பதிவு செய்த நாள்
09
செப்
2017
04:09
பெருமாளுக்குரிய விரத நாள் புரட்டாசி சனி. இந்த மாத சனிக்கிழமையும், திருவோணமும் கூடிய நன்னாளில் சீனிவாசன் என்ற பெயரில், திருமால் பூலோகத்தில் அவதரித்தார்.அவர் திருவேங்கடமலையில் (திருப்பதி) தங்கியதால், வெங்கடாஜலபதி என அழைக்கப்பட்டார். அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை, பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதம் துவங்க வேண்டும்.
விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும். மதியம் எளிய உணவு சாப்பிடலாம். மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் புரட்டாசி கடைசி சனியன்று பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை படைத்து வழிபட்டு தானம் செய்யலாம். இந்த ஆண்டு செப்.23, 30, அக்.7,14ல் இந்த விரதம் வருகிறது. இந்த விரதம் இருந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத்தடை விலகும். கிரக தோஷம் அகலும். சனி தோஷத்தால் பாதிப்பு இருக்காது.