பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
06:06
அம்பாளை ஜகத்காரணீ ஜனனீகாளீ என்கிறது ஆகமம். அதாவது உலகத் தோற்றத்துக்குக் காரணமானவள். மகாபிரளய காலத்தின் முடிவில் அனைத்தும் அழிந்து, காரணங்கள் யாவும் காரியத்தில் ஒடுங்கி மறைந்து எதுவுமில்லாமலிருக்கும் காலத்தில், மகாமாயை என்னும் பரபிந்துவை வியாபித்து நிற்பவளாக - சிவனிடம் ஒன்றிணைந்தவளாக காளி விளங்குகிறாள். அந்தசமயத்தில் தன்மேல் அவள் பார்வையைப் பதிக்க, அந்த பிம்பம் மாயையாகிறது. அங்கு உலகைப் படைத்திடும்பொருட்டு தன் கணவன் சிவரூபத்தை மானசீகமாக எண்ணுகிறாள். இதன்காரணமாக இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என படைப்பு தோன்றுகிறது. அதுவே எல்லா சக்திகளுக்கும் தெய்வங்களுக்கும் உலகங்களுக்கும் முதல் தோற்றுவாயாக அமைகிறது. இதிலிருந்து பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் தோற்றம் ஏற்பட்டு, எல்லா உலகங்களும் இயங்கத் தொடங்குகின்றன என்று சாக்தாகமம், மார்க்கண்டேய புராணம் போன்றவை கூறுகின்றன.
மகாசக்தியின் சொரூபமே காளி என்று தாந்த்ரீக நூல்கள் கூறுகின்றன. தன்னிச்சையாக இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பவள். பிரபஞ்சத்தை அவள் முழுவதும் அறிவாள். ஆனால் அவளை யாரும் அறியார். தாரா, க்ஷோதரி, புவனேஸ்வரி, தூமாவதி, பகளாமுகி, பைரவி, சின்னமஸ்தா, மாதங்கி, கமலா மற்றும் தேவ தேவியர்களால் சூழப்பட்டவள் காளி. அவள் வடிவ மற்றவள். பக்தர்களைக் காக்க வடிவம் கொள்கிறாள். அழித்தல் காலத்தில் மகாகாளனையும் பிரளயத்தில் மூழ்கச் செய்வதால் காளி எனப்படுகிறாள். மனம், வாக்கால் விளக்க முடியாதபடி இருப்பவள் என்றெல்லாம் தந்திர நூல்கள் பேசுகின்றன.
அத்தகைய காளிக்கு பாரத தேசத்தில் பல இடங்களிலும் சிறப்பாக கோயில்கள் அமைந்துள்ள. அவற்றிலொன்று தட்சிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளிகோவிலாகும். இந்த காளிகோவில் ராமகிருஷ்ண பரமஹம்சரால் புகழ் பெற்றது. இக்கோயில் வளாகத்தில், காளி சன்னிதிக்கு எதிரிலுள்ள ஆலமரத்தின்கீழ் அமர்ந்துதான் ராமகிருஷ்ணர் தியானத்தில் ஈடுபட்டார். தேவியின் திருக்காட்சியை நேரில் காண பலவாறு பூஜித்தும் அது நிறைவேறாததால், இறுதியில் தன் கையை வாளால் வெட்ட முயன்றார் ராமகிருஷ்ணர். அப்போது விக்ரகத்திலிருந்து வெளிப்பட்டு தன் சொரூபத்தைக் காட்டியருளினாள் தேவி.
அதன்பின்னர் நினைத்தபோதெல்லாம் காளி தரிசனம் பெறுவாராம் ராமகிருஷ்ணர். இதைக்கேள்விப்பட்ட இளைஞனான நரேந்திரன் (பின்னாளில் விவேகானந்தர்) சந்தேகம் கொண்டார். நேரில் சென்று ராமகிருஷ்ணரை சந்தித்து அதுபற்றிக் கேட்டார். இன்றிரவு வா என்றார் ராமகிருஷ்ணர். அதன்படியே யாருமற்ற இரவில் நரேந்திரன் காளிகோவிலுக்குச் சென்றார். அப்போது காளி சிலையருகே ராமகிருஷ்ணர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்க, அவர்முன் ஒரு ஒளிப்பிரவாகம் தோன்றுவதைக் கண்ட நரேந்திரன் திடுக்கிட்டார். அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் வெளியேறிவிட்டார். சுமார் இரண்டு மாதகாலம் பித்துபிடித்தவர் போல அலைந்து திரிந்து, அதன்பின் தெளிந்தார். ராமகிருஷ்ணரை சரணடைந்து அவரை குருவாக ஏற்றார். இக்கோயிலில் ராமகிருஷ்ணர் தங்கியிருந்த அறை உள்ளது. அதில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தட்சிணேஸ்வரம் என்னும் பகுதியில் கங்கைக் கரையோரம் அமைந்துள்ளது இந்த காளி கோவில். இங்கே கங்கையை ஹுக்ளி என்று அழைக்கின்றனர். காளிகோவிலிருந்து 50 படிக்கட்டுகள் இறங்கிச் சென்றால் கங்கை நதி.
இந்த காளிகோவிலைச் சுற்றி 12 சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றை 12 ஜோதிர்லிங்கங்களாக மக்கள் வழிபடுகின்றனர். கங்கையில் குளித்த பின் கலசத்தில் தீர்த்தம் எடுத்துச் சென்று 12 சிவன்கோவில்களிலும் பூஜிக்கின்றனர். இறுதியாக காளிதேவியை தரிசிக்கின்றனர். செம்பருத்திப்பூவால் அர்ச்சிக்கப்படுகிறாள் காளி. கல்கண்டு, தேங்காய், மைசூர்பாகு, பால்கோவா மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாகத் தருகின்றனர். இக்கோயிலுக்கு எதிரே கங்கையின் மறுகரையில் பேளூர் மடமும், விவேகானந்தரின் சமாதியும் அமைந்துள்ளன. ஹௌரா ரயில்நிலையத்திலிருந்து பேருந்து , கார், புறநகர் ரயில் என போக்குவரத்து வசதிகள் உள்ளன.