ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் உருவாக காரணமானவன் வேடன் வில்லாளன். முனிவர் ஒருவரிடம் நாராயண மந்திரத்தை அறிந்த வில்லாளன் தவ வாழ்வில் ஈடுபட்டான். அவனைச் சோதிக்க எண்ணிய பெருமாள் வேங்கைப்புலியாக தோன்றி அவன் மீது பாய முயன்றார். இதைக் கண்ட வேடனின் தம்பியான கண்டன் புலியை தடுத்தான். ஆனால், புலி கண்டனைக் கொன்று விழுங்கியது. ஆனால் அதுவரை தவம் கலையாமல் இருந்த வில்லாளனுக்கு சுயவடிவில் காட்சியளித்த பெருமாள், கண்டனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வில்லாளன் “என் தம்பி உங்களுடன் ஐக்கியமாக என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்; அவனைப் போல என்னையும் விழுங்கியிருக்கலாமே” என்றான். வில்லாளனின் தாய் வில்லியும் இதே கருத்தை தெரிவித்தாள். அவர்களின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்த பெருமாள், மலையளவு பொன்குவியலை வழங்கினார். அதன் பயனாக அவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வடபத்ரசாயி கோயிலைக் கட்டினர். பெரியாழ்வாரும், ஆண்டாளும் வழிபட்ட கோயில் இதுவே.