பாற்கடலைக் கடைந்த போது, வாசுகிப் பாம்பின் வாயிலிருந்து வெளியேறிய ஆலகால விஷத்தின் வேகத்தால் கருடன் கருப்பாக மாறிவிட்டது. பின் தன் இயல்பான நிறம் பெற வேண்டி சிவபெருமானை வணங்கியது. கருடனுக்குக் காட்சி தந்த சிவபெருமான், ‘நான் விழுங்கிய விஷமானது பூலோகத்தில் ஒரு நாவல் மரத்தில் கனியாகப்பழுத்திருக்கிறது.
அந்தப்பழம் சம்பூநாதவாவி என்னும் தீர்த்தத்தில் விழுந்து நச்சுத்தன்மை நீங்கும். நீ அந்த தீர்த்தத்தில் நீராடினால் உன் இயல்பான நிறம் பெற்று துன்பம் நீங்கப் பெறுவாய்,” என்று அருளினார். மகிழ்ச்சியடைந்த கருடன் பூலோகம் வந்து அதன்படியே செய்தது. இந்த சம்பவம் நடந்த இடம் விழுப்புரம் அருகில் உள்ள திருநாவலூர் ஆகும். இங்குள்ள தீர்த்தத்தை தற்போது நாவலேஸ்வரர் தீர்த்தம் என்கின்றனர். கருப்பாக இருக்கிறோமே என வருந்துபவர்கள் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, சிவனை வழிபட தாழ்வு மனப்பான்மை நீங்கும். தேவாரம் பாடிய மூவரில் சுந்தரர் பிறந்த தலம் இது.