பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
03:06
தானம் கொடுப்பதை மிகப்பெரும் தர்மமாக இந்துமதம் குறிப்பிடுகிறது. அதனால் கிட்டும் பலன்களையும் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய தானங்கள் தரும்போது கூறவேண்டிய மந்திரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
சய்யா தானம்: (புதுமணத்தம்பதிக்கு படுக்கை மெத்தை, தலையணைகளை அளித்தல்)
கேசவப்பெருமாளே! படுக்கையை தானம் செய்வதனால் எனக்கு நித்தமும் பிரியாத படுக்கையையும் (உறக்கத்தையும்), குறைவற்ற செல்வத்தையும், மேன்மையையும், சவுபாக்கியத்தையும், சுகபோகத்தையும் கொடுத்தருள்வீர். (மாப்பிள்ளையை போகவிஷ்ணுவாகக் கருதித்தருதல் முறை.)
ஆபரண தானம் (பொன்னாலான பூஷணங்கள் அளித்தல்): ஹிரண்யகர் பரான பிரம்மா விடம் தோன்றிய, அனைத்து இஷ்டத்தையும் தரக்கூடிய தங்கத்தாலான மோதிரத்தை தங்களுக்கு தானமளிப்பதால், லட்சுமியின் கணவரான மகாவிஷ்ணு மகிழ்ந்து அருளட்டும்.
குண்டல தானம் (காதணி - தோடு அல்லது கடுக்கன்): பாற்கடலைக் கடைந்தபொழுது லட்சுமியுடன் தோன்றியதும், முன்பாக கண்டெடுக்கப்பட்டதுமான திவ்யகுண்டலத்தின் அம்சமாயுள்ள இக்காதணி இரட்டையை தங்களுக்கு அளிக்கிறேன். இத்தானத்தால் லட்சுமியானவள் மகிழ்ந்து எனக்கு அருள்புரியட்டும்.
ரத தானம்: தேருக்கும், தேரின் நாயகருக்கும், வாகனங்களான குதிரைகளுடன்கூடிய தேரோட்டிக்கும், தேவலோகப் பெருந்தச்சராகிய விச்வகர்மாவுக்கும் எனது வணக்கம் உரியதாகுக. இத்தகைய திவ்ய மகிமையுள்ள இந்தத் தேரை தான மளிப்பதால் இறைவன் எனக்கு அமைதியை அளிக்கட்டும்.
குதிரை தானம்: சூரியனின் வாகனமாயும், நூறுயாகம் செய்தவர்களைத் தாங்குவதாயும், யக்ஞரூபமாயுமுள்ள இந்த குதிரையின் தானத்தினால் எனக்கு எப்பொழுதும் அமைதி ஏற்படட்டும். (பாற்கடலில் உதித்த உச்சைஸ்ரவஸின் வழித்தோன்றலாய்க் கருதி தானம் செய்ய வேண்டும். சூரிய தோஷம் சுக்கிர தோஷம் நீக்கவும் இதைச் செய்யலாம். வெற்றிக்கு தங்கத்தாலான பொற்குதிரைப் பதுமை தானம் செய்யத்தக்கது.)
கஜ தானம்: பாற்கடலில் லட்சுமியுடன் தோன்றியதும், வெள்ளை நிறமும் நான்கு தந்தமும் கொண்ட ஐராவதம் என்ற பெயருள்ளதும், கிழக்கு திசையின் பட்டத்து யானையானதும், பிற திசைகளின் யானைகளால் போற்றப்படுவதுமான தேவலோக யானையின் அம்சமாக விளங்கும் இந்த யானையின் தானத்தால் இறைவன் எனக்கு அமைதியைத் தரட்டும். (கொடிய கேது தோஷம், நாகதோஷம் நீங்க யானையை நன்கு அலங்கரித்துப் பூசித்தபின்பு அதனை வேதமறிந்த பிராமணருக்கு தானம் செய்திட வேண்டும் என்கிறது சாத்திரம்).
விருஷப தானம் (காளைமாடு, வண்டி மாடு): எருது வடிவிலிருந்து உலகில் நீதியை நிலைக்கச் செய்து, மகிழ்ச்சி தந்திடும் தருமதேவனாயும், அஷ்டமூர்த்திகளுக்கும் உறைவிடமாயும் வாகனமாயும், கயிலை மலை போன்று வெண்மை நிறமான பெருங்காளையாயும், நால்வேத வடிவமாயும், சகல தேவர்களுக்கும் விருப்பமானதாயும், இஷ்டப் பயனளிப்பதாயும் உள்ள விருஷபதேவர், இந்த விருஷப தானத்தினால் மகிழ்ந்து எனக்கு நீண்ட ஆயுள், பலம், சவுக்கியம், அமைதியை அளிக்கட்டும். (எருது தானம் செவ்வாய் தோஷத்தையும் போக்கும்). பொன்னாலான எருதுப்பதுமை தானம் மக்களுக்கு ருத்ரலோக பிராப்தியைத் (நற்கதியை) தருவதாகும். வண்டி மாடுகளை வண்டிக்காக ஒன்றாகவோ, இரட்டையாகவோ தானம் அளிக்கலாம். கோயில்களுக்கும் அந்தணர்களுக்கும் பலீவர்தனம் எனும் வண்டிமாடு அல்லாத திமில் எருதுகளை அளிப்பர்.
க்ருஹ தானம் (கட்டிய வீடு, புதுமனைக்கொடை): வேதியரே! அனைத்து வசதிகளோடும் கூடியுள்ள இந்த வீட்டை தாங்கள் தானமாக ஏற்றுக்கொள்வீர். உம்முடைய அருளாசியால் எனக்கு விருப்பமான பயன் கிடைப்பதாகட்டும்.
