பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
05:07
பல்வேறு வழிகளில் நாம் கடவுளை உபாசித்துக்காட்சியும் அருளும் பெறலாம். ஆற்றங்கரையில் பல படித்துறைகள் உண்டல்லவா? ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பல படித்துறைகள் உண்டு. எந்தப் படித்துறையிலும் இறங்கித் தண்ணீர் மொண்டு கொள்ளலாம், குளிக்கலாம். எந்த சமயத்தையும் எந்த முறையையும் தூய உள்ளத்துடனும் பக்தியுடனும் பின்பற்றினால் போதும், ஆண்டவனை அடையலாம். ஒரு வீட்டின் மேல் மாடிக்குப் படிக்கட்டு வழியாக ஏறலாம்; மூங்கில் வைத்துத் தொத்தியும் ஏறலாம்; கயிற்றைப் போட்டு அதைப் பிடித்தும் ஏறலாம். இவ்வாறே பல சமயங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன. அவரவர் தத்தம் மதத்தின்படி கடவுளை உபாசித்தல் சித்தல் நலம், கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்து மார்க்கத்தையும், முஸ்லீம் மக்கள் முகம்மது நபி காட்டிய மார்க்கத்தையும், இந்துக்கள் ரிஷிகள் உபதேசித்த முறையையும் அனுசரிப்பதே மேலானது. பக்தியோடு வழிபடும் மக்கள் எந்த மதத்தினராயினும் சரி, பிற மதத்தினரை மிக்க வினயத்துடன் கவுரவிப்பார்கள். எல்லாச் சமயங்களுமே நம்மைப் பரம்பொருளிடத்தில் சேர்ப்பிக்கும்.
இவ்வாறு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் நூறு வருஷங்களுக்கு முன் உபதேசித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அசோக மன்னர் எழுதிவைத்த கல் சாஸனத்திலும் இதையே காண்கிறோம். தேவர்களின் அன்புக்குரிய பிரியதரிசனன் சாஸனம்; அரசர் எல்லாத் துறவிகளையும் இல்லறம் நடத்தும் கிரஹஸ்தர்களையும் அவர்கள் எந்த மதத்தினராயினும் அவர்களுக்குத் தக்க தானாதிகளைத் தந்தும் மற்ற வழிகளில் கவுரவித்தும் சந்தோஷப் படுத்துகிறார். மகாராஜாவுக்கு அதிக மகிழ்ச்சி தருவது எதுவென்றால், எல்லா மதத்தினரும் தத்தம் முறையில் தத்தம் ஆத்ம சக்தியை விருத்தி செய்து கொள்வதே பல துறைகளின் மூலமாக ஒருவன் இந்த ஆத்ம சக்திப் பெருக்கத்தை அடையலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. அது யாதெனில், தன் சமயத்தை மேம்படுத்துவதற்காகப் பிறர் சமயத்தைத் தூஷிக்கத் தோன்றும்; அவ்வாறு செய்யாமல் சமயம் வாய்த்த போதெல்லாம் பிற மதத்தினரைக் கவுரவித்துப் பாராட்ட வேண்டும். இப்படிச் செய்வதினால் ஒருவன் பிற மதத்தினருக்கு உதவி செய்வதோடன்றித் தன் சமயத்தின் பெருமையையும் வளர்ப்பான். இப்படி செய்யாமல் ஒருவன் பிற சமயங்களைக் குறைத்துப் பேசியும் பிற சமயத்தினரை அவமதித்தும் நடந்துகொண்டால் தன் சமயத்துக்கே தீங்கு இழைப்பவனாவான். பிறர் கொள்கையை ஒருவன் தூஷிப்பதால் தன் மதத்துக்குப் பெருமை சம்பாதிப்பானா? ஒரு நாளும் இல்லை. கட்டாயம் தன்னுடைய மார்க்கத்தின் புகழ் இதனால் தாழ்ச்சி அடையும்; பெருமை அடையாது; ஒவ்வொரு சமயத்தினரும் தத்தம் கொள்கைகளை நன்றாகக் கற்றுணர்ந்து அவ்வழியில் பக்தியை விருத்தி செய்து கொள்ள வேண்டும். இது அசோக ராஜா பிரியதரிசனனுடைய கோரிக்கை என்று அனைவரும் பிரசாரம் செய்வார்களாக.
