பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
05:07
சித்த சுத்தி: அழகிய ஒரு ஸ்திரீயைப் பார்க்கும்போது உலக மாதாவான தேவியைத் தியானிக்க வேண்டும். முன் நிற்கும் ஸ்திரீ உலக மாதாவின் பல உருவங்களில் ஒன்று என்று நினைவூட்டிக்கொண்டு, இது தேவியின் அவதாரம், உலக மாதா அழகாக இல்லாமல் வேறு எப்படியிருப்பாள்? அன்புக்குரிய என் தாய் மகாதேவி எனக்குத் தரிசனம் தருகிறாள் என்று முன் நிற்கும் தாயை வணங்கவேண்டும். உள்ளத்தைக் குழந்தை பாவத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும். தாயைக் கண்டால் வேறு எண்ணங்களுக்கு இடம் ஏது? இந்த உபாயத்தைத்தான் ராமகிருஷ்ணர் முதலிலிருந்து கையாண்டார். விவேகமும் கல்வியும் பெற்றவர்களுங்கூடக் காமவேகத்துக்கு இரையாகி விடுவது உண்டு. இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள பகவான் ராமகிருஷ்ணர் உபதேசித்திருக்கும் இந்த உபாயம் மிகச் சிறந்த சாதனமாகும்.
பெண்ணுருவத்தைத் துவேஷிக்கலாகாது. பெண்களைத் தாழ்த்தியும் பேசலாகாது. வஞ்சக உருவம் என்று ஸ்திரீகளை இகழ்வது தவறு. தாயை வெறுக்காலாமா, இகழலாமா? மகாபுனிதமான தேவியின் அவதாரம். இவள் உனக்குத் தாய். அனைவருக்கும் தாய், மகாசக்தி, உலகத்துக்கு மாதா, எங்கும் பரவி நிற்கும் பரம்பொருளை இந்த உருவம் எடுத்து நிற்கிறது. அதன் சவுந்தர்யமும் புன்சிரிப்பும் தாய்க்குள்ள இயற்கையான பிரியத்தின் அடையாளம். தேவியை வணங்கு, காமம் மறைந்து போகும். பகவான் ராமகிருஷ்ணர் உபதேசித்த இந்த உபாயத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாருங்கள்; மனம் தூய்மைப் படுவதை உடனே உணர்வீர்கள்.
சட்டியும் கரண்டியும் துடுப்பும் எல்லாம் இருந்தும் நீ எழுந்து சமைத்தா லல்லவோ உணவு ஆகும்? சாமக்கிரிப் பட்டியலை வாசித்துக் கொண்டிருப்பதில் பண்டம் உண்டாகாது. உன் முயற்சி யில்லாமல் போனால் உபதேசங்கள் என்ன செய்யும்? பக்தி நெறியில் மனதைச் செலுத்து. அழகிய பெண்ணுருவத்தைக் கண்டு மனம் தடுமாறினால் உடனே அசோகவனத்தில் மரத்தடியில் தவமிருந்த சீதா தேவியைத் தியானித்துக்கொள். ராக்ஷசர்களோடு சேருவாயா? அல்லது அநுமன் காலில் வீழ்ந்து உன் உள்ளத்திலுள்ள மாசை ஒப்புக்கொண்டு தாயின் அருளைத் தேடுவாயா? தேவி இந்த உருவத்தில் நின்று, உன் பக்தியை அல்லவோ கேட்கிறாள். மூர்க்கனைப்போல் உன் காமத்தைக் கிளப்பிக் கொள்ளாதே! பொய்யை மெய்யாகக் கருதி மாளும் வழியைத் தேடிக் கொள்ளாதே!
நன்மைக்கும் தீமைக்கும் ஊற்று நம் உள்ளத்தில் இருக்கிறது. அங்கே குடிகொள்ளும் எண்ணங்களே புறச் செயல்களாக உருவம் எடுக்கின்றன. புறச் செயல் தான் பெரிது. உள்ளத்திலிருப்பதை யாரும் அறியவில்லை யென்று. உள்ளத்தை வரவர அழுக்குக் குட்டையாய்ப் போகவிடாதே. அப்படிச் செய்தால் வாழ்க்கைச் செயல்கள் அனைத்தும் தப்பமுடியாத வழியில் கெட்டுப் போகும். குடி நீர் எடுக்கும் கிணற்றில் அழுக்கு சேரும்படி விட்டால் ஊரின் ஆரோக்கிய நிலை கெட்டுப்போவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் இதுவும். நண்பர்கள் இரண்டுபேர் தெருவில் காரியம் ஒன்றுமில்லாமல் போய்க்கொண்டிருந்தபோது ஒரு வீட்டில் யாரோ புராணம் படித்துக்கொண்டிருக்க, அதை பக்தர் கூட்டம் கூடிக் கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
வாடா! நாமும் போய்க் கதை கேட்கலாம் என்று அழைத்தான் திருவேங்கடம்.
