பெரிய வியாபாரி ஒருவர் பரமஹம்ஸரிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய சொத்தெல்லாதவற்றையும் குடும்பத்துக்கு எழுதி வைத்துவிட்டேன். ஒரு வியாபார ஜோலியும் நான் இப்போது வைத்துக் கொள்ளவில்லை. ஆயினும் பகவான் எனக்கு இன்னும் தரிசனம் கொடுக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டால் கடவுளைக் காணலாம். என்கிறார்களே? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், செட்டியாரே! பழைய எண்ணெய்க் குடம் ஒன்றை முழுதும் காலிசெய்து விட்டாலுங்கூட கொஞ்சம் எண்ணெய் ஒட்டிக்கொண்டு தானிருக்கும். குடத்தில் உறிஞ்சிப் பலகாலம் ஊறியிருக்கும் எண்ணெய் போகவே போகாது. அதை நாற்றமில்லாமல் சுத்தம் செய்ய இயலாது. அவ்வாறே உம்முடைய உலக விவகார வாசனையைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியாது. எல்லாச் சொத்துக்களையும் எழுதிவைத்து விட்டீரானாலும் மனதில் ஊறியிருக்கும் உலகப்பற்று எளிதில் நீங்கிவிடாது என்று அருளினர்.
சொத்தையெல்லாம் எழுதிவைத்து விட்டதனாலேயே ஒருவன் சன்னியாசியாகிப் போய்விடமாட்டான். கவலையில்லாமல் அக்கடா வென்றிருக்கலாம் என்கிற எண்ணம் போதும். சொத்தை எழுதிவைத்து விடுவதற்கு. பணம், பாந்தவ்யம், காமம் முதலிய பற்றுக்கள் அறவே மனதினின்று நீங்கி ஆண்டவனிடம் காதல் பொங்கிய ஞான நிலை அடைவது வேறு விஷயம். உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளாமல், எல்லாற்றையும் விட்டுவிட்டு, பிறகு விட்ட பொருள்களின் நினைவிலேயே உள்ளம் தங்கி அலைந்து கொண்டு கஷ்டப்படுவதும், பிறருக்கு இது தெரியாமலிருக்கும்படி லோகஅபவாதத்துக்குப் பயந்து பொய் வேஷம் போடுவதும் துறவு நிலையாகாது. இதைக் காட்டிலும் யோக்கியமான இல்லற வாழ்வே மேலாகும்.
பாழிகளும் பாம்புகளுமிருக்கும் ஒரு பழைய வீட்டில் குடியிருந்தால் எவ்வளவு ஜாக்கிரதையாக இருப்போமோ, அப்படியே வாழ்க்கையில் காமமும் லோபமுமாகிய விஷப் பொருள்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பாழியில் ஒடுங்கியிருந்து திடீர் என்று கடித்துக் கொல்லும் நாகப் பாம்பைப் போலவே பண ஆசையும் காமத்தின் வேகமும் எதிர் பாராத முறையில் மனிதனைப் பிடித்து வீழ்த்திவிடும். ஞானிகளாயினும் சர்வதா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இடைவிடாமல் ஆண்டவன் நினைவை மனதில் நிறுத்தி வைக்க வேண்டும். சர்ப்பத்தைக் கண்டால் பழைய நாட்களில் கிராம வழக்கம் அம்மா தேவி! வாலைச் காட்டிச் செல், படத்தைத் தூக்காமல் போய் விடு! என்று ஒரு மந்திரத்தைச் சொல்லுவார்கள். பாம்பும் போய்விடும். காம விருப்பத்தை நாகப்பாம்பாகவே கருதவேண்டும். அதனுடன் விளையாடலாகாது. அதனின்று தூர நிற்பதே விவேகம். நான் விவேகன்; ஏன் பயப்படவேண்டும்? இதில் என்ன கேடு வரும்? இவ்வளவோடு நிற்பேன். அதற்குமேல் போகமாட்டேன். என்றெல்லாம் எண்ணுவது அவிவேகம். பாம்பை நெருங்கினால் நிச்சயமாகக் கடித்து விடும். ஒரு தனவான் ராமகிருஷ்ணரிடம் சென்று உங்களுக்கு ஒரு பெரிய தொகை உதவ விரும்புகிறேன். இதோ, இந்த உண்டியலைப் பெற்றுக் கெண்டு அவசியமான செலவுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றார்.
