புருவ மத்தியில், மூளையின் முன்புறம் பைனீயல் கிளாண்ட் என்னும் சுரப்பி உள்ளது. யோக சாஸ்திரத்தில் இதனை ஆக்ஞா சக்கரம் என்பர். இதனைக் குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். நெற்றியில் இடும் பொட்டை நெற்றித்திலகம் என்பர். திலம் என்றால் எள். அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் திலகம் என்று பெயர் வந்தது. அக்காலத்தில், அரசர்கள் சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். இதற்கு திலக தாரணம் என்று பெயர். பூக்கள், பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் இதில் இடம்பெறும். தாமரைமலர் வடிவம் இதில் சிறப்பானது. மகாகவி காளிதாசர் மாளவிகாக்னிமித்ரம் என்ற காவியத்தில் நெற்றித்திலகம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.