பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
02:06
வால்மீகி முனிவர் ஒரு கோடி ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீமத் நாமாயண மஹாகாவியத்தை எழுதி முடித்தாயிற்று. உடனே, அது யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லோரும் ராமாயணம் தங்களுக்கே சொந்தம் என்று ஒவ்வொருவரும் வாதிட்டனர். நீண்ட விவாதத்துக்குப் பின்பும் ஒன்றும் தீர்மானிக்க முடியவில்லை. சண்டைதான் வலுத்தது! இறுதியில், வழக்கு சிவபெருமானிடம் சென்றது. அவர், ராமாயணத்தை மூன்று பிரிவினருக்கும் பங்கிடுவதென்று முடிவு செய்தார். தேவர்களுக்கு 33 லட்ச ஸ்லோகங்கள், அசுரர்களுக்கு 33 லட்சம், மனிதர்களுக்கு 33 லட்சம் கொடுத்தபின், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் மீதமிருந்தன. அவற்றையும் மூன்றால் வகுத்துக் கொண்டே போனதில், கடைசியாக ஒரு ஸ்லோகம் மட்டுமே மிஞ்சியது.
ஒரு ஸ்லோகத்தில் 32 எழுத்துக்கள் ஆளுக்குப் பத்து பத்து எழுத்துக்கள் கொடுத்த பின், மிஞ்சியது ரா மற்றும் ம என்ற இரண்டே எழுத்துக்கள்தான். அவற்றை என்ன செய்வது? பாகப்பிரிவினை செய்ததற்கு ஊதியம் வேண்டாமா? அதனால், அந்த இரண்டு எழுத்துக்களை சிவபெருமான் தாமே எடுத்துக் கொண்டார். ஒரு கோடி ஸ்லோகங்களின் சாரம் அத்தனையும் ரா, ம என்ற இரண்டு அட்சரங்களில் அடங்கியுள்ளது. அதனால்தான் எந்தவொரு தேவனாகட்டும், மனிதனாகட்டும் அல்லது அசுரனாகட்டும், ஞானத்தில் சிவபெருமானுடன் போட்டியிட்டு வெல்ல அவரை முடியாது. விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு சுலபமான ஷார்ட் கட் எது? என்று பார்வதி தேவி, பரமசிவனிடம் கேட்டதற்கு
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே,
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
ராம நாமம் ஸஹஸ்ர (1000) நாமங்களுக்கு இணையானது என்று ஈசன் பதிலளித்திருப்பது கவனிக்கத்தக்கது.