரங்கினான் என் செய்வது?
வழக்கம்போல் பிச்சையெடுப்பதற்காகப் பக்கத்தூருக்குச் சென்றான். தூய்மை வாய்ந்த சில நற்குடும்பங்களில் சிறிது அன்னம் பிச்சையெடுத்தான். வழக்கமாகச் செல்லும் மற்றொரு குடும்பத்தையடைந்தான். பவதி பிக்ஷாம் தேஹி என்று வாயிலிருந்து கூவினான். அவ்வீட்டின் தலைவி பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கின்றேன். இதோ வந்து விட்டேன். சற்றிருங்கள். என்று சொல்லிக் கைகளைக் கழுவிக் கொண்டு பிச்சையிடுவதற்குச் சித்தம் செய்து கொண்டிருந்தாள். அதற்குள் அவள் கணவன் மிகப் பசியுடன் வீட்டிற்குள் நுழைந்தான். கணவனைக் கண்டதும் கைப்பணியை விட்டு விட்டுக் கணவனுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கி விட்டாள். அது நடுவில், வாயிலில் காத்திருக்கும் அந்தணனைக் கண்டாள். தான் அவனைக் காக்க வைத்தது அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது. நாணினாள். பிச்சையை எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தாள்.
நில் என்று கூறி நிறுத்திவிட்டாயே நல்லவளே! என்று கவுசிகன் கூறினான். ஆனால் சினத்தால் அவன் முகம் சிவந்தது. அதைக் கண்ட அவள்! அறிஞனே! பொறுக்குமாறு வேண்டுகிறேன். பசியால் வாடி வதங்கி வந்த கணவனுக்கு உபசாரம் செய்ய வேண்டியிருந்தது. என்றாள். ஆனால் அந்தணர்கள் உனக்குப் பெரியவர்களாகத் தோன்றவில்லை. கணவனே பெரியவனாய் விட்டான். இல்லறத்திலல்லவோ இருக்கின்றாய். அந்தணார்களை அவமதிக்கலாமா? இறுமாப்படைந்தவளே! இந்த்ரனும் அந்தணர்களை வணங்குகிறான், பெரியோரிடம் நீ பணிந்து ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை போலும் அந்தணர் அக்னிக்கொப்பானவர். சினப்பரேல் உலகையு மெரிப்பர். என்று கவுசிகன் கூறினான்.
அந்தண முனிவரே! நான் கொக்கல்லள், சினம் தவிரும் உம் கண்கள் சிவக்கலாம். என்னையொன்றும் செய்ய முடியாது. ப்ராஹ்மணர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள். என்று நான் நன்கறிவேன். அந்தணர் கோபத்துக்குக்கிலக்காகிக் கடல் குடிக்கத் தகுதியில்லாமல் உப்பாய் விட்டது. தண்டகவனம் என்றுமழியா நெருப்பால் இன்றும் அழிந்து கொண்டிருக்கிறது. ப்ராம்மணர்களைப் பழித்த வாதாபி அகஸ்தியரால் அழிந்தான் என்பதை எல்லாம் நான் அறிவேன். சினந்து சீறுவது போல் இரங்கியருளும்புரிவர் அந்தணர் தங்களை நிறுத்தித் தவறிழைத்துவிட்டேன் என்பது உண்மையே, ஆயினும் பொறுத்தருள வேண்டும். கணவன் பணிவிடை பெரிது, பதிசுச்ரூஷையின் பெருமையினாலே கொக்கு உம் கோபத்தீயால் எரிந்து விழுந்ததை நான் அறிய முடிந்தது. சினம் என்பது உடலிலுள்ள ஓர் பகைவன். சினத்தையும் அறியாமை யையும் விட்டவனே அந்தணன். உண்மைபேசுபவனே அந்தணன். தாய் தந்தை முதலியோரைப் பேணுபவனே அந்தணன். வருத்துவோரையும் வருத்தாதவனே அந்தணன். தன்னைப்போல் பிறரையும் நினைப்பவனே அந்தணன் அனைத்தையுமறிந்து இறுமாப்படையாதவனே அந்தணன், அறத்தின் நுண்மை எளிதில் அறியற்பால தன்று. நீவிர் அறத்தை நன்கறியவில்லையென்று நான் நினைக்கின்றேன். மிதிலையில் தர்மவ்யாதர் என்று ஒருவர் இருக்கின்றார். அவரிடம் சென்று அறத்தின் நுண்மையை நன்கறியும், அவர் அருள்புரிந்து கூறுவார். நான் கூறியவற்றைப் பொறுத்து விடும். அறத்தை வணங்குபவர். அங்கனைகளை அழிக்கக்கருதார். என்று அவ்வில்லத்தலைவி கூறினாள்.
