பிரம்மாவின் புத்திரன் தருமன். அவனுக்கு தக்ஷன் தன் பத்து புத்திரிகளை விவாகம் செய்து வைத்தான். ஸ்ரீமந்நாராயணர் இரண்டாகப் பிரிந்து ஹரி, கிருஷ்ணர் என்ற பெயரில் தருமனுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தார். அவர்களே நர - நாராயணர்கள். சஹஸ்ர கவசன் என்ற அசுரன் பல்லாண்டுகள் தவம் புரிந்து ஆயிரம் கவசங்களைப் பெற்றான். தவம் இயற்றிக்கொண்டு யுத்தம் செய்பவனால் மட்டுமே தமது கவசத்தை உடைக்க முடியும். அதுவும் ஒரு சமயத்தில் ஒரு கவசத்தை மட்டுமே அழிக்க முடியும். ஒரு கவசத்தை அழிந்ததுமே அவன் தவ வலிமை தீர்ந்து, மடிந்து விடவேண்டும். என்ற வரம் பெற்றிருந்தான். சஹஸ்ர கவசன் தொல்லை தாங்காமல் தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு தமது அம்சத்தை நர-நாராயணராகப் பிரித்து கங்கைக் கரை பத்ரிகாசிரமத்தில் நெடுங்காலம் தவமிருந்தார்.
தம்போத்பவன் என்ற அரசன் தினமும் சபையைக் கூட்டி எனக்கு நிகரான வீரன் உண்டா? என்று கேட்பான். இல்லை என்ற பதிலே வரும், ஒரு நாள் ஒரு முனிவர், பத்ரிகாசிரமத்தில் தவமியற்றும் நர-நாராயணர்கள் உனக்கும் மேலான வீரர்கள் என்றார். உடனே தம்போத்பவன் சைன்யங்களுடன் சென்று நர-நாராயணர்களைப் போரிட அழைத்தான். நர ஹரி, நீ போ என்றார் நாராயணர். நரன் தர்ப்பைகளை மந்திரம் சொல்லி வீச, தம்போத்பவனின் அஸ்திரங்கள் தகர்ந்தன. தம்போத்பவன் நர - நாராயணர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரி உயிர்பிச்சை பெற்று ஊர் திரும்பினான். இவ்வளவு ஏன்? விஷ்ணு பக்தனான பிரகலாதனே நர - நாராயணர்களுடன் சண்டையிட்டிருக்கிறான்.
பிருகு முனிவரின் மைந்தரான சியவனர்ரேவா நதி (நர்மதை) யில் நீராடிக் கொண்டிருக்கையில், ஒரு விஷ நாகம் அவரைக் கவ்விக் கொண்டு பாதாளம் சென்றது. ஜனார்த்தனா! புண்டரீகாக்ஷா என்று ஹரி நாமத்தை ஜபிக்கவும் சர்ப்பம் பயந்துவிட்டு விட்டது. அங்கே, அவரை உபசரித்த பிரகலாதன் தீர்த்தங்களின் மகிமையைக் கேள்விப் பட்டுத் தீர்த்தமாடப் புறப்பட்டான். நர - நாராயணர் அருகே வில்லும், அம்பும் இருப்பதைக் கண்டு தவசிகளுக்கு தனுசு எதற்கு? என்று கேட்டான். அதற்கு அவர்கள் அசுரர்கள் விலங்குகள் இடையூறு செய்தால் தடுக்க என்று பதிலளித்தனர். ஓ, கந்தமூலம் சாப்பிடும் உங்களுக்கு யுத்தம் செய்யும் சக்தி இருக்கிறதோ? நான் போரிட அறை கூவுகின்றேன். வாருங்கள் என்றான் பிரகலாதன் அவர்களுக்குள் நூறு ஆண்டுகள் யுத்தம் நடந்தது. பிறகு, நாராயணரிடம் விஷ்ணுவை அடையாளம் கண்ட பிரகலாதன் அவரை வணங்கி பாதாளம் போய்ச் சேர்ந்தான்.
தம்பீ! இனியும் தாமதிக்காது சென்று, சகஸ்ர கவசனது ஒரு கவசத்தை உடை என்றார் நாராயணர், தவ வலிமையால் சகஸ்ர கவசனின் ஒரு கவசத்தை உடைத்ததும் களைத்து விழுந்தார் நர ரிஷி. நரரை உயிர்ப்பித்துத் தவம் செய்யப் பணித்து அடுத்த கவசத்தைத் தூளாக்கினார் நாராயணர். இப்படித் தவமும், போரும் ஒருசேர நடந்தது. மாறி மாறிப் போரிட்டு 999 கவசங்களை அழித்தாயிற்று. ஆயிரமாவது கவசத்தை உடைத்தால் அசுரன் மாண்டு விடுவான். நரன் போரிட வந்தபோது ஒற்றைக் கவசத்துடன் சூரியனிடம் சரணடைந்தான் சஹஸ்ர கவசன். சூரியன் அவனைக் குந்தி தேவிக்குப் பிள்ளையாக அளித்தான். அவனே கர்ணன். முற்பிறவி அசுர ஜென்மமானதால் இப்பிறவியில் துரியோதனன், சகுனி சேர்க்கை வாய்த்தது கர்ணனுக்கு. அர்ஜுனன் - கிருஷ்ணனாகப் பிறந்தனர் நர- நாராயணர்கள் கர்ணனின் மிச்சமிருந்த ஒரு கவசத்தை, இந்திரன் மூலம் தானமாகப் பெற வைத்து, அர்ஜுனன் மூலம் அவனை மாய்த்தார் கண்ணபிரான்.