தைமாதம் முழுவதும் பக்திமயமாகவும், விழா மயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் வீரவிளையாட்டுகள் நடைபெறும். சில பகுதிகளில் ஆறு, கடற்கரையில் உறவினர், நண்பர்களுடன் கூடி மகிழும், காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. மகர ஜோதியாக சபரிமலை ஐயப்பன் தைமாதத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தையில் வரும் வெள்ளிக்கிழமைகளில் “தைவெள்ளி விரதம்” இருந்து அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவர். தைஅமாவாசை நாளில் தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. தை பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் சேரும் நாளில் தைப்பூச விழா முருகன் கோயில்களில் நடைபெறும். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்வர். மதுரையில் ராஜாங்க விழாவாக மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரோடு தெப்பத் திருவிழா நடக்கும்.