நற்பண்பினளே! உன் பெருமையறிந்து பெரிதுமுவந்தேன், நீ பகர்ந்த வசவனைத்தும் என் நன்மைக்கே காரணமாகின்றது. உனக்கு மங்களம் உண்டாகட்டும். நான் தர்மவ்யாதரிடம் சென்று தர்மமறிகிறேன் என்று கூறி விடை பெற்றுக்கொண்டு கவுசிகன் தன் வீடு சேர்ந்தான்.
வெகுகாலத்திற்கு முன் நான்மறைகளையும் நன்கறிந்து நல்ல வன்மையும் பெற்றிருந்த ஓர் அந்தணன் இருந்தான். அவனுக்கு வில்வித்தையில் வல்லவனான ஓர் அரசன் அன்பார்ந்த தோழனாயிருந்தான். அவ்வரசனோடு பழகி அவ்வந்தணனும் வில்வித்தையில் வல்லவனாய் விட்டான். இருவரும் ஒரு நாள் வேட்டைக்காகக் காடு சென்றனர். அங்கே ஓர் ஆச்ரமம் இருந்தது. அதனருகிலிருந்த பல மிருகங்களை அவர்கள் அடித்தனர். ப்ராஹ்மணன் எய்த அம்புகளில் ஒன்று அங்கு புதர் அருகில் தவம் செய்து கொண்டிருந்த ஓர் முனிவரைத்தாக்கியது. நான் எவனுக்கும் யாதொரு தீமையும் புரியவில்லையே, எவன் எனக்கு இத்தீம்பிழைத்தான் என்று கூறிக்கொண்டே அம்முனிவர் கீழே விழுந்தார். மானென்று நினைத்துப் பாண ப்ரயோகம் செய்து முனிவரை வீழ்த்திவிட்ட அவ்வந்தணன் முனிவரருகில் ஓடினான். புரண்டு கதறிக் கொண்டிருக்கும் முனிவரைப் பார்த்தான். தான் செய்த தவற்றை நினைத்து வருந்தினான். தெரியாது தவறிழைத்துவிட்டேன் பொறுத்தருள வேண்டுமென்று முனிவரை வேண்டினான். முனி முனிந்தார். வேடனாய்ப் பிறக்கக் கடவாய் என்று அந்தணனைச் சபித்தார். தன்னை மன்னிக்குமாறு பார்ப்பனன் பன்முறை வேண்டினான். முனியின் சினம் சிறிது சிறதாகத் தணிந்தது. நானிட்ட சாபம் மாறுவதற்கில்லை. உண்மையில் நீ கொடியவன் அல்லன். ஆதலின் வேடப்பிறப்பலிலும் நீ நல்லறமறிந்த வனாயிருப்பாய், தாய்தந்தையர்களுக்குப் பணிவிடை செய்து நற்கதி பெறுவாய். முற்பிறப்øப் பற்றிய அறிவும் அப்பொழுது உனக்கு இருக்கும் வேடுவப்பிறப்பு முடிந்ததும் அந்தணனாய்ப் பிறப்பாய் என்று கூறினார்.
