பதிவு செய்த நாள்
02
ஆக
2018
01:08
ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி பாய்ந்து வளப்படுத்தும் தென்னாட்டு ஊர்களில் எல்லாம் மிகவும் பிரசித்தம். காவிரியின் பிறப்பிடம் கர்நாடகா மாநிலம், தலைக்காவிரி. இந்தத் தலம் கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் உள்ளது. பாக மண்டலாவிலிருந்து தலைக்காவிரி செல்லும் பாதையின் இருபுறமும் அடர்ந்த வனங்கள் பச்சைப்பட்டு போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. மேகங்களின் பனித்திரை, சுற்றிலும் வர்ணனைக்கு அப்பாற்பட்ட தெய்வீகமான இயற்கை சூழல் நம்மைப் பரவசப்படுத்துகிறது. மேலும், இது அகத்திய முனிவர் தவம் செய்து, பிரம்மனை தரிசித்த தலமும் கூட.
காவிரி உருவான வரலாறு: மஹாவிஷ்ணு தனது கைவண்ணத்தால் உருவாக்கிய மகோன்னத தேவிதான் லோபமுத்ரா, மஹாவிஷ்ணு லோபமுத்ராவை பிரம்மனிடம் கொடுக்க, அவரோ, பிரம்மகிரி குன்றத்தில் பிரம்மனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த சுவேர மகரிஷியிடம் கொடுத்தார். அவர் தனது குடிலில் லோபமுத்ராவை வளர்ந்து வந்தார். அச்சமயம், இமயத்தில் இருந்து தெற்கே வந்த அகத்தியர், லோபமுத்ராவை மணக்க விரும்பினார். ‘தன்னைவிட்டு ஒரு நாழிகைக் கூட பிரியக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் லோபமுத்ரா அகத்தியரை மணந்தாள். அகத்தியர் ஒரு சமயம் பிரம்மகிரிக்கு மறுபுற முள்ள கனக நதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால், லோபமுத்ராவை தன் தவ வலிமையால் நீராக மாற்றி தனது கமண்டலத்தில் நிரப்பி வைத்து விட்டுச் சென்றார். அகத்தியர் வர தாமதமனாது. அப்போது விநாயகர் காகமாக மாறி வந்து கமண்டலத்தை தட்டிவிட, லோகத்தை ரட்சிக்கும் லோபமுத்ரா நதியாக, வெளியே பாய்ந்தாள். அந்த இடம்தான் தலைக்காவிரி. இங்குள்ள இரண்டடி சதுர பிரம்மகுண்டிகையில் புனித ஊற்றாக உருவெடுக்கிறாள் காவிரித் தாய்.
இங்கு காவிரி அன்னை ஜல ரூபத்தில் பிரத்யட்சமாக தரிசனம் தருவதால் சிற்பமோ, சிலையோ, கோபுரமோ கிடையாது. இரண்டடி சதுர பிரம்மகுண்டிகையையே அன்னை காவரியின் சன்னிதியாகக் கருதி பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. இந்த குண்டத்தில் உற்பத்தியாகி காவிரி அருகில் உள்ள குளத்தில் விழுகிறது. இந்த குளிர்ந்த நீரில் குளிக்கும்போது துன்பங்களும் கவலைகளும் பறந்தோடுகிறது. பிரம்மகிரிக்குச் செல்ல 375 படிகளை நன்றாக அமைத்துள்ளார்கள். சப்த ரிஷிகளும் தவம் செய்த தபோவனம் இது. இயற்கையின் ரம்மியமும், ஆரோக்கியமான காற்றும் மனதை அமைதியாக்குகிறது. அகத்தியர் வழிபாட்டுக்காகத் தமது தவ வலிமையால் மணலையே அள்ளி சிவலிங்கமாகப் பிடித்து வழிபட்டார். அதுவே இங்குள்ள அகஸ்தீஸ்வர லிங்கம். வெள்ளிக் கவசமணிந்து அருள்பாலிக்கிறார் ஈசன். கணபதிக்குத் தனி சன்னிதியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் துலா ராசியில் பிரவேசிக்கும்போது (அக்டோபர் 