இந்த ஹரிகதை காலட்சேபம் எனக்குப் பீடிக்காது. இதனால் என்ன பிரயோஜனம்? சும்மா அழுது கொண்டு நடக்காத கதையை யெல்லாம் சொல்லிக் கொண்டு காலம் கழிக்கிறார்கள். அதோ அங்கே தாசித்தெருவுக்குப் போகலாம். வா! அங்கே உல்லாசமாக இன்று மாலையைக் கழித்து விடலாம். நம்முடைய கஷ்டம் இருக்கவே இருக்கிறது. ஒரு நாள் தமாஷாக அனுபவிக்கலாமல்லவா? என்றான் சாம்பன்.
திருவேங்கடம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு அது வேண்டாமப்பா! நீ வேண்டுமானால் போ, நான் இவ்விடம் உட்கார்ந்து ஹரிகதை கேட்கிறேன் என்று சொல்ல, இருவரும் பிரிந்து போனார்கள். சாம்பன் தாசித் தெருவுக்குப் போனான். திருவேங்கடம் பாகவதர் கதை சொல்லும் திண்ணைக் கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டான்.
தாசி வீட்டுக்குப் போன சாம்பனுக்கு அன்று ஏனோ மனதில் சந்தோஷம் உண்டாகவில்லை. இங்கே ஏன் வந்து சிக்கிக்கொண்டேன்? ஹரிகதைக்கே நானும் போயிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று எண்ணி வருத்தப்பட்டான். அங்கு நான்குபேர் கூடிச் சீட்டு ஆடிக்கொண்டும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டுமிருந்தார்கள். அவர்களோடு இவனும் கலந்து உட்கார்ந்தான். ஆனால் மனம் அங்கே இல்லை. திண்ணையில் பாகவதர் கூட்டத்து நினைப்பாகவே இருந்தான்.
திருவேங்கடமோ காலட்சேபக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தாலும் அவனுடைய உள்ளம் கதையில் சொல்லவில்லை. பாகவதர் நன்றாகப் பாடவில்லை யென்று அவர் குரல் கம்மியிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தானே யொழிய, கதையில் அவனுக்குப் பிடிப்புண்டாகவில்லை. சாம்பன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பானோ? எவ்வளவு சந்தோஷமாக இருப்பானோ? நானும் அவனோடு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தான். சாம்பனைப்பற்றியும் அவன் போயிருக்கும் இடத்தைப்பற்றியும் அங்குள்ள சிநேகிதர்களைப் பற்றியும் தாசிகளைப்பற்றியுமே யோசித்துக் கொண்டிருந்தான். பாகவதர் கதையில் கவனமேயில்லாமல் அவன் மனம் தாசி வீட்டிலேயே இருந்தது.
தாசி வீட்டில் இருந்தாலும் சாம்பனுடைய மனம் ஹரிகதா காலட்சேபம் நடக்கும் திண்ணையில் திருவேங்கடத்துடனேயே இருந்தது. திருவேங்கடம் எவ்வளவு சந்தோஷமாக இருப்பான்? புண்ணியமும் சம்பாதித்து விட்டான். நான் இங்கே மடையர்கள் கூட்டத்தில் இருக்கிறேனே என்று எண்ணிக் கொண்டே காலங் கழித்தான்.
உண்மையில் திருவேங்கடம் பக்தர் கூட்டத்திலிருந்தாலும் மனத் தூய்மை இல்லாதபடியால் தாசி வீட்டுக்குப்போன பாவத்தை அனுபவித்தான். சாம்பன் தாசியின் வீட்டில் இருந்தாலும் பக்தர் கூட்டத்து நினைப்பிலிருந்தால் ஓரளவு தூய்மை அடைந்தான்; போகக் கூடாத இடத்துக்குப் போயிருந்தாலும் நாசமடையாமல் தப்பிப் பிழைத்தான்.