பல்லாயிரம் வருஷங்களுக்குமுன் பகவத்கீதையில் கண்ணன் சொன்ன உபதேசமும், அதற்கு பின் அசோக மன்னருடைய பன்னிரண்டாம் கல் சாஸனமும், பிறகு ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேசமும், நம்முடைய வாழ்நாளில் அவதரித்து நமக்குப் பல துறைகளிலும் வழி காட்டிய காந்தியடிகள் இட்ட ஆணையும் எல்லாம் ஒரே விதமாகவும் தெளிவாகவும் இருப்பதை உணர்ந்து அந்த ஆணைப்படி உறுதியாக நின்று நடந்து கொள்வோமாக.
இரண்டு பிள்ளைகள் மரத்தின்மேல் இருந்த ஒரு ஓணானின் நிறத்தைப் பற்றிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். நன்றாகப் பார், அந்த ஓணான் சிவப்பு நிறம்: நீ குருடனைப்போல் மஞ்சள் என்றாயே! என்றான் ஒருவன். பைத்தியக்காரனே! நீதான் குருடன். மஞ்சள் ஓணானைச் சிவப்பு என்கிறாய்! என்றான் மற்றவன். இப்படி விவாதம் முற்றிப்போயிற்று, பிறகு அவர்கள் அந்தத் தோப்பில் ஒரு குடிசையில் இருந்த கிழவியைக்கண்டு அவளை மத்தியஸ்தம் செய்யச் சொன்னார்கள். உங்களுக்கு என்ன சண்டை? என்று கிழவி கேட்டாள். அந்த மரத்தில் பார்! ஒரு சிவப்பு ஓணான் இருக்கிறது. இந்தப் பயல் அது மஞ்சள் என்று சொல்கிறான். என்னைக் குருடன் என்கிறான். நீ பார்த்துச் சொல். சொன்னால் ஒருவேளை அந்த மடையன் ஒப்புக்கொள்வான் என்றான் சிவப்புக் கட்சிக்காரன். அம்மா! நீயே பார்த்துச் சொல், மஞ்சள் ஓணானை இந்த முரடன் சிவப்பு, சிவப்பு என்று உளறிக் கொண்டிருக்கிறான் என்றான் மஞ்சள் வர்ண வாதி.
கிழவி சிரித்தாள்.
நீங்கள் இருவர் சொல்வதும் சரியே. வீண் சண்டை பிடிக்காதீர்கள். அந்த ஓணான் பல நிறம் கொள்ளும் பச்சோந்தி. அதன் நிறம் அடிக்கடி மாறுவதை நான் கண்டிருக்கிறேன். போங்கள், சண்டை போடவேண்டாம் என்றாள்.
கடவுளைப் பக்திக் கண்ணால் கண்டு அனுபவித்த மகான்களுக்குக் கடவுளின் உருவமும் அருவமும் பல உருவங்களும் தெரியும். கடவுளைக் காணாமல் பேச்சில் வல்லமை காட்டும் சமய வாதிகளுக்கு ஆண்டவன் சொரூபம் தெரியமாட்டாது. தாங்கள் அகங்காரத்தின் சொரூபத்தையே அவர்கள் கடவுளாகப் பாவித்து வீண் பேச்சில் காலம் கழிப்பார்கள்.
நான்கு கபோதிகள் ஒரு மடாதிபதியின் சிப்பந்திக் கூட்டத்தில் பிச்சை எடுக்கப்போனார்கள். அங்கே இருந்த யானையைத் தடவித் தடவிப் பார்த்தார்கள், யானைக்கார மாவுத்தன் இவர்களை வேடிக்கை செய்து கொண்டிருந்தான். எப்படி யிருக்கிறது யானை? என்று கேட்டான். காலைத் தடவிப் பார்த்த குருடன் கம்பம் மாதிரி இருக்கிறது இந்த மிருகம் என்றான். சீச்சீ! மரக் கிளையப்போல் அல்லவா இருக்கிறது? இதைப் போய்க் கம்பம்போல இருக்கிறது. என்கிறாயே என்றன் இரண்டாம் குருடன், இவன் தும்பிக்கையைத் தடவிப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னான்.
என்ன நீங்கள் சொல்லுகிறீர்கள்? இது ஒரு பீப்பாய் மாதிரியல்லவோ இருக்கிறது? என்றான் யானையின் வயிற்றைத் தடவிக்கொண்டிருந்த மூன்றாம் கபோதி. நன்றாய்ச் சொல்லுகிறீர்கள்? இதோ ஒரு முறம் போல் இருக்கும் பிராணியை நீங்கள் பீப்பாய் என்றும், தடியென்றும், கம்பம் என்றும் உளறுகிறீர்களே! என்றான் யானையின் காதைத் தடவிக் கொண்டிருந்த நான் காம் குருடன், பரம்பொருளின் சொரூபத்தைப் பற்றிச் சண்டைபோடும் குருடர்களின் அறிவும் இம்மட்டே.