பாற்கடலில் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருந்தார். அவரது திருவடியில் ஸ்ரீதேவி, பூமிதேவியும் அமர்ந்திருந்தனர். பூமியில் தர்மத்தை நிலைநிறுத்த பல அவதாரங்கள் எடுத்த பெருமாள், அர்ச்சாவதாரமாக (வழிபடத்தக்க சிலையாக) பூமிக்கு வர விரும்பி லட்சுமியை உடன் அழைத்தார். “ராம அவதாரத்தின் போது சீதையாக அவதரித்து, நான் பட்டபாடு போதும் சுவாமி... இப்போது என்னை வேறு எந்த ராவணனிடத்தில் ஒப்படைக்கப் போகிறீரோ” என்று கோபித்தாள் ஸ்ரீதேவி. அதன்பின் பெருமாளின் பார்வை பொறுமை மிக்க பூமிதேவியின் பக்கம் திரும்பியது. மறுப்பு சொல்லாமல் பெருமாளுடன் புறப்பட்டாள். அவளே கோதை ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள். அந்த கோதை காட்டிய பொறுமை என்னும் பாதையில் நடக்க உறுதி கொள்வோம்.