பக்தி மார்க்கம்
பகவான் ராமகிருஷ்ணர் ஒரு சீடருக்குச் சொல்லுகிறார், உனக்கு முன்னால் நான் இருக்கிறேன் அல்லவா? ஆனால் என் முகத்துக்கு முன்னால் ஒரு துணியைப் பிடித்துக் கொண்டேனானால் என்னை நீ காண்பதில்லை. உடனே நான் மறைந்து போகிறேன். முன்னைப் போலவே நான் உனக்கு அருகிலேயே இருந்து வருகிறேன். ஆயினும் துணிக்குப் பின் நான் மறைந்து உன் கண்ணுக்கு இல்லாமற் போகிறேன். இவ்வாறே ஈசுவரன் உனக்கும் எனக்கும் அனைவருக்கும் வெகு அண்மையிலே இருக்கிறான்; மற்ற எப்பொருளையும் விடக்கிட்டத்திலே எப்போதும் இருக்கிறான். ஆனால் நான் என்னும் ஒரு திரை அவனை மறைத்து விடுகிறது. உன் கண்ணுக்கு முன்னால் ஒரு சிறு துணியை வைத்துக் கொண்டால் பெரிய மலையும் மறைந்து போகிறது. அகங்காரம், ஆணவம் என்று சொல்லப்படும் இந்தத் திரையை நாம் பிடித்துக் கொண்டிருக்கும் வரையில் நாம் கடவுளைக் காணமுடியாது. நான் என்பது ஒழிந்தால் பளிச்சென்று ஆண்டவன் தோன்றுவான்.
அருள் ஒருவன் பேரில் வீசினால் அவன் தன் செயல் அனைத்தும் ஈசன் செயல் என்றும், நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாம் அந்தப் பெருங் கூத்தனின் கூத்து என்றும் உணர்வான். இந்த ஞானம் ஒருவன் பெற்றுவிட்டால் அவன் ஜீவன் முக்தனாகி விடுகிறான். அதாவது உடலுடன் இருக்கும்போதே முக்தி அடைந்து விடுகிறான். அவனுக்குப் பயம் என்பது கிடையாது; துயரம் என்பதும் இல்லை.
நன்றாக ஈடுபட்ட பக்தன் அடிக்கடி தனக்குத் தானே நினைவூட்டிக் கொள்ளுவான்; ஐயனே, நீதான் எல்லாச் செயலும் செய்பவன், நான் செய்வது ஒன்றும் இல்லை. பொம்மைபோல் ஆட்டப் படுகிறேன். நீதான் என்னைச் செய்விக்கிறாய்; அனைத்தும் உன்னுடைய மகிமை. நான் எந்த வேலையையாவது நன்றாகச் செய்தேனானால், அது உன்னுடைய சிறப்பு; வேறொன்றுமில்லை. இந்த வீடு, இந்தக் குடும்பம் என்னுடையது அல்ல, இவை உன்னுடைய பொருள்கள், உன் இச்சைப்படி பணி செய்யும் ஆள் நான். உன் ஆணைப்படி பணி செய்வதே என் உரிமையும் என் மகிழ்ச்சியும்.
இப்படி அடிக்கடி நினைவூட்டிக்கொண்டு, உண்மையான பக்தியுடன் வாழ்க்கை நடத்தினோமானால் நான் என்னும் திரை ஒழிந்து பெருங்காட்சி அடைவோம். நான் என்பது இரண்டு விதமானதாகும். ஒன்று பக்குவப்பட்டுப் பழுத்த பக்தியோடு கலந்த நான் என்கிற உணர்ச்சி, மற்றொன்று பழுக்காத ஆணவம், என் வீடு, என் குழந்தை, என் மனைவி, என் உடல், என் சொத்து, என் புகழ் இவை போன்ற எண்ணங்கள் கூடியது பழுக்காத அகங்காரம் இது கடவுளை மறைக்கிற திரை.
ஆண்டவன் ஆணைப்படி பணி செய்பவன் நான், இவை அனைத்தும் அவன் சொத்து, அவன் உரிமை, அவன் சிறப்பு, நான் அவனுடைய பணியாள்; என் மகிழ்ச்சி அவனுடைய பணியைச் செய்வது என்று பக்தன் தன் வாழ்க்கையை நடத்துவான். அத்தகைய வாழ்க்கையின் பயனாக ஆணவமானது கனிந்த பழம் போலாகி விடும், நாளடைவில் அது உதிர்ந்து போகும். பக்தன் ஜீவன்முக்த நிலையை அடைவான்.
நான் என்னும் எண்ணத்தை எளிதில் அகற்றி விடமுடியாது. அறிவும் அத்துவைத சாஸ்திரப் படிப்பும் இருந்தால் மட்டும் போதாது. தான் ஈசனுடைய சேவகன் என்று முழுதும் மாற்றிக்கொண்டு பக்தி வாழ்க்கை வாழவேண்டும். பக்தனுடைய நான் தன்மையில் குற்றமில்லை. குழந்தையுடைய நான் எவ்வளவு குற்றமற்றதோ அதைப் போன்றது. பழுக்காத அகங்காரத்தைத்தான் ஒழிக்க வேண்டும். பக்தனுடைய நான் உணர்ச்சியானது கடவுளண்டை கொண்டு போய்ச் சேர்க்கும். பக்தி நெறியில் நின்றவனுடைய உள்ளத்திலும் ஓரளவு நான் என்பது தங்கினாலும் அது ஆண்டவனுடைய அடிமையாக நிற்கிறது. அதனால் குற்றமில்லை, பக்தி மார்க்கம் மிகச் சிறந்த வழி.