மிதிலைக்கருகில் ஓர் காட்டில் ஓர் வேடனும் வேடச்சியுமிருந்தார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள். முனிவரால் சபிக்கப்பட்ட முற்கூறிய அந்தணன் அவர்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்தான் நல்லறிவும் திறமையும் முற்பிறப்பறிவும் பெற்றிருந்தான். குலத்திற்குரிய தொழிலைச் செய்து வேண்டிய பொருள் ஈட்டினான். மிதிலை நகரத்திற்கே குடிவந்துவிட்டான். நான்கு கட்டுகள் உள்ள ஓர் பெரிய வீட்டைக் கட்டினான். வயோதிகர்களான தன் தாய் தந்தையர்களை அதில் இருத்திப் பூசித்தான். அவர்களை ஒருவேலையும் செய்யவிடுவதில்லை. வீட்டிற்கருகே ஒரு கசாப்புக்கடை அவனுடைய தாயிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டு அவ்வேடன் மான், பன்றி முதலிய விலங்குகளின் இறைச்சிகளை விற்றுப் பொருளீட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுதும் அவன் தூய்மைக்கு யாதொரு குறைவுமில்லாமலிருந்து, அதனால் அவரை எல்லோரும் தர்மவ்யாதர் என்று அழைத்தனர். கசாப்புக்கடையில் இருக்கிறார் என்று ஒருவரும் அவரை இகழ்ந்ததில்லை. மிதிலை மாத்திரமின்றி உலகமே அவரை அறிந்திருந்தது.
வீடு சென்ற கவுசிகன், தன் பார்வைத் தீயால் கொக்கு எரிந்து விழுந்ததை அக்கற்புடையாள் எவ்வாறு அறிந்தாள் என்று நினைத்து நினைத்து வியப்புற்றான். தான் அவள் திறத்துத் தன் சினத்தைக் காட்ட நினைத்த தவற்றையுணர்ந்தான். அவள் ஏவிய வண்ணம் தர்மவ்யாதரிடம் செல்ல நினைத்தான். அறநெறியின் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவள் தன்னைத் தர்மவ்யாதரிடம் அனுப்பியதாகப் பொதுவாய் எண்ணினான். அவள் அனுப்பியதன் உட்கருத்தை அப்பொழுதும் அக்கவுசிகன் உணரவில்லை. மிதிலைக்குச் சென்றான். அப்பொழுது மிதிலையில் ஜனகர் என்பவர் ஆண்டு கொண்டிருந்தார். அகழும் மதிலும் சூழ்ந்து அழகாய் விளங்கிய மிதிலைக்குள் கவுசிகன் நுழைந்தான். பெரிய வீதிகளும் ஆங்காங்கே தோரணங்களும் கோபுரங்களும் பெரிய மாளிகைகளும் காணப்பட்டன. மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். தான் தேடி வந்த தர்மவ்யாதர் அந்தணர் என்றும் அந்தணர் வம்சத்தில் இருப்பார் என்றும் முதலில் கவுசிகன் நினைத்தான். அங்கு சென்று அந்தணர்களைக் கேட்டான். தர்மவ்யாதர் உண்மையிலே வேடரென்றும் கசாப்புக்கடை வைத்துக்கொண்டு நாணயமாய் நல்வழியில் வாழ்கிறார் என்றும், அந்தணர் வாயிலாய் அறிந்தான். கசாப்புக்கடை உள்ளவிடத்தையடைந்தான். கடைநடுவில் மான், பன்றி முதலியவைகளின் இறைச்சிகளை விற்றுக்கொண்டு தர்மவ்யாதர் உட்கார்ந்து கொண்டிருந்தார். மாமிசம் வாங்க வந்தார்கள். அவரை சூழ்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பார்ப்பதற்கு அது தகுந்த தருணமென்றெனக் கவுசிகன் நினைத்தான். ஓர் தனியிடத்தில் நின்று கொண்டிருந்தான்.
இவ்விடம் தங்களுக்குத் தகுந்ததன்று, தங்களுக்கு விருப்பமாயின் என் வீட்டிற்குச் செல்வோம். என்று தர்மவ்யாதர் கூறினார். தர்மவ்யாதர் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வதின் உட்கருத்தையும் அந்தணன் அறியான். ஆயினும் அவ்வாறேயாகுக வென்று மகிழ்ச்சியுடன் கூறினான். வயதிலும் அறிவிலும் அறத்துறையிலும் மேம்பட்டு விளங்கும் தர்மவ்யாதர் கவுசிகனை முன்னிட்டுக்கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்து ஆசனத்திலிருத்தித் தான் அண்மையில் அமர்ந்தார்.
