பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
05:06
சுக முனிவர் ஏழு தினங்கள் பாகவதம் கூறக் கேட்டு, பரீட்சித்து மன்னன் ஆத்ம ஞானம் பெற்றது போல் தானும் ஆத்ம ஞானம் பெற விரும்பினான் வட தேசத்தை ஆண்டு வந்த சாதகவர்மன் என்ற மன்னன். உடனே, கல்வியில் சகலமும் கற்றுணர்ந்த பண்டிதர் ஒருவரை வரவழைத்து, தக்க சன்மானங்கள் கொடுத்து, அவரிடம் பாகவதம் கேட்டான். நாட்கள்தான் கடந்தனவே ஒழிய, அவனுக்கு ஆத்ம ஞானமோ, மனத் தெளிவோ சிறிதும் கிட்டவில்லை. பண்டிதரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான். பதில் சொல்ல வகையறியாத பண்டிதர், பெருங்குழப்பத்துடனும் யோசனையுடனும் வீட்டுக்குச் சென்றார்.
தந்தை தீவிர யோசனையில் இருப்பதைக் கண்ட அவரது மகள் நந்தினி. அவரது யோசனைக்கான காரணத்தைக் கேட்டாள். பண்டிதரும், அரண்மனையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். அது கேட்ட சிறுமி நந்தினி, தந்தையே, கவலைப்படாதீர்கள். அரசரின் ஐயத்தை நான் நீக்குகிறேன். நாளைக்கு நீங்கள் அரண்மனைக்குச் செல்லும்போது என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என்றாள். மறுநாள் தந்தையுடன் அரண்மனைக்குச் சென்ற நந்தினி, அரசனைக் கண்டு பணிவுடன் வணங்கி, அரசே, தங்கள் மனத்தில் தோன்றிய சந்தேகத்தைப் போக்கவே நான் இங்கு வந்துள்ளேன் என்றாள். என்னவென்பது போல் அச்சிறுமியைக் கண்ட அரசரிடம், அரசே, ஒரே நிபந்தனை, சிறிது நேரம் தங்களை இந்தத் தூணில் கட்டி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
அரசனும் அவ்வாறே தன்னைத் தூணில் கட்டி வைக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான். பின் அச்சிறுமி நந்தினி தன்னையும் அவ்வாறே மற்றொரு தூணில் கட்டச் சொன்னாள். காவலரும் அவ்வாறே செய்தனர். பின்னர் நந்தினி அரசரைப் பார்த்து, அரசே, தற்போது என்னை இக்கட்டிலிருந்து விடுவியுங்கள் என்றாள். அதற்கு அரசன், அது எப்படியம்மா முடியும்? நானே தூணில் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். என்னால் எப்படி உன் கட்டுக்களைத் தளர்த்தி உன்னை விடுவிக்க முடியும்? என்றான். அரசே, இதுதான் நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட சந்தேகத்துக்கான விளக்கம். மகா ஞானியான சுக முனிவர் பந்த பாசங்களில் இருந்து விடுபட்டவர் என்பதால்தான் அவரால் பரீட்சித்து மன்னருக்கு ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்ய முடிந்தது. ஆனால் எனது தந்தையோ, பெரிய குடும்பத்தை வைத்துக் கொண்டு சம்சார பந்தங்களில் சிக்கி உழல்பவர். அவரால் எப்படி தங்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்ய முடியும்? எப்படி எரிகின்ற தீபத்தினால் மட்டுமே மற்றொரு தீபத்தை ஏற்ற முடியுமோ அதேபோலவே ஆத்ம ஞானம் பெற்றவர்களால்தான் மற்றவர்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்ய முடியும் என்றாள் நந்தினி. சந்தேகம் நீங்கி, தெளிவு பெற்ற அரசன், சிறுமி நந்தினிக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி பாராட்டினான்.