பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
04:06
பரீட்சித்துவுக்கு ஜனமேஜயன் தவிர சலன், தளன் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் சலன் தேரிலேறி வேட்டைக்குப் புறப்பட்டான். தேரின் தட தடப்பில், குதிரைகளின் கனைப்பில் மிருகங்கள் புதர்களில் பதுங்கிக் கொண்டன. தேரோட்டி சலிப்புடன், வாம்யக் குதிரைகளானால் கனைக்காமல், இறக்கை முளைத்தது போல் பறக்கும் என்று கூற, சலன் வாம்யக் குதிரைகளா? அவை எங்கு உள்ளன? எப்படி இருக்கும்? என்று கேட்டான். தேரோட்டி, அரசே! அது ரிஷிமுலம், சென்ற முறை நான் நீரருந்த வெகு தூரம் சென்றபோது வெள்ளி நிறத்தில் இரு புரவிகளைக் கண்டேன். அந்த ரகசியத்தை நான் வெளியிட்டால் மாண்டு போவேன் என முனிவர் சபித்தார். தாங்கள் எனக்கு உயிர் பிச்சை அளிக்க வேண்டும் என மண்டியிட்டு வேண்டினான்.
சாரதியே! உன் வாழ்நாள் இன்று முடிய வேண்டுமென்பது விதி. உன்னை நானே கொன்றேன் என்ற பழிக்கு என்னை ஆளாக்க வேண்டாம். என இரக்கமின்றிக் கேட்டான் சலன். அரசே! வாம முனிவரின் அச்வங்கள் அவை என்றவன், ரிஷயின் இருப்பிடத்தைக் குறிப்பிட, கீழே விழுந்து மாய்ந்தான். சலன் வாம ரிஷியின் இருப்பிடம் சென்றான். தூரத்திலிருந்தே வெள்ளிக் குதிரைகளின் பளபளப்பு கண்களைக் கூச வைத்தன. சலன் ரிஷியை வணங்கி, உங்களது வாம்யப் பரிகளைத் தேரில் பூட்டி வேட்டையாட விரும்புகிறேன். அந்தி சாய்வதற்குள் இங்கு கொண்டு வந்து கட்டிவிடுகிறேன் என்றான். வாம முனிவர், பரீட்சித்தின் குலத்தோன்றலே, வாக்குறுதி முக்கியம். கூட்டிச் செல் என்றார். சலன் குதிரைகளைத் தேரில் பூட்டிச் செலுத்தினான். சலுனக்குக் கொழுத்த வேட்டையில் அகந்தை நிறைந்தது. இப்படிப் பட்ட தந்திர அஸ்வங்கள் ஆசிரமவாசிக்கு எதற்கு? பதிலுக்குப் பத்துப் பசுக்களையும், இரண்டு பஞ்ச கல்யாணிக் குதிரைகளையும் அனுப்பி விடலாம். என்று தீர்மானித்துக் கொண்டான்.
சந்திரன் ஆகாயத்தில் சஞ்சரித்தும் கொற்றவன் குதிரைகளோடு திரும்பாதது கண்டு வாமமுனிவர் சினமுற்றார். ஆத்ரேயா, புரவிகளை அழைத்து வா என ஆணை பிறப்பித்தார். சீடன் சலமகாராஜாவிடம் சென்று பரிசுகளைக் கேட்டதும் அரசன், கழுதைகளைக் கொண்டு போ... பொதி சுமக்கும் எனக் கூறினான். முனிவர் அரசவை சென்று கமண்டல நீரை மந்திரம் ஜபித்துத் தரையில் விட்டார். மன்னன் உறையிலிருந்து வாளை உருவுவதற்குள், நீர் தெளித்த இடத்திலிருந்து நான்கு ராட்சதர்கள் தோன்றி அரசனின் ஆயுளை முடித்து மறைந்தனர். இறக்கும் சமயம் சலன் உரக்க, தம்பீ தளா, குதிரைகளைக் கொடுப்பது குலத்துக்கே இழுக்கு எனக் கூறிச் சாய்ந்தான்.
தளனே! பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே! பெரியோரை மதிப்பது புகழைத் தரும். வாம்யக் குதிரைகள் எனக்கு சொந்தமானவை என்றார் முனிவர், குத்துவாளை முனிவரைக் குறிப்பார்த்து எறிந்தான் தளன். வாளே! அப்படியே திரும்பி இவனது பத்து வயது பாலகன் சினேயஜித்தைத் தாக்கு எனக் கட்டளையிட்டார் முனிவர். தலை சீவிக்கொண்டிருந்த புதல்வன் மார்பில் குத்துக் கத்தி பாய்ந்து சாகவும், ராணி கதறியபடி அரசவை வந்தாள். மூர்க்கமடைந்த தளன், இன்னொரு வாளை எடுக்க, உன் கை செயலிழந்து போகட்டும் என சபித்தார் ரிஷி. அசைக்க முடியாத கையோடு நிற்கும் கணவனைக் கண்டு அரசி துக்கம் பொங்க, முனிவரே, சினம் விடுங்கள். உங்கள் மாயப்புரவிகளைக் கூட்டிச் செல்லுங்கள். இரு அஸ்வங்கள் இரு வாரிசுகளை முடித்து விட்டதோடு போதும் என கைகூப்பி வணங்கினாள். அமைச்சர் புரவிகளை ஒப்படைக்க முனிவர், தளனே! வாளை வீசிய கை மற்றவரை வாழ்விக்கப் பயன்படட்டும் என வாழ்த்த, தளனும் செயல்பட்ட கைகளைக் கூப்பி அவரை வணங்கினான்.