சிவன் கோயிலின் காவல் தெய்வம் க்ஷேத்திர பாலகர். “கோயிலைக் காப்பவர்” என்பது இதன் பொருள். இவர் காளியின் கோபம் தணிவிக்க, குழந்தை வடிவில் வந்ததாக லிங்க புராணம் கூறுகிறது. சாகா வரம் பெற்ற தானகாசுரன் தேவர்களை துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். கோர வடிவெடுத்த காளி, அசுரனை கொன்றாள். ஆனாலும், அவளின் ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியை கண்டு அஞ்சின. அப்போது சிவன் கட்டளைப்படி, மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்து பாலூட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். பின்னர் அக்குழந்தையை“க்ஷேத்திர பாலகர்” என அழைத்தனர்.