உள்ளிப்பூண்டு வைத்திருந்த பாத்திரத்தை எவ்வளவு கழுவினாலும் நாற்றம் இருந்து கொண்டேயிருப்பதைக் காண்கிறோம். அதைப் போலவே அகங்காரமும், அது பொல்லாதது. மற்றவர்கள் தங்கள் அகங்காரத்தை நீக்கிக் கொண்டாலும் கொள்ளலாம். துறவியின் பாடுவெகு கஷ்டம் நான் என்பதை பக்தி வழியில் செலுத்தி மெள்ளத் திருத்திக்கொண்டு போனால் பக்குவமடைந்து பழுத்துத் தளர்ச்சி யடைந்து நீங்கும்.
படித்துப் பட்டம் பெற்ற வைத்தியர் ஒருவர் வந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையைப் பார்த்து விட்டு, அதன் தாயிடம், கவலை வேண்டாம். நான் சொஸ்தப்படுத்தி விடுகிறேன். குழந்தையின் உயிருக்கு நான் பொறுப்பு என்று கூறுகிறார். இப்படி வைத்தியர் பேசும்போது ஆண்டவன் நகைக்கிறான் என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், உயிருக்குக் காவலும் எஜமானனும் வைத்தியன் அல்ல, அது ஆண்டவனுடைய திருவிளையாடல்.
அண்ணன் தம்பி இருவர், ஒரு குடும்பமாக இனி மேல் வாழமுடியாது என்று தீர்மானித்து நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டார்கள். கயிற்றைப் பிடித்து வயலை அளந்து இது உன்னுடைய நிலம். தம்பி!- இது என்னுடைய நிலம் என்று அண்ணன் சொல்லுகிறான். அப்போது ஆண்டவன் சிரிக்கிறான் என்கிறார் பகவான் ராமகிருஷ்ணர், நிலையும் சுதந்திரமும் அற்ற ஒரு ஜீவன் இது என்னுடையது என்று பேசும்போது ஆண்டவன் சிரிக்காமல் என்ன செய்வான்?
பல ஆண்டுகளுக்கு முன் மேல் நாட்டில் ஒரு கிறிஸ்துவத் துறவி - வாலிபர் - துறவிமடத்தில் சேர்ந்து அங்கே மற்ற துறவிகளுக்காகச் சமையல் வேலையும் வேறு குற்றேவல் பணிகளும் செய்து வந்தார். இவர் அதிகப் படிப்பில்லாதவர்; வயதிலும் சிறியவர். ஆயினும் மகா புனித உள்ளம் படைத்த பக்தர். சமையல் வேலை, துணி துவைத்தல், சட்டி பானை கழுவுதல் முதலிய எல்லாப் பணிகளும் நேரடியாக ஆண்டவனுக்குச் செய்வதாகவே எண்ணிச் செய்து வந்தார். தியானம், ஜபம், இவற்றிற்குக் குறிப்பான காலமோ, இடமோ கிடையாது. எப்போதும் எந்த வேலை செய்து கொண்டு எந்த இடத்திலிருந்தாலும் அவருடைய பக்கத்தில் ஆண்டவன் இருப்பதாக அவர் கண்டார்.
கடவுள் அவருக்கு ஒரு நிரந்தர சகாவாகப் போய் விட்டார். தன் பக்கத்தில் இருந்தும் படுத்தும் விளையாடியும் தன் கூட இருந்து வேலை செய்து வருவதாகவே ஆண்டவனை அவர் கண்டார். இவருடைய பக்தியும் இடையறா ஆனந்தமும் மடத்தில் வசித்துவந்த மற்ற துறவிகளுக்கு ஒரு வியப்பான நிகழ்ச்சியாக இருந்தது. பிரதர் லாரென்ஸ் என்ற பெயர் கொண்ட இந்தத் துறவியின் சரித்திரத்தைப் படிக்கிறபோது, பிருந்தாவன கோபிகளுடைய கதையைப் போலவும், பகவான் ராமகிருஷ்ணருடைய சரித்திரத்தைப் போலவும் தொனிக்கிறது. எந்த தேசத்திலும் எந்த காலத்திலும் சில மகாத்மாக்கள் ஜீவன் முக்த நிலை அடைந்து, ஆண்டவனை நேரில் காணப்பெறுகிறார்கள்.