பதிவு செய்த நாள்
30
அக்
2017
03:10
சிவபெருமான் நீண்ட ஜடா முடியுடன் இருப்பதைப் படங்களில் பார்த்திருப்போம்; ஆனால், ஜடை முடியுடன் கூடிய லிங்கத்தைப் பார்க்க வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம், சிவசைலநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்பகுதியை ஆண்ட மன்னர் சுதர்சன பாண்டியன், தினமும் சுவாமி தரிசனத்திற்கு வருவார். ஒரு நாள் அவர் வர தாமதம் ஆகி விட்டதால், மன்னருக்காக வைத்திருந்த மாலையை தேவதாசியிடம் கொடுத்து விட்டார், பூஜாரி. அவளும் பக்தியுடன் அதை, தலையில் சூடிக்கொண்டாள். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மன்னர் வந்து விட, பயத்தில் பூஜாரிக்கு உதறல் எடுத்தது. உடனே, அப்பெண்ணிடம் மாலையை வாங்கி வைத்தவர், மன்னர் வந்ததும், பவ்யமாக அதை அவருக்கு அணிவித்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு நீளமான தலைமுடி, மன்னரின் கண்களில் பட்டுவிட்டது.
இறைவனுக்கு சூடிய மாலையில் முடி எப்படி வந்தது... என்று கேட்டார் மன்னர். சுவாமிக்கு நீண்ட ஜடை இருப்பதால், அந்த முடியாக இருக்கக் கூடும்... என, சிவன் மீது பாரத்தை போட்டு விட்டார், பூஜாரி. கோபத்துடன், பல ஆண்டுகளாக ஆலயத்திற்கு வருகிறேன்; இதுவரை ஒரு முறை கூட சிவனின் ஜடையை பார்த்ததில்லையே... என்று கேட்க, உடனே, சிவனின் ஜடையை பார்ப்பதற்காக, கர்ப்ப கிரகத்தின் மற்ற மூன்று புற சுவர்களிலும் துளையிடப்பட்டன. தனக்கு சேவை செய்யும் பூஜாரியை காப்பாற்ற, ஜடையுடன் காட்சியளித்தார், சிவன். இன்றும், துவாரங்கள் வழியாக, சிவனின் ஜடைமுடியை தரிசிக்கலாம், பக்தர்கள். இக்கோவிலில், சிவனை பார்த்தபடி கிழக்கு நோக்கியுள்ள நந்தி, எழுவதற்கு தயாராக இருப்பது போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்கு காரணம், ஒருமுறை, சிவனது கோபத்திற்கு ஆளான தேவேந்திரன், அதற்கு விமோசனம் கேட்டப் போது, நான் மேற்கு நோக்கி இருக்கும் கோவிலில், நந்தியை பிரதிஷ்டை செய்... என்று கூறினார், சிவபெருமான். அதனால், தேவலோக சிற்பியான மயனைக் கொண்டு, நந்தியின் சிலையை வடித்தான், இந்திரன்.
சிற்ப சாஸ்திரப்படி, எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டதால், அச்சிலை உயிர்பெற்று, எழுவதற்கு கால்களை ஊன்ற முயன்றது. உடனே, உளியால் நந்தியின் முதுகில் கீறலை ஏற்படுத்தினார், மயன். அதன் பின், அப்படியே அமர்ந்தது, நந்தி. இப்போதும், இக்கீறல் நுட்பமாக தெரிகிறது. சிவசைலநாதரின் துணைவி பரமகல்யாணியின் விக்ரகம், கீழ ஆம்பூரில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது. பின், சிவசைலம் கொண்டு வரப்பட்டு, சிவசைலநாதருக்கு திருக்கல்யாணம் வைபவம் நடத்தி, அம்மாளை பிரதிஷ்டை செய்தனர். அதனால், அம்பாளை தங்கள் வீட்டு பெண்ணாகக் கருதும் கீழ ஆம்பூர் மக்கள், பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனம் தருவது போல, இன்றளவும் திருக்கல்யாணத்தன்று அம்பாளுக்கு சீதனம் கொடுக்கின்றனர். அத்துடன், திருக்கல்யாணம் முடிந்ததும், மறுவீட்டுக்காக தங்கள் ஊருக்கு அழைத்து வருகின்றனர். சிவனும், அம்பாளும் கீழ ஆம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சியில் மூன்று நாட்கள் தங்குவர். கோவில்களில் திருக்கல்யாணம் நடப்பது மரபு; ஆனால், இங்கு மறுவீடு சடங்கு நடத்துவது விசேஷமானது. நல்ல வாழ்க்கைத் துணை அமைவதற்காக, இங்குள்ள உரலில் மஞ்சளை இடித்து, பூசிக் கொள்கின்றனர், பெண்கள். திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி வழியாகவும், தென்காசியில் இருந்து ஆழ்வார்குறிச்சி வழியாகவும் சிவசைலத்தை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து, 55 கி.மீ., தொலைவில், தென்காசி உள்ளது. இங்கிருந்து, 32 கி.மீ., தூரத்திலுள்ளது இக்கோவில்!