உமக்கு இத்தொழில் தகுதியற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. உம்முடைய இத்தொழிலைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். என்று கவுசிகன் கூறினான். என்னுடைய மூதாதையர் செய்து வந்த இத்தொழில் என குலத்திற்குரியது. என் குலதர்மத்தில் நான் இருக்கின்றேன். தாங்கள் இதில் வெறுப்புற வேண்டாம். நான் என் குலதர்மத்தை விடாமல் என் தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்கிறேன். உண்மை பேசுகிறேன். பிறர்பால் குறை கூறுவதில்லை. இயன்ற வரை ஐயமிடுகிறேன். அந்தணர் விருந்தினர் வேலையாட்கள் இவர்களை உண்பித்து மிகுந்ததை உண்கிறேன். ஜனகரின் ஆட்சியிலுள்ள இம்மிதிலையில் ஒவ்வொரு வரும் தம் தம் பணியைச் செவ்வனே செய்கின்றனர். மேலும் நான் ப்ராணிகளைக் கொல்வதில்லை. பிறர் கொன்றவற்றின் இறைச்சிகளை விற்கின்றேன். நான் புலால் உண்பதில்லை. என்னைக் கொண்டாடுபவருமுண்டு. குறைகூறுபவருமுண்டு. இருவகையினரையும் இயன்றவரை நற்செய்கையால் களிப்பிக்கின்றேன்.
பொதுவாக மனிதன் வீண்வம்பு வளர்த்தல் கூடாது. வேண்டப்படாமலே பிறருக்கு நன்மை செய்யவேண்டும். விருப்பு வெறுப்புக்கள் காரணமாய் அறத்தை விடல் கூடாது. பேறு பெறின் பெரிது மகிழ்தலாகாது. தீமையுறின் தபித்தலுமாகாது, கஷ்டங்கள் நேருகையில் அறிவை இழந்துவிடல் ஆகாது. பிறருடய தொழிலில் தலையிடல் தகாது. நல்லதென்று தெரிந்ததையே செய்தல் வேண்டும். தீங்கிழைத்தவன்பாலும் தீங்கிழைத்தலாகாது. இயன்றவரை இத்தகைய அறங்களில் நிலைத்திருக்கின்றேன்.
ரந்திதேவன் என்னுமரசனுடைய மடைப்பள்ளியில் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் ஆடுகள் கொல்லப்படுமென்றும் அன்னதானம் செய்யப்படுமென்றும் சொல்லுகிறார்கள்.
சாபமடைந்த ஸௌதாஸமன்னன் மனிதர்களையே கொன்று தின்றான்.
என் குலதர்மம் என்று நினைத்து நான் இதைச் செய்கிறேன்.
எது நல்லது எது தீயது என்று நாம் முடிவு செய்து விடல் முடியாது. பயிர்த்தொழில் நல்லதென்கிறார்கள் உழும் பொழுது எவ்வளவு உயிர்கள் இறக்கின்றன. நெல் கம்பு முதலியவைகளை உண்கிறார்கள். அதுவும் ஜீவஹிம்ஸையாகவில்லையா? குடிக்கும் தண்ணீரில் எத்துணை உயிர்கள் இருக்கின்றன. நடக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும், படுக்கும்பொழுதும் சாவெய்துவன எத்துணை? உயிர்களைக் கொல்லாதவன் உலகிலில்லை. கொல்லாமையை வ்ரதமாய்க் கொண்ட துறவிகளும் விடுபட்டவரில்லை. முயற்சியினால் சிறிது குறைவாயிருத்தல் கூடும். ஆதலின் நன்றோ தீதோ தன் அறத்தைத் தவறாதிழைத்தவன் புகழ் பெறுகிறான் என்று தர்மவ்யாதர் கூறினார். வியப்புற்ற கவுசிகன் மேன் மேலும் தர்மத்தைப் பற்றிய பல கேள்விகள் கேட்டான். எல்லாவற்றையும் நன்கு விளக்கினார் தர்மவ்யாதர், நான் இப்பொழுது செய்யும் அறத்தைப் பாருங்கள் உள்ளே வாருங்கள் என்று கூறிக் கவுசிகனை வீட்டின் உட்புறத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். தர்மவ்யாதரின் தாய்தந்தையர் அங்கு