பதிவு செய்த நாள்
28
அக்
2017
05:10
சனீஸ்வரர் சன்னிதிக்கு செல்பவர்கள், அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது; திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர். நவக்கிரகங்களை அடக்கி, அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான், ராவணன். அப்போது, சனீஸ்வரர், தன் உக்கிரப்பார்வையால் ராவணனைப் பார்க்க, அவனுக்கு சனி பிடித்தது; அதன்பின், ராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை. இப்படி, சனி என்றாலே, ஒரு வித பயம் இருக்க, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவிலில், சனீஸ்வரர் சன்னிதியை சுற்றி வந்து வழிபடுகின்றனர், பக்தர்கள். அத்துடன், இங்குள்ள சனீஸ்வரரை, பொங்கு சனீஸ்வரர் மற்றும் அனுக்கிரக சனீஸ்வரர் என அழைத்து, தலை முதல் பாதம் வரை தரிசிக்கின்றனர்.
சனீஸ்வரர் தலமான திருநள்ளாறில் கூட, சனீஸ்வரரை வலம் வர முடியாது. ஆனால், இலத்தூர் பொங்கு சனீஸ்வரரை வலம் வரலாம். அருள் வழங்கும் நிலையில் காட்சி தருகிறார், சனீஸ்வரர். மற்ற இடங்களில் மேற்கு நோக்கி இருக்கும் காக வாகனம், இங்கு கிழக்கு நோக்கி உள்ளது. இவ்வாறான சனியை வணங்கினால், லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி மற்றும் கண்டச்சனியால் சிரமப்படுவோர், இவரை வணங்குகின்றனர். சம்பாதித்த பொருள் கையில் தங்க, சனிக்கிழமைகளில் பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்கின்றனர். அகத்தியருக்கு, ஏழரை சனி ஆரம்பித்ததும், இங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடி சனீஸ்வரரை துதித்து பூஜித்தார். சனீஸ்வரர் அவருக்கு காட்சி அளித்து, ஏழரை விலகும் காலத்தில் இக்குளத்தில் நீராடி, தன்னை வணங்கினால், சகல அனுக்கிரகமும் வழங்குவேன்... என்றார். கடும் கோடையிலும், இக்குளத்தில், தண்ணீர் இருக்கும் என்பது சிறப்பு!
மூலஸ்தானத்தில், அகத்தியர் வழிபட்ட, மதுநாத சுவாமி உள்ளார்; அம்பாள் அறம் வளர்த்த நாயகி மற்றும் அன்னபூரணி சன்னிதிகள் உள்ளன. சனி தோஷம் நீங்க, சபரிமலை ஐயப்பன் கோவிலில், கொடுகொட்டி பாட்டு எனும் சடங்கு நடைபெறும். ஏனெனில், சனீஸ்வரருக்குரிய பிரதான தெய்வம், சாஸ்தா. இங்கும் சாஸ்தாவுக்கு லிங்க வடிவில் சன்னிதி உள்ளது. சாஸ்தா, சிவனின் மகன் என்ற அடிப்படையில் இவ்வாறு உள்ளது. இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண இயலாது. மதுரை - தென்காசி சாலையில், மதுரையிலிருந்து, 153 கி.மீ., தூரத்தில், இலத்தூர் விலக்கு வரும். இங்கிருந்து, 2 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது. தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை கிராமம் செல்லும் பஸ்கள், இவ்வூர் வழியே செல்கின்றன.