மஹிஷீ தானம் (எருமைக்கறவை மாடு): இந்திரன் முதலான எட்டு லோக பாலகர்களுக்கும் மங்களம் தருவதும், மகிஷாசுரனின் தாயானதுமான, திவ்ய எருமையின் வடிவமான அதிகம் பால்தரும் பெண் எருமை தானத்தால், அந்த மகிஷீ எனக்கு அனைத்து விருப்பத்தையும் ஈடேற்றித் தரட்டும்.
சுவர்ணபாத்திர தானம் (தங்கப்பாத்திரக் கொடை): ஆயிரக்கணக்கான பிறவிகளில் என்னால் செய்யப்பட்டு சேர்ந்துள்ள எந்த பாதக தோஷங்கள் உண்டோ, அவையனைத்தும் (குற்றம் யாவும்) இந்த தங்கப்பாத்திர தானத்தால் அழிந்துபோகட்டும். எனக்கு இறைவன் மனசாந்தியைத் தந்தருளட்டும். (தூய தங்கதானம் பாவங்களைப்போக்கிப் புனிதனாக்கும்).
ரஜதபாத்திர தானம் (வெள்ளிபாத்திரக் கொடை): களத்திரகாரகனாகிய சுக்கிர பகவானின் உலோகமான வெள்ளியால் செய்யப்பட்ட பாத்திரங்களின் தானத்தால் தகாத பெண் சேர்க்கை, பிறன் மனைவித்தொடர்பு, பிறர் மனையாளைத் தழுவுதல், கூடுதல் முதலிய பெண் பாவங்கள் யாவும் என்றும் எனக்கு இல்லாதவாறு அழிந்துபோகட்டும்.
காம்ஸ்யபாத்திர தானம் (வெங்கலப்பாத்திர தானம்): என்னுடைய விருப்பத்தினால் காம வயப்பட்டு எந்தெந்த பாவங்கள் செய்யப்பட்டனவோ, அவையனைத்தும் இந்த வெங்கலப்பாத்திர தானத்தினால் எப்பொழுதும் இல்லாதவாறு அழிந்துபோகட்டும்.
தாமிரப்பாத்திர தானம் (செப்புப் பாத்திரக் கொடை): பிறரைப் பற்றி கோள்மூட்டியதாலும், புறஞ்சொல்லியதாலும், வதந்தியை ஏற்படுத்தியதாலும், சாப்பிடக்கூடாவற்றை சாப்பிட்டதாலும் ஏற்பட்ட பாவங்களனைத்தும், தாமிரப்பாத்திர தானத்தினால் இல்லாதவாறு அழிந்து போகட்டும்.
தாம்பூலப் பாத்திர தானம் (வெற்றிலை இடித்தல், பாக்கு வெட்டுதலுக்கான பாத்திரம்): பாக்குமரத்தின் கொட்டைப்பாக்குகளால் நிரம்பியதும், வெற்றிலைகளோடும், பச்சைக்கற்பூர ஏலாதிகளுடன் கூடியதும், சுந்தர்வர்கள், அப்ஸர ஸ்த்ரீகளுக்கு விருப்பமான பாக்குகளைத் துண்டுசெய்யும் புனிதக் கருவியோடும், வாய் கொப்புளிக்கும் நீர் நிறைந்தச் சொம்போடும் கூடிய தாம்பூலப் பாத்திரங்களின் தானத்தால் எனக்கு மனக் குறைகள் யாவும் இல்லாது போகட்டும் மன மகிழ்ச்சி, சாந்தி கிட்டட்டும். (வெற்றிலையில் லட்சுமியும், பாக்கில் துர்க்கையும், சுண்ணாம்பில் சரஸ்வதியும் உள்ளதால், தம்பதி இருவரும் தினமும் மதியம் ஒருமுறை மூன்றையும் ஒரு பாத்திரத்திலிட்டுப் பொடித்து வாய்மணக்க தாம்பூலம் தரித்திட வேண்டும் என்பது இல்லறத் தோருக்கான தர்மவிதியாகும். இவ்விதம் தேவைப்படும் என்பதற்காக இந்த தானம் துயர்நீக்குமென்பதாக விதிக்கப்படுகிறது.)
ஹஸ்த வலயபூஷண தானம் (கைவளையல் அல்லது காப்பு அளித்தல்): பொன்னால் செய்யப்பட்டதும், உடல் உருவப்பொலிவு, ஒளி, சுகம் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடியதும், கை மணிக்கட்டில் வளையமாக அணியக்கூடியதுமான ஹஸ்தவளையம் என்னும் காப்புகளான பொன் அணிகலனை தானமாகக் கொடுக்கிறேன். இதனால் இறைவா, எனது உடலை எப்பொழுதும் பொன்தந்து அலங்கரித்திடுவாயாக, உடல் சாந்தியைத் தந்தருள்வீர்.
ஆஸன தானம் (மரத்தினாலான இருக்கை, மனைப் பலகை): யாகத்தற்குரியதான மரவகையில் செய்யப்பட்டதும், பூஜைக்குத் தேவையான பொருளானதும், வழவழப்பானதும், வலுவானதும், அழகானதும், நான்கு கால்களை (பாதங்களை) உடையதும், பதிவுக்கோட்டினால் தாமரைப்பூவின் வேலைப்பாடுள்ளது மான மனைப்பலகையான இருக்கை மகிமை பெற்றுள்ளதால், இந்த ஆசன தானத்தால் இறைவன் எனக்கு அமைதியை அளிக்கட்டும்.