ஆஸனங்களில் வீற்றிருந்தனர். தர்மவ்யாதர் அவர்களை வணங்கினார். தங்கள் பிள்ளை தமக்குச் செய்யும் பணிவிடையால் மிகவும் மகிழ்ந்த தாய் தந்தையர் அவரை வாழ்த்தினர். தர்மவ்யாதர் தம்முடன் வந்த கவுசிகனைத் தாய்தந்தையருக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் அவ்வந்தணனுக்கு நல்வரவு கூறி உபசரித்தனர். அந்தணனும் அவர்களை உரிய முறையில் உபசரித்தான். அப்பொழுது தர்மவ்யாதர் கவுசிகனைப் பார்த்து, இவர்கள் எனக்குத் தைவம். தேவருக்குரிய உபசாரங்களை நான் இவர் திறத்துச் செய்கிறேன். உலகம் முப்பத்துமூன்று தேவர்களை வணங்குவது போல் நான் இவர்களை வணங்குகிறேன். நானும் என் மனைவி மக்களும் இவர்களுக்காக வாழ்கின்றோம். நானே இவர்களைக் குளிப்பாட்டுகிறேன். இவர்கள் கால்களைக் கழுவுகிறேன் உண்பிக்கிறேன். இனிய சொல் கூறுகிறேன். கடுஞ்சொல் கூறக் கனவிலும் நினைப்பதில்லை. இவர்களுக்குச் செய்யும் பணிவிடையால் நான் முக்காலமும் அறிந்தவனானேன். கணவனுக்குப் பணிவிடை செய்து திவ்யஜ்ஞானப் பெற்ற அப்பதிவ்ரதை உம்மை என்னிடம் அனுப்பியதும் பணிவிடையின் பெருமையை நான் உமக்கு உணர்த்த வேண்டுமென்பதற்காகத்தான். உம்பால் இரங்கி நான் என் தாய்தந்தையரை உமக்குக் காண்பித்தேன். உம் தாய் தந்தையர் உம்மையனுப்ப விரும்பவில்லையென்பதறிந்தும் நீர் அவர்களைவிட்டுப் படிக்கச் சென்றுவிட்டீர். உம் பிரிவையாற்றாது உம் தாய்தந்தையர் குருடர் ஆயினர். சென்று அவர்களுக்குப் பணிவிடை செய்யும். அறம் உம்மைக் கைவிடவேண்டாம். நீர் தபஸ்வியாயிருக்கின்றீர். பெரியோனாயிருக்கின்றீர். அறத்தில் எப்பொழுதும் பற்றுடையவராயுமிருக்கின்றீர். தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்யவில்லையாயின் இதெல்லாம் வீண். உம்முடைய நன்மையைக் கூறுகின்றேன். என்னை நம்பும், விரைந்துபோய் தாய் தந்தையார்க்குப் பணிவிடை செய்யுமெ ன்று தர்மவ்யாதர் கூறினார். நீங்கள் சொன்னது உண்மை. இதில் ஐயமேதுமில்லை. நான் செய்த நல்வினையால் நான் இங்கு வந்தேன். நரகத்தில் விழுபவனைத் தடுத்துக் காத்தீர்கள். தங்கள் ஆணைப்படி தாய்தந்தையர்க்குப் பணிவிடை புரிகிறேன். தாங்கள் அந்தணரும் அறியா அறத்தை அறிந்திருக்கின்றீர்கள். தாங்கள் உண்மையில் வேட இனத்தைச் சேர்ந்தவர் அல்லர். உண்மையை அறிய விரும்புகிறேன். என்று கவுசிகன் கூறினான். தம் வரலாற னைத்தையும் தர்மவ்யாதர் கூறினார். தங்களைப் பற்றி வருந்தத் தேவையில்லை. தாங்கள் அறிவினால் த்ருப்தியடைந்திருக்கீறீர்கள். உங்களுக்கு மங்களம் இருக்கட்டும். நான் போய் வருகின்றேன் என்று கவுசிகன் விடை பெற்றுக் கொண்டான். அப்படியே ஆகுக என்று கூறித் தர்மவ்யாதர் கவுசிகனை வணங்கினார். கவுசிகன் தர்மவ்யாதரைப் ப்ரதக்ஷிணம் செய்து அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு தன்னில்லம் சேர்ந்து தாய் தந்தையர்க்குப் பணிவிடை செய்து நற்கதி பெற்றான்.