குஜராத் மாநிலத்தில் துவாரகை கிருஷ்ணன் கோயில், கடலிலுள்ள ஒரு தீவில் இருக்கிறது. இவ்வூர் கடலுக்குள் அமைய காரணம் உண்டு. கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன், தன் மருமகனை கிருஷ்ணர் கொன்று விட்டார் என தெரிந்ததும், தன் படைகளை கிருஷ்ணர் தங்கியிருந்த மதுராபுரிக்கு அனுப்பினான். அவர்களால் கிருஷ்ணரை பிடிக்க முடியவில்லை. விடாக்கண்டனான ஜராசந்தன் பதினெட்டு முறை போர் தொடுத்தான். மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொருட்டு, மேற்குக்கடலில் இருந்த ஒரு தீவுக்கு கிருஷ்ணர் அவர்களுடன் சென்றார். அந்த தீவில் ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே துவாரகை என பெயர் பெற்றது.