நல்ல எண்ணத்துடன்தான் அந்த தனவான் இவ்வாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ராமகிருஷ்ணர் ஒப்பவில்லை. வேண்டாம்! உம்முடைய பணத்தை நான் வாங்கிக் கொண்டால் அதைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருக்க நேரிடும். என் உள்ளம் பணத்தில் சிக்கிக்கொண்டு அலையும். என்று மறுத்தார். நல்ல பாத்திரம் பார்த்துத் தருமம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. இதை ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள் பணத்தைத் தொடவே வேண்டாம். உங்களுக்குப் பணிவிடை சரியாக நடப்பதற்காக உங்கள் பந்துக்களில் ஒருவர் பேரில் பணம் பாங்கியில் போட்டு வைக்க அனுமதி தாருங்கள். இதற்கு என்ன ஆட்சேபனை? என்மேல் இரங்கி இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று தனவான் மிகவும் வற்புறுத்தினார். ராமகிருஷ்ணர் இதற்கும் ஒப்பவில்லை. நீங்கள் சொல்லும் ஏற்பாட்டுக்கும் நானே பணம் பெற்றுக்கொள்ளுவதற்கும் என்ன வித்தியாசம்? உண்மையை ஏமாற்றமுடியுமா? நான் நேரில் உங்கள் பணத்தை வாங்கிக்கொள்ளாமல் எனக்காக உங்களுடைய யோசனைப்படி வேறெருவர் பெற்றுக் கொண்டால் அவரிடம் எவ்வளவு பணம் இருந்தது. இப்போது எவ்வளவு இருப்பு என்றெல்லாம் என் சிந்தனை அந்தப் பணத்தில் நிற்குமல்லவா? யோசித்துப் பாருங்கள். இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒப்புக்கொள்ள முடியாது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
ஆயினும் அந்தத் தனவான் விட்டபாடில்லை, உங்களுக்கு ஒரு பற்றும் இல்லை, நீரில் எண்ணெய் போல் உங்கள் உள்ளம் நிற்கும். தீரர்கள் ஏன் பயப்பட வேண்டும்? பணமும் பெண்ணழகும் கடலைப் போல் நிரம்பி நின்றாலும் தூய உள்ளமானது அந்தக் கடல் வெள்ளத்தில் கலக்காமல் எண்ணெய் போல் மிதந்து நிற்கும் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் என்று மறுபடியும் வற்புறுத்தினார். பற்று நீத்த உள்ளம் எண்ணெய்போல் மிதக்கலாம்; உண்மைதான், ஆனால் வெகுநாள் ஜலத்தோடு சேர்ந்து கிடந்தால் நல்ல எண்ணெயும் கெட்டுப் போய் நாற்றமெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார் ராமகிருஷ்ணர் நகைத்து. தூய மனதுக்குச் சக்தி உண்டுதான். அது அபாயங்களைத் தாண்டித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். வலையில் சிக்காது. ஆயினும் யாராயினும் நீண்டகாலம் விஷப் பரீட்சை செய்தல் தவறாகும். நல்ல விவேகியின் உள்ளமும் சில சமயம் தடுமாறிப்போகும். காமப் பொருள்களின்று ஜாக்கிரதையாகத் தூர நிற்பதே விவேகம். அவ்வாறின்றிப் பரீட்சை செய்து பார்க்கலாம். என்று நெருங்கி ஒருவன் படிப்படியாக விட்டுக்கொடுத்துக்கொண்டு போய் அபாயத்தில்அருகிலேயே நின்றானானால் நிச்சயமாகக் கெட்டுப் போவான்.