துவஷ்டா தன் மைந்தனை கல்வி கற்க அனுப்பினார். ஐப்பசி மாத அடைமழையில் ஆசிரமக் கூரைகள் ஒழுகின. குருவே! தேவலோக கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் உங்களுக்கு ஒழுகாத குடியிருப்பைக் கேட்டு வாங்கி வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டான் துவஷ்டாவின் புதல்வன். குரு தட்சணையை எல்லோரும் படித்து முடித்த பின்பே கொடுப்பார்கள். நீ பாதியிலேயே தருகிறேன் என்கிறாய்! வெற்றி கிட்டட்டும் என மெய்சிலிர்த்தார் குரு. எதிரே குடத்தோடு வந்த குருமாதா, குழந்தாய்! மழையில் எங்கே புறப்பட்டு விட்டாய் என்றாள். விஷயத்தைச் சொன்னான் துவஷ்டாவின் பிள்ளை.
சிறுவனே! எனக்குக் கிழியாத, சாயம் போகாத இரு ரவிக்கைகள் வாங்கி வா, ரவிக்கைகள் தைக்கையில் ஊசிகுத்தி என் விரல்கள் புண்ணாகின்றன. அவை புளி கரைக்கையில் எரிச்சலைத் தருகின்றன எனக்கூற, சரி! என்றபடி நடந்தான் மாணவன். அப்போது ஓடிவந்த குருநாதரின் புத்திரன், நான் உன் சகோதரன் போலல்லவா? பாதத்தில் அட்டை ஒட்டிக் கொண்டிருப்தைப் பார். பல இடங்களில் காட்டாறு குறுக்கிடுகிறது. வெள்ளம் வடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆகையால், எனக்கு நீரின் மீதும், சேற்றில் நடந்தாலும் ஒட்டாமல், இருக்கும்படி ஒரு ஜோடி பாதுகைகள் பெற்றுவர முடியுமா? என, சரியென தலையசைத்தான் துவஷ்டாவின் மகன்.
தொடர்ந்து வந்த குரு புத்திரி, அண்ணா! எனக்கு சமைத்தால் கரி பிடிக்காத பாத்திரங்கள் வேண்டும். பார், பாத்திரம் தேய்த்தே என் கை எப்படிக் கரடு முரடாயிருக்கிறது! என்றாள். அதற்கும் தலைய சைத்து விட்டு பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது எதிரே நாரதர் வந்தார். துவஷ்டாவின் செல்வனே! குருகுலக் கல்வி முடிந்து விட்டதா? என்று கேட்டார். தேவரிஷிக்கு வணக்கம் சொல்லி, நடந்ததைத் தெரிவித்தான் துவஷ்டாவின் குமாரன். காசி விஸ்வநாதரை உள்ளன்போடு முக்காலமும் பூஜித்தால் உன் விருப்பம் நிறைவேறும் காசிக்குத் தான் நான் போகிறேன் வா. கற்பக விருட்சத்தருகிலே நிறையக் காவல் உண்டு எனக்கூறி அவனை அழைத்துச் சென்றார் நாரதர். ஒரு குயவனிடம் நட்பு கொண்டு ஒரு மண் குடத்தைப் பெற்றுக் கொண்டான் துவஷ்டாவின் புத்திரன்.
தினமும் மூன்று வேளையும் கங்கையில் நீராடி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சித்தான். வருடங்கள் உருண்டன. ஒருநாள் நள்ளிரவு சிவபெருமான் பிரத்யட்சமாகி சிறுவனே! இன்றுமுதல் என் பெயரில் பாதியை முதலில் கொண்டு என்னை ஆராதிப்பதையே கர்மாவாகக் கொண்ட தொழிலைப் பின்பாதியாக வைத்து விஸ்வகர்மா என்றுன்னை யாவரும் குறிப்பிடுவார்கள். இன்று முதல் நீ தேவசிற்பி எனப் போற்றப்படுவாய். சூரிய, சந்திரர் உள்ளவரை உன் புகழ் அழியாது. உன் கற்பனை மட்டுமல்ல; மற்றவர் கற்பனை, கனவையும் உன்னால் உருவாக்க முடியும் என வரமளித்தார். விஸ்வகர்மா குரு கேட்டதையெல்லாம் படைத்து குரு குடும்பத்தினரை மகிழ்வித்தான். குருவருளால் சகல சாஸ்திரங்களும், வேத, ஆகம, புராணங்களும் எளிதில் வந்தன. குருபக்தியும், சிவபக்தியும் விஸ்வகர்மாவை சிகரத்தில் ஏற்றியது.