17 அல்லது 18 தேதிகளில்) காவிரி தீர்த்தோத்பவமாக, ‘காவேரி சங்கராந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். பண்டிதர்கள் குறிப்பிட்டுத் தரும் அந்த முகூர்த்த நேரத்தில் பிரம்ம குண்டிகையில் காவிரி அன்னை பொங்கி வழிவது காணக் கிடைக்காத அற்புத தரிசனமாகும். தலைக்காவிரியில் பிறப்பெடுத்த காவிரி நதி, பொங்கி வரும் புதுப்புனலாய் ஆர்ப்பாட்டமாக புகுந்த வீடாம் தமிழகத்தில் நுழையும் இடம் ஒகேனக்கல். பளிங்கு போன்ற நீர் அருவியில் ஆரவாரத்துடன் கொட்டும்போது புகைப்போல பரவுகிறது. கன்னட மொழியில், ‘ஹொகே ’ என்றால் ‘புகை ’ என்று பொருள். ஒகேனக்கல்லில் தேனான வாழ்வருளும் தேசநாதீஸ்வரர், காவேரியம்மன் சமேதராகக் காட்சியளிக்கிறார்.
துவாபர யுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. இங்கு பிரம்மாதான் அர்ச்சகர். கருவறையில் கூப்பிய கரங்களுடன் நிற்கும் பிரம்மா, கோயில் தூண் சிற்பத்தில் பூஜை செய்வதைக் காண்கிறோம். தேசநாதீஸ்வரரின் எதிரே யோக நந்தி, பிராகாரத்தில் யோக தட்சிணாமூர்த்தி நந்திமேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காணக்கிடைக்காத கோலமாகும். போரில் வெற்றி பெற்றபின் பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்துள்ள ஐந்து லிங்கங்கள் ஒரே நேர்க்கோட்டில் இங்கு காட்சியளிக்கின்றன. அன்னை காவேரியம்மன் தனிச் சன்னிதியில் காருண்ய பார்வையும், கனிவான வதனமும் கொண்டு காட்சியளிக்கிறார். பயிர்களை செழிக்கச் செய்யும் தாய் பக்தர்களையும் ரட்சிக்கிறாள். மஹாலெட்சுமி தாயார், சிவதுர்கை, நவக்கிரகங்கள், சூரியன், வீரபத்திர் சன்னிதியையும் தரிசித்து அருள் பெறுகிறோம்.
ஆடிப்பெருக்கு (ஆடி 18), பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி நாட்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. வியாச பகவான் கார்த்திகை மாதத்தில் வரும் உத்மான் ஏகாதசி அன்று வனபோஜனம் விழா நடத்தி தேசத்தை ரட்சிக்கும் அம்மையப்பனை ஆராதித்தார். இன்றும் இந்த வனபோஜன விழா இங்கு நடத்தப்படுகிறது. வியாபார அபிவிருத்தி, சந்தான பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை, ராகு-கேது தோஷம் நீங்க சிறப்பு வழிபாடு செய்து பலனடைந்தோர் ஏராளம். கங்கையினும் மேலான காவிரியில் நீராடி காவேரியம்மன் சமேத தேசநாதீஸ்வரரை வணங்கி வளம் பெறுவோம்.
வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை கரைத்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கின் முன் அத்தீர்த்தத்தை வைக்க வேண்டும். அம்மன் படத்துக்கு பூக்கள் தூவி 108 போற்றி சொல்லி வழிபட வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து, புண்ணிய நதிகளை மனதில் தியானித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீர்த்தத்தை கால் மிதி படாமல் செடி, மரத்தில் ஊற்ற வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு குறையொன்றும் வராது.