மன்னர் குலசேகரர், எப்போதும் அடியார்களுடன் சேர்ந்து ராமரை பூஜித்து வந்தார். இதை விரும்பாத மந்திரி, ரத்தின மாலை ஒன்றை திருடிவிட்டு அடியார்கள் மீது பழி சுமத் தினார். திருடனை கண்டுபிடிக்க, அடியவர் அனைவரும் பாம்பு அடைக்கப்பட்ட குடத்தில் கை விட்டு, “ரத்தின மாலையை எடுக்கவில்லை” என்று சத்தியம் செய்யும் விஷப் பரிட்சைக்கு ஏற்பாடு செய்தார். மன்னரும் சம்மதிக்க, அனைவரும் கூடினர். அடியார்கள் முன்னிலையில் மன்னர், “இவர்கள் நேர்மையானவர்கள் என்றால் விஷ நாகம் என்னைத் தீண்டாது” என்று சொல்லி குடத்திற்குள் கை விட்டார். ராமரின் அருளால் பாம்பு தீண்டவில்லை. பதறிய அமைச்சர், மாலையை மன்னரிடம் ஒப்படைத்ததோடு தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். இந்த மன்னரே குலசேகராழ்வார் என்று புகழ் பெற்றார்.